Header Ads



தமிழ் பேசும் மக்கள் முட்டாள்கள், இல்லையென்பது பெப்ரவரியில் தெரியவரும்”

“இது நாங்கள் உயிரை கொடுத்து போராடி உருவாக்கிய அரசாங்கம். எங்கள் மக்கள் வாக்களித்து உருவாக்கிய அரசாங்கம். ஆகவே, இது நமது அரசாங்கம்தான். என்றாலும் அதற்குள் நாம் பலமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், நாம் ஒட்டுமொத்தமாக தொலைந்தோம். எம்முடன் இருப்பவர்களே எம்மை தொலைத்து விடுவார்கள்” என, ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும்  முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

“இந்த உண்மையை,  கொழும்பு, மலையகம், வடக்கு, கிழக்கு பிராந்தியங்கள் என எங்கும் வாழும் நமது மக்கள் மனதில் கொள்ள வேண்டும். தமிழ், முஸ்லிம், இந்து, இஸ்லாம், கத்தோலிக்கம் என்ற இன, மத பிரிவுகளுக்கு அப்பால் தமிழ் மொழி பேசி வாழும் மக்கள் மனதில் கொள்ள வேண்டும்” எனவும் அவர் ​தெரிவித்தார்.

நடைபெற உள்ள உள்ளூராட்சி தேர்தல் குறித்து கூடிய ஜனநாயக மக்கள் முன்னணியின்  அரசியல் குழு கூட்டத்தில் உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் மனோ கணேசன் இதுபற்றி மேலும் கூறியுள்ளதாவது,  

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாங்கள் உருவாகிய ஜனாதிபதி. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாங்கள் உருவாக்கிய பிரதமர். இன்று ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் எவர் எவரோ உரிமை கோரினாலும், இவைதான் அப்பட்டமான உண்மைகள்.

“ஆகவே நாம், நமது அரசாங்கத்துக்குள் பலமாக இருந்துக்கொண்டு, ஜனாதிபதியையும், பிரதமரையும் ஆதரிப்போம். அரசாங்கத்தையும் பாதுகாப்போம். இந்நோக்கிலேயே எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலை நாம் அணுகவேண்டும். இதை எனது பத்தொன்பது வருட தேர்தல் அனுபவத்தில் சொல்கிறேன்.

“கடந்த அரசாங்கத்தை மாற்றும் நம்பிக்கையை மக்கள் மத்தியில் உருவாக்கியது, நாங்களே. 2005ஆம் வருடத்தில்  இருந்து போராட தொடங்கி  2015இல் அந்த மாற்றத்தை கொண்டு வந்தோம். இன்று இருக்கும் வாய்பேச்சு வீரர்கள், பலர் அன்று இருக்கவில்லை. நாம் உயிரை கொடுத்து போராடினோம். 2005ஆம் வருட காலத்திலேயே, என் நண்பர்கள் நடராஜா ரவிராஜையும், லசந்த விக்கிரமதுங்கவையும் நான் இழந்தேன். நானும் மயிரிழையில் தப்பினேன். அப்போதுதான், மாற்றத்துக்கான போராட்டம் ஆரம்பித்தது. ஆகவே, இது நாம் கஷ்டப்பட்டு உருவாக்கிய அரசாங்கம்.

“அரசாங்கத்தை உருவாக்கிய சுமார் மூன்று வருடங்களுக்கு பிறகு இப்போது ஒரு தேர்தல் வருகிறது. இதில் நாம் என்ன செய்ய வேண்டுமென்ற கேள்வி எழுகிறது. முதலில் இது அரசாங்கத்தை  மாற்றும் தேர்தல் அல்ல என்பதையும், நாம் உருவாக்கிய அரசாங்கத்தை பலப்படுத்தும் தேர்தல் என்பதையும் நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். அதாவது அரசாங்கத்துக்குள் இருக்கும் கட்சிகள் தம்மை பலப்படுத்திக்கொள்ளும் தேர்தல்.  

“ஆகவே, நாம் எம் பலத்தை காட்ட வேண்டும். அரசாங்கத்துக்கு உள்ளேயே நாம் பலமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், நாம் கூண்டோடு  தொலைந்தோம். எம்முடன் இருப்பவர்களே எம் தலையில் மிளகாய் அரைத்து எம்மை ஒட்டுமொத்தமாக தொலைத்து விடுவார்கள். எமது அரசாங்கம் என்பதற்காக இங்கே எதுவும் எமக்கு சும்மா கிடைக்காது. அப்படி கேட்டவுடன் தர ஆப்பிரகாம் லிங்கனும், காமராஜரும், மகாத்மா காந்தியும், கெளதம புத்தரும், சேகுவேராவும் இங்கே இல்லை. ஆகவே, எமது அரசியல் பலத்தை உறுதிப்படுத்தினாலேயே எமது அரசாங்கத்துக்கு உள்ளே எமக்கு எதையும் உரிமையுடன் கேட்டு பெறமுடியும்.

