Header Ads



ஓரங்கட்டப்படும் லசித் மலிங்க, ஓய்வு பெறுவாரா..?

இலங்கை கிரிக்கெட் அணியின் சிறந்த வேகப் பந்து வீச்சாளரான லசித் மலிங்கவின் கிரிக்கெட் வாழ்க்கை அஸ்தமித்து வருவதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
மிகவும் எதிர்பார்க்கப் பட்ட இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரிலும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் டி/டுவெண்டி போட்டிகளிலும் லசித் மலிங்க இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட அவரின் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமே கிடைத்துள்ளது.
வித்தியாசமான பாணியில் பந்து வீசி துடுப்பாட்ட வீரர்களை அச்சுறுத்தும் அவர் சுமார் இரண்டு வருட காலமாக அடிக்கடி காயமடைவதாலும், அவரின் பந்துவீச்சில் முன்னைய வேகமும் துல்லியமும் இல்லாமையினாலும் அணியில் இடம்பெறவில்லை. ஆனால் இவ்வருட ஆரம்பத்தில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களைக் கொண்ட இங்கிலாந்தில் நடைபெற்ற சம்பியன் கிண்ணத் தொடரின் போது இலங்கை அணிக்கு அழைக்கப்பட்டிருந்தார். இத் தொடரிலும் பந்துவீச்சிலும், களத்தடுப்பிலும் இலங்கை கிரிக்கெட்டும், இலங்கை தேர்வாளர்களும் எதிர்பார்த்த சேவையை அவரால் வழங்க முடியாமல் தடுமாறினார்.
மீண்டும் இவர் திறமை மீது நம்பிக்கை வைத்த இலங்கை தெரிவுக்குழு இலங்கையில் நடைபெற்ற சிம்பாப்வே, இந்தியாவுடனான தொடர்களுக்கு தெரிவு செய்யப்பட்டார். ஆனால் இத்தொடர்களில் கூட அவரால் பிரகாசிக்க முடியவில்லை. 5 போட்டிகள் கொண்ட இந்தியத் தொடரில் 39 ஓவர்கள் பந்து வீசி 243 ஓட்டங்களை வழங்கி மூன்று விக்கெட்டுகளை மாத்திரமே வீழ்த்தியிருந்தார். இலங்கை கிரிக்கெட்டும், தேர்வுக்குழுவும் கடந்த பல தொடர்களில் இவருக்கு தொடர்ந்து வாய்ப்பளித்தது. ஆனால் இவரால் விக்கெட்களை கைப்பற்ற முடியாவிட்டாலும் வாரியிறைக்கும் ஓட்டங்களையாவது கட்டுப்படுத்தும் வகையில் பந்து வீசியிருந்தால் கூட பரவாயில்லை. இப்படியான ஒருவரை எப்படி அணிக்கு தெரிவு செய்வது என்று தேர்வாளர்கள் தற்போது கேள்வி எழுப்புகின்றனர். மேலும் ஒருநாள் போட்டிகளில் 10 ஓவர்கள் பந்து வீச வேண்டும் ஆனால் தற்போதைய நிலையில் அவரால் தொடர்ந்து பந்து வீசக் கூடிய உடல் தகுதியில் அவர் இல்லை.
இந்தியாவுடனான இலங்கையில் நடைபெற்ற தொடரின் போது இந்திய அணியின் ஆரம்ப வீரர் ஷிகர் தவான் லசித் மலிங்க பற்றிக் கூறுகையில்:- அவரின் பந்து வீச்சுகளில் முன்னைய, வேகமும் துல்லியமும் இல்லை. அதற்கு அவரின் வயதும் ஒரு காரணம். எனவே அவரிடமிருந்து முன்னைய திறமையை எதிர்பார்க்க முடியாது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடம் இந்தியாவில் நடைபெற்ற ஐ. பி. எல். தொடரில் இவர் பங்குபற்றினாலும் கௌரவ வீரராகத்தான் அங்கு சென்றார். விளையாடும் பதினொருவர் அணியில் மும்பை நிர்வாகம் மலிங்கவை சேர்த்துக் கொள்ளவில்லை. ஐ. பி. எல். போட்டிகளில் விளையாடும் எண்ணத்தில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து விரைவாகவே ஓய்வுபெற்ற லசித் மலிங்க அவர் நம்பியிருந்த மும்மை அணியே கடந்த வருடத்துடன் அவருக்கு ஓய்வு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.


