Header Ads



சவுதியில் உயிரிழந்த தாயின், சடலத்திற்காக காத்திருக்கும் மகன்


சவுதிக்கு வேலை வாய்ப்பிற்காக சென்ற நிலையில் மூன்று மாடிக் கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து காயமடைந்து அந்த நாட்டு வைத்தியசாலை ஒன்றில் மூன்றாண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த தாய் ஒருவர் உயிரிழந்து ஒரு மாதமாகியுள்ள போதிலும் சடலத்தை இன்னும் நாட்டுக்கு கொண்டு வர முடியாத நிலையில் இருப்பதாக உயிரிழந்த தாயின் மகன் ஒருவர் கூறியுள்ளார். 

கெக்கிராவ கிதுல்ஹிடியாவ பிரதேசத்தைச் சேர்ந்த நெல்கா திபானி குமாரசிறி என்ற பெண்ணே கடந்த 2011ம் ஆண்டு சவுதிக்கு வேலை வாய்ப்பிற்காக சென்றதாக தெரிய வந்துள்ளது. 

பின்னர் கடந்த 2013ம் ஆண்டு மீண்டும் நாட்டுக்கு திரும்பும் நிலையில் இருந்த போது பெண்ணின் எஜமானால் வேலைக்கான சம்பளத்தை வழங்காது தடுத்து வைக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

இதனையடுத்து பல மாதங்களாக தாயுடன் தொடர்பை ஏற்படுத்த முடியாதிருந்த நிலையில் 2014ம் ஆண்டு தாய் தொடர்பில் கடுமையான சிரமங்களுடன் தேடும் நடவடிக்கையை முன்னெடுத்ததாக உயிரிழந்த பெண்ணின் மகன் கூறியுள்ளார். 

வௌிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டையடுத்து, தாய் மூன்று மாடிக் கட்டிடத்தில் இருந்து விழுந்து வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தமை தெரிய வந்ததாக அவர் கூறினார். 

அன்றிலிருந்து 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை தாயை நாட்டுக்கு அழைத்து வர பிரதேச சபை அரசியல்வாதியில் இருந்து ஜனாதிபதி வரையில் கடிதங்கள் எழுதியதாகவும், உரிய அமைச்சர்களை சந்திக்க முயற்சித்தும் அவர்களையும் சந்திக்க முடியவில்லை என்றும் அவர் கூறினார். 

இவ்வாறான நிலையில் கடந்த நவம்பர் மாதம் 13ம் திகதி தனதி தாய் உயிரிழந்துவிட்டதாக வௌிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் அதிகாரி ஒருவர் தொலைபேசி மூலம் அறியத் தந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார். 

இந்நிலையில் தனது தாயின் உடலை நாட்டுக்கு கொண்டு வர உதவுமாறு கூறி மீண்டும் பிரதேச சபை அரசியல்வாதியில் இருந்து ஜனாதிபதி வரையிலும் அதிகாரிகளுக்கும் கடிதங்கள் எழுதிக் கொண்டு இருப்பதாக அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.