Header Ads



முஸ்லிம்கள் தோல்வி கண்டுள்ளனர், எந்த விடயத்திலும் அக்கறை குறைவு - அமீன் வேதனை


புதிய உள்ளூராட்சித் தேர்தல் முறையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் கணிசமாகக் குறையுமாக இருந்தால் இத்தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு முஸ்லிம் சமூகம் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீ லங்காவின் தலைவரும் நவமணிப் பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான என்.எம். அமீன் தெரிவித்தார்.

மாவனெல்லை நியூஸ் வலையமைப்பு ஹிங்குளோயா மஸ்ஜிதுல் ஹுதாவில் எற்பாடு செய்திருந்த புதிய தேர்தல் முறை பற்றிய கருத்தரங்கில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். முஹம்மதும் கலந்து கொண்ட கருத்தரங்கில் என்.எம். அமீன் மேலும் கூறியதாவது,

முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரையில் எந்தவொரு விடயத்திலும் அக்கறை குறைவு. எங்களுக்கு நெருக்கடியான, ஆபத்தான நிலை வந்தால் அப்போது நாங்கள் விழித்து விடுவோம். எனக்கு இதே பள்ளிவாசலில் ஞாபகம் வருகிறது. இந்த நாட்டினுடைய கடும்போக்கு அமைப்பினுடைய செயற்பாடுகள் மும்முரமாக இருந்த போது நான் இந்தப் பள்ளிவாசலில் வந்து பேசினேன். இந்தப் பள்ளிவாசல் நிறைந்திருந்தது. எங்களுக்கு ஏதாவது அடி என்றால் அம்மியும் நகரும் என்றாற் போல் அனைவரும் அந்த இடத்துக் வருவார்கள். ஆனால் இது போன்ற இந்த சமூகத்தோடு தொடர்பான விடயங்களிலே எங்களுக்கு இருக்கின்ற அக்கறை மிகக் குறைவு.

இன்று இந்த சமூகம் இந்தத் தேர்தல் முறையினால் தோல்வி கண்டிருக்கின்றது. ஆகவே அதனை பெப்ரவரி மாதம் நடக்கின்ற தேர்தலில் நீங்கள் காணுவீர்கள். மாவனெல்லை பிரதேச சபைக்கு 07 உறுப்பினர்கள் இருக்கின்றனர். என்னுடைய கணிப்பீட்டின் படி 04, 05 என்று தான் அது வரும்.