“அரசாங்கம் உறுதியளித்துள்ள பத்து இலட்சம் உள்நாட்டு தொழில் வாய்ப்புகளில் எமது பங்கை கொடு என்று கேட்டு பெறலாம். வெளிநாட்டு வேலை  வாய்ப்புகளில் எமது பங்கை கொடு என்று கேட்டு பெறலாம். நாடு முழுக்க கட்டப்போவதாக, அரசாங்கம் உறுதியளித்துள்ள இரண்டு இலட்ச வீட்டு திட்டங்களில் எமது பங்கை கொடு என்று கேட்டு பெறலாம். அரசியல் அமைப்பில் அரசியல் உரிமைகளை பெறலாம். பிரதேச சபைகளை, பிரதேச செயலகங்களை, கிராம சேவையாளர் பிரிவுகளை கொடு என்று கேட்டு பெறலாம்.

“இவைகளை உரிமையுடன் கேட்டு பெற்றுக்கொள்ள எமது அரசாங்கத்துக்குள்ளே நாம் பலமாக இருக்க வேண்டும். அரசியல் பலம் இல்லாவிட்டால், எங்கள் அரசாங்கம் என்று நாம் நாள்தோறும் தீபாவளி கொண்டாடலாம். ஆனால்,  எமக்கு எதுவும் கிடைக்காது. இதை நான் எனது பத்தொன்பது வருட அரசியல் அனுபவத்தில் சொல்கிறேன். இந்த உண்மையை  உரக்க சொல்லும் உரிமை இந்நாட்டில் எவரையும்  எனக்கு இருப்பதாக நம்புகிறேன்.

“ஆகவேதான் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில், சில இடங்களில் தனித்து முற்போக்கு கூட்டணி என்ற முறையில் ஏணி சின்னத்திலும், சில இடங்களில் ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டு சேர்ந்து ஐக்கிய தேசிய முன்னணி என்ற முறையில் யானை சின்னத்திலும், நாம் போட்டியிடுகிறோம்.

“கொழும்பு மாநகர தேர்தல் நாட்டை கலக்கும் தேர்தல். மற்ற எல்லா தேர்தல்களையும்விட, கொழும்பு மாநகரசபை தேர்தல் விசேடமிக்கது. இங்கே எமது பலம், முழு நாட்டிலும் எதிரொலிக்கும் பலம். ஆகவே,  கொழும்பு மாநகரசபை தேர்தலைப்பற்றிய உங்கள் உள்ளக்கிடக்கை எனக்கு தெரியும். இப்போது ஒருசில பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை கட்சிகளின் வேட்பாளர்களாக தம்மை ஆங்காங்கே வேட்பாளர்களாக அறிவித்துக்கொண்டு இருப்பவர்களை பார்க்கும் போது சிரிப்புதான் வருகிறது.

“சொந்த வயிற்றுப்பாட்டு தேவைகளுக்காக சோரம் போனவர்கள், சொந்த வாழக்கையிலேயே இன்னமும் மோசடி ஊழல் செய்கின்றவர்கள், தேர்தல் காலங்களில் பெரும்பான்மை அரசியல்வாதிகளுக்கு போஸ்டர் அச்சடித்து கொடுத்தவர்கள், அவர்களை அழைத்து சென்று களியாட்ட விடுதிகளில் விருந்து வைத்தவர்கள், தமிழ், முஸ்லிம் வர்த்தகர்களிடம் கப்பம் வாங்கியவர்கள்,  ஆள் கடத்தியவர்கள்,  கோட்டாபய ராஜபக்சவுடன் சேர்ந்து தமிழ், முஸ்லிம் மக்களை மிரட்டி அரசியல் செய்தவர்கள், என்ற வரலாற்று பெருமைகளை கொண்டோர் எல்லாம் இன்று  கொழும்பு மாநகரசபை சிறுபான்மை இன வேட்பாளர்களாம்.  இவர்களுக்கு எல்லாம் வாக்களிக்க தலைநகரில் வாழும் தமிழ் பேசும் மக்கள் முட்டாள்கள் இல்லை என்பது பெப்ரவரி மாத தேர்தலில் தெரியவரும்” என்றார்.

1 comment:

  1. Our Muslim leaders have got lot to learn from Mano Ganeasan who has real concern about his electorate working like bee same as Rizard Badiudden. Carry on Mano country needs prople like u .

    ReplyDelete

Powered by Blogger.