2004ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான லசித் மலிங்க தனது யோக்கர் பந்து வீச்சினால் பல சாதனைகளுக்குச் சொந்தக்காரராகத் திகழ்கிறார். வேகப்பந்து விச்சாளர்களுக்கே உரித்தான ஆக்ரோஷம். வேகம் போன்றவற்றால் உலகின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர்களுக்கெல்லாம் அச்சுறுத்தலாக விளங்கினார். மேலும் அவரின் பந்து வீச்சுப் பாணியானது வேறெந்த வேகப்பந்து வீச்சாளர்களை விடவும் வித்தியாசமாகவே இருந்தது. இவரின் இப்புதுவிதப் பாணியானது துடுப்பாட்ட வீரர்கள் இவரின் பந்து வீச்சை இனங்காணுவதில் சிரமப்பட்டனர். இவரின் யோக்கர். பௌன்சர் பந்து வீச்சு போன்றவை கடைநிலைதுடுப்பாட்ட வீரர்களுக்கு மட்டுமல்ல ஆரம்ப, நடுவரிசைத் துடுப்பாட்ட வீரர்களுக்கும் அச்சுறுத்தலாகவே இருந்தது.
பொதுவாக வேகப்பந்து விச்சாளர் அடிக்கடி காயமடைவது வழக்கம். எனவே லசித் மலிங்கவும் அடிக்கடி காயமடைந்து அவதிப்பட்டார். இதனால் அவர் விரைவாகவே 2010 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்று சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் டி/டுவெண்டி போடடிகளிலும் கூடிய கவனம் செலுத்தினார். பங்களாதேஷில் நடைபெற்ற டி/டுவெண்டி உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை அணி கிண்ணம்வெல்ல இவரின் பந்துவீச்சே முக்கிய காரணமாய் அமைந்து. இப்போட்டிககு தற்காலிகத் தலைவராகவும் இவரே செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது. அதன் பின் சிறிது காலம் டி/டுவெண்டி அணியின் தலைவராகச் செயற்பட்டார்.
அவர் தென்னாபிரிக்காவில் 2007ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் அவ்வணிக்கெதிரான போட்டியொன்றில் இலங்கை அணி தோல்யுற்றாலும் அப்போட்டியில் லசித் மலிங்கவின் பந்து வீச்சு அபாரமாக இருந்தது. ஒரே ஓவரில் நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றி அறிய சாதனையொன்றை படைத்துள்ளார். இது 40 வருடகால ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் யாராலும் நிகழ்த்தியிராத சாதனையாகும். சர்வதேச கிரிக்கெட்டில் அதிகமுறை ஹெட்ரிக் சாதனையையும் இவரே படைத்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் பெரிதாக சாதிக்காத மலிங்க 30 போட்டிகளில் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்
இவர் இதுவரை 204 ஒருநாள் போட்டிகளில் 301 விக்கெட்டுகளைக் கைப்பற்றி மூவகைப் போட்டிகளிலும் இலங்கை சார்பாக அதிக விக்கெட் கைப்பற்றியோர் வரிசையில் 4வது இடத்தில் உள்ளார்.
68 சர்வதேச டி/டுவெண்டி போட்டிகளில் விளையாடியுள்ள லசித் 90 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இவ்வாறு சர்வதேச கிரிகெட்டில் மட்டுமல்ல. இந்தியன் பிரிமியர் லீக், அவுஸ்திரேலிய பிக் பாஸ் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி அவ்வணிகளின் வெற்றிகளுக்கு முக்கிய பங்காற்றியிருந்த லசித் மலிங்கவின் திறமைகளை அண்மைக்காலமாக ஒருநாள், மற்றும் டி/டுவெண்டி போட்டிகளில் காணக்கிடைக்கவில்லை.
34 வயதாகும் லலித் மலிங்கவை இலங்கை கிரிக்கெட் தற்போது ஓரம் கட்டுகிறதா? அண்மையில் ஆரம்பமான இந்திய அணியுடனான ஒருநாள் போட்டியிலும் அவர் இடம்பெறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தாலும் அவர்களுக்கு அதிலும் ஏமாற்றமே. லசித் மலிங்க தன் உடல் தகுதியை நிரூபிக்கும் வகையில் அண்மைக்காலமாக முதல்தரப் போடடிகளிலும் என். சி. சி. அணிக்காக விளையாடி பந்து வீசியிருந்தார். என்றாலும் இலங்கை கிரிக்கெட் அவரைக் கண்டுகொள்ளவேயில்லை. கடந்தவாரம் இந்திய அணியுடன் ஆரம்பமான டி/டுவெண்டி போட்டியிலும் அவர் தேர்வு செய்யப்படவில்லை. மேலும் அடுத்த வருட ஆரம்பத்தில் சிம்பாப்வேயில் நடைபெறும் முக்கோணத் தொடருக்காவது தன்னை தெரிவு செய்வார்கள் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறாரா லசித் மலிங்க?

எம்.எஸ்.எம். ஹில்மி 

No comments

Powered by Blogger.