நாங்கள் முழு சமூகமும் ஒன்றிணைந்திருகின்றோம். எங்களுடைய அரசியல் தலைமைத்துவம் அதில் தோல்வி கண்டிருக்கின்றது. ஒரு காரணம் இருக்கின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தன்னுடைய தேர்தல் விஞ்ஞாபனத்திலே சொல்லி இருக்கின்றார். இந்தத் தேர்தல் முறையை மாற்றுவேன் என்று. எங்களுடைய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதற்கு எடுத்த தீர்மானம் கடைசிக் கட்டத்தில் தான் எடுக்கப்பட்டது. விஞ்ஞாபனம் தயாரித்து முடிந்திருக்கின்றது. இந்த நாட்டு மக்கள் ஆணை வழங்கி இருக்கிறார்கள். நாங்கள் எப்போதுமே பஸ்ஸை விட்டு விட்டு கை காட்டுகின்ற சமூகமா? என்று கேட்கின்ற அளவுக்கு நாங்கள் தவறி விட்டோம். அங்கே அந்த விஞ்ஞாபனத்தை மாற்றக் கூடிய சக்தியும் எங்களுக்கு இருக்கவில்லை. இந்த நாட்டிலே 21 பாராளுமன்ற உறுப்பினர்களை இறைவன் தந்த போதும், எங்களுடைய இந்தப் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்கின்ற, எங்கள் சமூகத்துக்கு கடந்த பல வருட காலமாக நாங்கள் பாதுகாத்து வந்த இந்த முறையை முழுமையாக எங்களால் பாதுகாக்க முடியாமல் போய்விட்டது. குறைந்த பட்சம் நாங்கள் பல அங்கத்தவர் தொகுதிகளையாவது உருவாக்கி இருக்க வேண்டும். மாவனெல்லையிலே அரநாயக்கவிலே அதனைக் கூட நாங்கள் செய்யவில்லை. அதற்கான குரல் கூட நாங்கள் சரியாக எழுப்பவில்லை. காரணம் என்னவென்றால் எங்களுடைய சமூகத்துக்கு இதுபோன்ற விடயங்களிலே அக்கறை இல்லை.
எங்களுடைய பத்திரிகை நவமணியிலே தொடர்ச்சியாக இந்த தேர்தல் முறை பற்றி வந்த காலத்திலிருந்து எழுதத் தொடங்கினோம். அண்மையில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நடத்திய செய்தியாளர் மாநாட்டிலே அதற்காக எங்களுக்கு பாராட்டையும் தெரிவித்திருந்தார். இலங்கையிலே எந்தவொரு பத்திரிகையும் செய்யாத ஒரு பணியை நவமணி மட்டும் செய்திருக்கின்றது. இதை ஏன் சொல்கிறேன் என்றால், இந்த சமூகம் பத்திரிகைகளை சரியாக வாசிப்பதில்லை. நிறைய கட்டுரைகள் எழுதப்படுகின்றன. இந்த விடயங்கள் வரும்போது எங்களுடைய சமூகத்தைச் சேர்ந்த புத்திஜீவிகள், சிந்தனையாளர்கள், இது தொடர்பான நிறைய கட்டுரைகளை எழுதுவார்கள். ஆனால் எங்களுடைய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பத்திரிகைகளை வாசிப்பதில்லை.

எனக்கு தெரியும் இந்த மாவனெல்லைப் பிரதேசத்தில் 40 ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்களுக்கு மேற்பட்டு இருக்கின்ற இந்த மண்ணிலே குறைந்த அளவிலேயே பத்திரிகைகள் வாசிக்கப்படுகின்றன. இதுதான் இந்த சமூகத்தின் நிலைமை. நாங்கள் நிறைய எழுதினாலும் அவற்றை நாங்கள் சரியாக வாசிப்பதில்லை. வாசிப்பு இருந்தால் இந்த ஆணைக்குழு வருவதற்கு முன்பே நாங்கள் இயங்கி இருக்கலாம். எங்களுடைய வட்டாரங்களைப் பிரிக்கின்ற சந்தர்ப்பத்திலே குரல் கொடுத்திருக்கலாம். அரநாயக்க தொகுதியில் தல்கஸ்பிட்டிய, ஹபலக்காவ என்ற ஒரு வட்டாரம் உள்ளது. அங்கே ஹபலக்காவ என்ற பெரும்பான்மை கிராமத்துடன் முஸ்லிம் கிராமம் இணைந்துள்ளது. கடந்த வியாழக்கிழமை அங்கே நியமனப் பத்திரம் தாக்கல் செய்து முடித்திருக்கிறார்கள். முஸ்லிம் கிராமத்தில் 3 பேர் போட்டியிடுகின்றார்கள். சிங்களக் கிராமத்திலே 2 பேர் போட்டியிடுகின்றனர். சில நேரங்களில் முஸ்லிம் கிராமத்துக்கு ஆசனங்கள் பறி போகும் நிலைமை ஏற்படலாம். அது அடுத்த நான்கு வருடங்களுக்கு கிட்டத்தட்ட ஒவ்வொரு வருடமும் பண்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து கிடைக்கின்ற பணத்தை தல்கஸ்பிட்டிய கிராமம் இழக்கலாம். நாங்கள் அதனைப் பற்றி சிந்திக்கவில்லை. இது எல்லா இடங்களிலும் நடந்திருக்கின்றது. மடவளை கெலி ஓயா, மாவனெல்லை போன்ற இடங்களில் இது நடந்திருக்கின்றது.
இந்த நாட்டிலே 03 தேர்தல் முறைகள் இருக்கின்றது. இந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கு 60:40 மாகாண சபைகளுக்கு 50:50, பாராளுமன்ற தேர்தல் முறை தொடர்ந்து விகிதாசார முறையிலே இருக்குமானால் தல்கஸ்பிடியவின் ஒரு வாக்குக்கும் தெஹியோவிட்ட ஒரு வாக்குக்கும் பெறுமானம் இருக்கின்றது. அது இனி வருமா? இல்லையா? என்று இந்த தேர்தலின் பின்னர் வருகின்ற முடிவுகளின் பிறகு அதற்காக இந்த சமூகம் குரல் கொடுக்கப் போகின்றது என்பதிலேதான் தங்கி இருக்கின்றது.

