Header Ads



ஞானசாரரின் வழக்குகளை வாபஸ் பெற்றிருந்தால், றிஷாத் புனிதராகியிருப்பார்

(ஹபீல் எம்,சுஹைர்)

கடந்த 26.12.2017ம் திகதி கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வைத்து, ஞானசார தேரர்  அமைச்சர் றிஷாதை மிகக் கடுமையான பாணியில் விமர்சித்துள்ளார். அவ் விமர்சனத்தின் அடிப்படை வில்பத்து காணி தொடர்பானதாகவே அமைந்திருந்தது. வில்பத்து காணி தொடர்பாக அவர் மீது முன் வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும், அவர் மக்கள் சேவையை நோக்காக கொண்டு தனது தலையில் போட்டுக் கொண்டவை என்பது எந்தவித சந்தேகமுமில்லை. ஏனையவர்களை போன்று அவரும் அமைதியாக இனவாதிகளையும் அரவணைத்துச் சென்றிருந்தால், அவருக்கு இந் நிலை வந்திருக்காது. ஞானசார தேரரின் வாயில் அடிக்கடி வரும் நாமல் அமைச்சர் றிஷாதினுடையதே என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. 

அண்மைக் காலமாக ஞானசார தேரருக்கும் ஒரு முஸ்லிம் குழுவினருக்கும் இடையில் சமரச பேச்சுவார்த்தை  இடம்பெற்றிருந்தது. இந்த பேச்சுவார்த்தை காலத்தில் அமைதியை கடைப்பிடித்த ஞானசார தேரர் மீண்டும் இனவாதத்தை கையில் எடுத்துள்ளார். இந்த பேச்சு வார்த்தையின் அடிப்படையில்  ஞானசார தேரர் மீதான வழக்குகளை வாபஸ் பெறும் விடயம் அமைந்திருந்தது. இதற்கு அமைச்சர் றிஷாத், ஞானசார தேரர் மீது போட்டிருந்த வழக்குகள் பெரும் தடையாக இருந்தன. அமைச்சர் றிஷாத் தரப்பு தகவல்களின் படி, அவர் வழக்குகளை வாபஸ் பெறுவதில்  சிறிதேனும் விரும்பம் கொண்டிருக்கவில்லை என கூறப்படுகிறது. முஸ்லிம்கள், தங்களது உயிருக்கும் மேலாக மதிக்கத்தக்க அல்லாஹ்வையும் புனித குர்ஆனையும் அவமதித்த ஒருவரை எவ்வாறு தப்பிக்க அனுமதிக்க முடியும்? 

ஏற்கனவே இனவாதிகளின் சொல் அம்புகளால் பலமாக தாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் அமைச்சர் றிஷாதுக்கு, இச் செயல் பாரிய விளைவை ஏற்படுத்தும் என்பது நன்றாகவே தெரியும். இதனையெல்லாம் அல்லாஹ்வின் மீது உண்மையாக அன்பு கொண்ட ஒருவருக்கு தாக்குபிடிப்பதென்பது பெரிய விடயமல்ல. அமைச்சர் றிஷாத்  சிறு வயதிலிருந்து இறைபக்தியோடு வளர்க்கப்பட்ட ஒருவர்.  ஞானசார தேரரும் சொல்லி வைத்தாப்போல், தனது இனவாத பிரச்சாரத்தை அமைச்சர் றிஷாதின் நாமத்தில் இருந்து ஆரம்பித்துள்ளார். இதிலிருந்து முஸ்லிம் சமூகம் தெளிவான ஒரு விடயத்தை அறிந்துகொள்ளலாம். அது தான் “ஞானசார தேரரின் வழக்குகளை வாபஸ் பெற்றிருந்தால், அமைச்சர் றிஷாத் ஞானசார தேரருக்கு புனிதராகியிருப்பார் ”

இந்த இனவாத தாக்குதல், அல்லாஹ் மீதும், முஸ்லிம் சமூகம் மீதும் அமைச்சர் றிஷாத் வைத்துள்ள அன்பினால் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்துமில்லை. அதனால் தான் என்னவோ, அல்லாஹ் அகில இலங்கை மக்கள் காங்கிரசை பெரும் வளர்ச்சியுறச் செய்து, அமைச்சர் றிஷாதை ஒரு தலைவனாக மாற்றிக்கொண்டிருக்கிறான். எது எவ்வாறு இருப்பினும், ஏனையோர்களைப் போன்று இனவாதிகளுக்கு அஞ்சாது, எமக்காக பல சவால்களை எதிர்கொள்ளும் அமைச்சர் றிஷாதை பலம் படுத்துவது இலங்கை முஸ்லிம்கள் ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும்.

No comments

Powered by Blogger.