Header Ads



ஜெருசலேம் விவகாரம், அமெரிக்காவுக்கு எதிரான வரைவு தீர்மானம் ஐ.நா.வில் தாக்கல்

ஜேருசலேம் நகரை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முடிவுக்கு எதிரான வரைவு தீர்மானம், ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் செவ்வாய்க்கிழமை (டிச. 19) வாக்கெடுப்புக்கு வருகிறது.

சர்ச்சைக்குரிய ஜெருசலேம் நகரை, இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கவிருப்பதாகவும், தற்போது டெல்-அவிவ் நகரிலுள்ள இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதரகத்தை ஜெருசலேம் நகருக்கு மாற்றவிருப்பதாகவும் அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த மாதம் 6-ஆம் தேதி அறிவித்தார்.

இதற்கு உலகம் முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது. பல்வேறு நாடுகளில் இந்த முடிவுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இஸ்ரேல் - பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளுமே உரிமை கொண்டாடி வரும் ஜெருசலேம் நகரை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரிப்பது, பாலஸ்தீனப் பிரச்னையை மேலும் சிக்கலாக்கும் என்று சிலர் எச்சரித்து வருகின்றனர்.

அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிழக்கு ஜெருசலேமை பாலஸ்தீனத் தலைநகராக உலக நாடுகள் அறிவிக்க வேண்டும் என்று அரபு நாடுகளின் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், ஜெருசலேம் குறித்த டொனால்ட் டிரம்ப்பின் முடிவை நிராகரிப்பதற்கான தீர்மானம் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று எகிப்து நாடு திங்கள்கிழமை கோரியது.

இதையடுத்து, இதுதொடர்பான வரைவுத் தீர்மானம் பாதுகாப்புக் கவுன்சிலில் செவ்வாய்க்கிழமை (டிச. 19) வாக்கெடுப்புக்கு விடப்படும் என ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனினும், அந்தத் தீர்மானம் பெரும்பாலான உறுப்பு நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டாலும், தனது "வீட்டோ' அதிகாரத்தைப் பயன்படுத்தி அமெரிக்கா அந்தத் தீர்மானத்தை ரத்து செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது தயாரிக்கப்பட்டுள்ள வரைவுத் தீர்மானத்தில், ஜெருசலேம் விவகாரத்துக்கு இஸ்ரேல்-பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளும் மட்டுமே பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் எனவும், அந்த நகரம் குறித்து அண்மையில் "சில நாடுகள்' எடுத்துள்ள முடிவுகளை ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் நிராகரிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

3 comments:

  1. Arabs are always jokers

    ReplyDelete
  2. this is a big plan same things they plan after world war in the vote system they will win, this is magic system

    ReplyDelete

Powered by Blogger.