கடந்த பட்ஜெட் கடைசி நாளன்று பாராளுமன்றத்திலே அமைச்சர் பைஸர் முஸ்தபா சமர்ப்பித்த திருத்தம் பல அங்கத்தவர் தொகுதி முறை இந்த தேர்தலிலே அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. அது பசில் ராஜபக்ஷவுடைய காலத்தில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. பல இடங்களிலே அந்த தொகுதி முறைகள் உருவாக்கப்பட்டன. உண்மையில் அது சிறுபான்மையினரை பாதுகாப்பதற்காகத்தான் உருவாக்கப்பட்டது. ஆனால் 9 ஆம் திகதி பாராளுமன்றத்திலே நிறைவேற்றப்பட்ட திருத்தத்தின் மூலம் அது ஒரே கட்சிக்கு போகும் நிலையை உருவாக்கி இருக்கின்றது. முஸ்லிம் எம்.பி.க்கள் அமைச்சர்கள் 21 பேர் இருந்தார்கள். சிலர் எங்களுடைய பிரதிநிதிகளுக்கு மத்தியில் நாங்கள் இனவாதிகளாக இருக்கக் கூடாது என்று சொல்கிறார்கள். நீங்கள் இனவாதிகளாக இருக்காமல் விட்டால் நாங்கள் இனவாதிகளாக இருக்கத் தேவையில்லை.

ஒரு நாட்டில் சிறுபான்மையினருக்கு இருக்கின்ற பாதுகாப்பு இறைவனுக்கு அடுத்து எங்கள் சமூகத்துடைய பிரதிநிதித்துவம்தான். அதனைப் பாதுகாக்க எங்களுடைய அரசியல் தலைமைத்துவம் தவறிவிட்டது. அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்தார் அதனைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை. ஏதோ ஒரு காரணத்தினால் வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழுத்தம் கொடுத்து எப்படியாவது அந்த பிரேணைக்கு வாக்களியுங்கள் என்று சொன்னார். எங்களுடைய முஸ்லிம் எம்.பி.க்கள் வாக்களிக்காமல் சென்றுவிட்டார்கள். இதை நான் ஏன் சொல்லுகிறேன் என்றால், முஸ்லிம் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தனது கட்சியை விட சமூகத்தின் எதிர்காலம் பற்றி சிந்திக்க வேண்டும். நாளை ஹிங்குளோயாவுக்கு ஒதுக்குகின்ற நிதி கிடைக்காவிட்டால், யாரிடம் நாங்கள் போவது? எங்களுக்கு எல்லா விடயங்களையும் செய்து கொள்ள முடியுமா? எங்களுக்கு முடியாது.

ஒரு காலத்தில் நாங்கள் பட்ட துன்பங்கள் என்னவென்று எங்களுக்குத் தெரியும். ஹெம்மாதகம பிரதேசத்தில் இருக்கின்ற வீதி 100 வருடங்களுக்கு மேல் திருத்தப்படாமல் இருந்தது. இப்போது பிரச்சினை இல்லை. இப்போது உலக நாடுகள் வீதி அபிவிருத்திக்கு பணம் தருகின்றார்கள். எங்களுடைய நாட்டில் வட்டிக்கு எதனையும் செய்வார்கள். எனவே எங்களுடைய நாட்டில் வீதிகள் அபிவிருத்தி செய்யப்படுகின்றது. முன்பு அப்படி இருக்கவில்லை. ஏ. எச். எம். பௌஸி போக்குவரத்து அமைச்சராக வரும் வரை ஹெம்மாதகமவில் இருக்கின்ற 7 கிராமங்களுக்கும் வீதி இருக்கவில்லை. எனக்குத் தெரியும் ஒவ்வொரு கிராமங்களிலும் இருக்கின்ற பள்ளிவாசல்களிலே பணம் திரட்டி 100 அடி க்கு கற்கள் போட்டு பாதைகள் அமைத்த நிலைமைகள்தான் எங்களுக்கு நடந்திருக்கின்றது.
எங்களுக்கு பிரதிநித்துவம் மிகவும் முக்கியம். அது பாராளுமன்றத்தில் மட்டுமல்ல, உள்ளூராட்சி மன்றங்களிலும் வர வேண்டும். ஆகவே இந்த முறையை நாங்கள் பாதுகாக்க வேண்டி இருக்கின்றது. இந்த வாக்களிப்புக்கு பிறகு என்ன நடக்கப் போகின்றது என்பதை பார்க்க வேண்டியுள்ளது. கடந்த பிரேத சபையில் மாவனெல்லையில் 7 பேர் இருந்தார்கள். எதிர்காலத்தில் 4 அல்லது 3 பேரே தெரிவாகலாம். முஸ்லிம் வட்டாரங்களில் தெரிவு செய்யப்படுவார்கள். இங்கே எங்களுக்கு இருக்கின்ற பிரச்சினை மிகத் திறமையான, ஆளுமை மிக்கவர்களை நாங்கள் தெரிவு செய்யத் தவறினால் மாவனெல்லைப் பிரதேச சபையிலே எங்களுடைய பங்கைப் பெறுவது மிகவும் கஷ்டமாகும்.

இந்த நாட்டிலே உருவாகி இருக்கின்ற எங்களை வெறுப்போடு பார்க்கின்ற கலாசாரத்துக்கு மத்தியில் நாங்கள் எப்படி வெற்றி கொள்ளப் போகின்றோம் என்பதில்தான் இருக்கின்றது. நாங்கள் ஒரு பஸ்ஸைத் தவறி இருக்கின்றோம். இப்போது மாகாண சபைகளுக்கு எல்லை நிர்ணயம் வைக்கப்படுகின்றது. முஸ்லிம் இயக்கங்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு பிரேணையை முன்வைத்திருக்கின்றோம். 222 தொகுதிகள் மாகாண சபைக்கு வட்டாரங்கள் வர இருக்கின்றன. 22 வட்டாரங்களை எங்களுக்குக்காக பிரித்துத்தருமாறு முஸ்லிம் அமைப்புக்கள் எல்லாம் கூடி ஆராய்ந்து பிரேரணையை முன்வைத்திருக்கின்றோம். அது எவ்வளவு தூரம் வெற்றி கொள்ளும் என்பது அந்த எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தீர்மானத்தில்தான் இருக்கின்றது. சில நேரம் பாராளுமன்ற முறையிலும் மாற்றங்கள் வரலாம்.

சில நேரம் மாவனெல்லை ஒரு தொகுதியாக வரலாம். மாகாணசபையைப் பொறுத்தவரையில் கேகாலை மாவட்டத்திலே மாவனெல்லையை மையமாக வைத்து பல அங்கத்தவர் தொகுதிக்கு நாங்கள் பிரேரித்திருக்கின்றோம். (சில மாவட்டமான) இரத்தினபுரியில் அப்படி செய்ய முடியாது. கண்டி மாவட்டத்திலும் 02 பிரதிநிதித்துவத்தைப் பெறக் கூடிய உடுநுவரவை மையமாகக் கொண்டு, அக்குறணையை மையமாகக்கொண்டு நாங்கள் பிரேரித்திருக்கின்றோம்.

புத்திஜீவிகள், பள்ளிவாசல் சம்மேளனங்கள் இந்த விடயங்களில் விழிப்பாக இருக்க வேண்டும். போன பஸ்ஸுக்கு கையைக் காட்டும் நிலைமையில் தான் இந்த சமூகம் இருக்கின்றது. அதனால்தான் தேர்தல் முறைகளிலே பல இழப்புக்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கின்றது.

இது சாதாரண விடயமல்ல. அடி மட்ட அபிவிருத்திதான் இன்று பிரதானமாகத் தேவைப்படுகின்றது. நிதி ஒதுக்கீடுகள் எல்லாம் அந்த மட்டத்தில்தான் செய்யப்படுகின்றது. ஆகவே நாங்கள் கட்சி ரீதியாக பிளவு பட்டிருக்கின்றோம். அந்த பிளவுகள் ஹிங்குளோயாவைப் பொறுத்தவரையில் பெரும்பான்மை முஸ்லிம் வட்டாரமாக இருப்பதன் காரணமாக சில நேரம் எந்த கட்சியில் கேட்டாலும் யாரோ ஒரு முஸ்லிம் வரலாம். ஆனால் பெரும்பான்மையினுடைய பலம் இருக்கின்ற பிரதேசங்களிலே எங்களுடைய சமூகத்துக்கு பெரும் சிக்கல் வரப்போகின்றது.

இந்த தேர்தல் முறையில் இப்படியான பல பிரச்சினைகள் இருக்கின்றன. மாகாண சபையைப் பொறுத்தவரையிலும் அதே பிரச்சினைகள் இருக்கின்றன. மாகாண சபையில் பிரதிநிதித்துவம் இழப்பது என்பது பெரும் பாதிப்பு. உள்ளூராட்சி மன்றங்கள் என்றால் சின்ன வட்டாரம் என்று கூறலாம். மாகாண சபைகள் என்பதில் பெரும் பிரச்சினைகள் வரலாம். அதிலும் இன்றும் நாங்கள் வட்டாரங்களைப் பிரிப்பதில் இருக்கின்றோம். ஆனால் அந்த வாக்கெடுப்பில் கூட எங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் தோல்வியைத் தழுவிக் கொண்டார்கள்.

இவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய தேவை இந்த சமூகத்துக்கு இருக்கின்றது. இந்த 21 பேருக்கும் அழுத்தம் கொடுக்க வேண்டிய அமைப்புககள் உருவாக வேண்டும். தேர்தலைக் கூட அதற்கு ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்த வேண்டும். அநேக இடங்களில் அப்படியான சூழ்நிலை உருவாகி இருக்கின்றது.

எங்களுடைய பிரதிநிதித்துவத்தைப் பாதுக்காப்பதற்கு எந்த வழியைச் செய்ய வேண்டும். தேர்தல் முடிவுக்குப் பிறகு நாங்கள் பலமான கருத்தை, இந்த தேர்தல் முறையிலே செய்ய வேண்டிய மாற்றங்கள் பற்றி சொல்ல வேண்டும். நாங்கள் நல்லாட்சி அரசாங்கத்தை பதவிக்கு கொண்டு வருவதற்காக எந்தவிதமான பிரதியுபகாரமும் எதிர்பாராது ஆதரவளித்த சமுதாயம்.
40 வருடகாலம் வாக்குச் சாவடிக்குச் செல்லாத எங்களுடைய சமூகத்தைச் சார்ந்தவர்கள் வாக்களித்து பதவிக்குக் கொண்டு வந்த இந்த அரசாங்கம். துரதிஷ்டவசமாக எங்களை கருவேப்பிலைக்குச் சமனாகத்தான் பயன்படுத்துகிறார்கள். எங்களுடைய அபிலாஷைகளை சரியாக பெற்றுக் கொள்ளவில்லை. ஓரளவு படிப்பு சமூகத்துக்கு ஏற்பட்டிருக்கின்றது. மாகாண சபைத் தேர்தலிலே தெரிவாகும் பிரதிநிதித்துவத்துடைய பலம் பிரேரணைகளை முன்வைத்திருக்கின்றார்கள். அதற்கான சரியான ஓர் அழுத்தத்தை நாங்கள் கொடுக்க வேண்டும். கொடுத்தால்தான் இந்த எல்லை நிர்ணயத்தில் கூட எங்களுடைய பங்கைப் பெற்றுக் கொள்ளலாம். இல்லாவிட்டால் அங்கேயும் தோல்வி கண்டவர்களாகவே இருப்போம்.

ஆனால் இந்த தேர்தல் முறையிலே இன்னொரு நன்மையும் இருக்கின்றது. இவ்வளவு காலமும் தனி முஸ்லிம்களுக்கு வாக்களித்த நாம் எங்களுடைய தொகுதி அமைப்பாளரை நெருங்கி செயற்படக் கூடிய வாய்ப்பு இந்த தேர்தல் முறையிலே இருக்கின்றது. அந்த ஒரு சாதகமான வாய்ப்பு இருக்கின்றது.

எல்லா இடங்களிலும் எங்களுக்கான எதிர்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. நாங்கள் தனி வழியிலே செல்ல முற்படுகின்ற சமுதாயம் என்ற கதையை கட்டி இருக்கின்றார்கள். நாங்கள் சந்திக்கின்ற இடமெல்லாம் உங்கள் சமுதாயத்துக்கு தேசிய சிந்தனை இல்லை. உங்கள் சமூகம் தனித்துப் போகின்றது. நீங்கள் எங்கோ ஒரு நாட்டைப் பின்பற்றிப் போகின்றீர்கள். உங்களுடைய உடை, நடை, பாவனை எல்லாம் அப்படி இருக்கின்றது. என்ற குற்றச்சாட்டு எங்கள் சமூகத்துக்கு எழுப்பப்படுகின்றது.

எனவே இந்த தேர்தலை ஒரு பரீச்சார்த்த தேர்தலாக நாங்கள் பார்ப்போம். எப்படி எங்களை பெரும்பான்மை மக்கள் இனங்காண்கின்றார்கள் என்பதைப் பார்ப்போம்.

அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கு இந்த தேர்தல் முறையை கொண்டு வருவதாக இருந்தால் நாங்கள் பலத்த எதிர்ப்பை காட்ட வேண்டி இருக்கின்றது. அப்படி எதிர்ப்பைக் காட்டத்தவறினால் 21 ஆக இருக்கின்ற எங்களுடைய பாராளுமன்ற சமூகம் 10 அல்லது 8 ஆகக் குறையலாம். அது எங்களுடைய சமூகத்துக்கு எதிர்காலத்திலே மிகப் பாதகமாக அமையலாம். எங்களது சமூகத்துக்கு எதிரான பல சட்டங்களை கொண்டு வருவதற்குரிய சூழல் உருவாகலாம். அதனைத்தான் எதிர்பார்க்கின்றார்கள். இன்று அனுபவித்து வருகின்ற எங்களுடைய மூதாதையர்கள் பெற்ற சட்டங்கள் கூட பறிக்கப்படலாம்.

ஆகவே எங்களுடைய ஊர்களின் ஒற்றுமைகள் பிளவு படாமல் இந்த தேர்தலை வெற்றிகொள்வதற்கு பள்ளிவாசல் சம்மேளனங்கள் அக்கறை காட்ட வேண்டும்.

2 comments:

  1. Well said Ameen Nana.
    Politics is very important for minority community.but disunity is a big issue

    ReplyDelete
  2. ஆணாயினும், பெண்ணாயினும் முஃமினாக இருந்து யார் (சன்மார்க்கத்திற்கு இணக்கமான) நற் செயல்களைச் செய்தாலும், நிச்சயமாக நாம் அவர்களை (இவ்வுலகில்) மணமிக்க தூய வாழ்க்கையில் வாழச் செய்வோம்; இன்னும் (மறுமையில்) அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம்.
    (அல்குர்ஆன் : 16:97)
    www.tamililquran.com

    ReplyDelete

Powered by Blogger.