Header Ads



நல்ல சம்பளம் பெற்றும், ரயில் ஊழியர்களின் போராட்டம் அநாகரீகமானது

“ரயில் தொழிற்சங்க ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் நியாயமற்றது. இந்த நிலைமை தொடருமானால், பணி நீக்கப்படுவதைத் தவிர வேறு வழியில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.  

நாடாளுமன்றத்தில் இன்று (11) உரையாற்றிய போக்குவரத்து, சிவில் விமான சேவைகள் பிரதியமைச்சர் அசோக அபேசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள, ரயில் சேவைகள் மற்றும் புகையிரத சேவைகள் திணைக்களத்தின் அனைத்துச் சேவைகளையும் அத்தியாவசியத் தேவைகளாகப் பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி, நாடாளுமன்றுக்கு நேற்று ஆற்றுப்படுத்தப்பட்டதுடன் அது தொடர்பில் இரு தரப்பினராலும் காரசாரமான விவாதங்கள் இடம்பெற்றன.   

இவற்றுக்குப் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதியமைச்சர் அசோக அபேசிங்க பதிலளித்தார்.  

அவர் தனதுரையில் குறிப்பிடுகையில், “புகையிரத தொழிற்சங்கங்களின் தொழிற்சங்க நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக நான் எனது கவலையை வெளிப்படுத்துகிறேன். புகையிரத தொழிற்சங்கங்கள் நியாயமற்ற கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளன. எனினும் அவற்றைப் பேச்சுவார்த்தையின் மூலமாக தீர்ப்பதாக நாம் உறுதியளித்ததுடன் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடா வண்ணம் இணக்கப்பாட்டுக்கும் வந்தோம்” என்றார்.  

‘‘ஜனாதிபதியின் செயலாளருடனான பேச்சுவாரத்தைக்கு நான் சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொடுத்தேன். அன்றைய தினம் முற்பகல் 11 மணியிலிருந்து பிற்பகல் 3.30 மணிவரை கலந்துரையாடல் நடைபெற்றது. இதன்போது இரு தரப்பினரும் இணக்கப்பாட்டுக்கு வந்தோம். தொழிற்சங்க நடவடிக்கையை உடன் நிறுத்துவதாகவும் போக்குவரத்து அமைச்சின் செயலாளருக்கும் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் செயலாளருக்கும் இடையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் கடந்த 8 ஆம் திகதி கையெப்பமிடப்பட்டுள்ளது” என்றும் சுட்டிக்காட்டினார்.   

“அந்த இணக்கப்பாட்டுக் கடிதத்தை நான் சபையில் சமர்ப்பிக்கிறேன். அவ்வாறு கையொப்பமிட்டுவிட்டு வெளியில் வந்த பிறகு மீண்டும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தார்கள். இதுபோல மற்றுமொரு சந்தர்ப்பத்திலும் இவ்வாறே இடம்பெற்றது” என்றும் சுட்டிக்காட்டினார்.   

“அரசாங்கம் என்ற வகையில் மக்கள் நலன்சார்ந்த தீர்மானங்களையே நாம் மேற்கொள்கிறோம். இன்று (நேற்று) ஒரு தொழிற்சங்கத்தினர் பணிக்குத் திரும்பியுள்ளனர். இன்றைய தினம் (நேற்று) நாம் 20 ரயில்களை சேவையில் ஈடுபடுத்தியுள்ளோம். இன்று(நேற்று) மாலைவேளையில் 50 ரயில்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கான கலந்துரையாடல்கள் திணைக்களத்தில் இடம்பெற்றுவருகின்றன” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.  

“ரயில் சேவை அத்தியாவசியமாக்க ப்பட்டுள்ளதன் பிரகாரம் விடுமுறையில் உள்ளவர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும். எனினும் அவ்வாறு திரும்பாதவர்களுக்கு பணியை இடைநிறுத்தும் கடிதத்தை உடனடியாக அனுப்ப வேண்டாமென நான் பணிப்புரை விடுத்துள்ளேன். எவ்வாறெனினும் இந்த நிலை தொடர்ந்தும் நீடிக்குமானால் எமக்கு அந்தத் தீர்மானத்தை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை” என்றார்.  

ரயில் ஊழியர்கள் நல்ல சம்பளத்தைப் பெறுகிறார்கள். ரயில் சாரதியொருவர் 8 மணித்தியாலங்கள் தொழில் புரிகிறார். அதற்குப் பிறகு 9 மணித்தியாலங்கள் அவர் ஓய்வு எடுக்கிறார். ஓய்வு எடுக்கும் ஒவ்வொரு மணித்தியாலத்துக்கும் ஒன்றரை மணிநேர கொடுப்பனவு அவருக்கு மேலதிகமாக வழங்கப்படுகிறது. மாதாந்தம் 600 மணித்தியாலங்களுக்கான கொடுப்பனவை அவர்கள் பெற்றுக்கொள்கிறார்கள்” என்றும் சுட்டிக்காட்டினார்.  

“சாரதியொருவர் ஒரு இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய், ஒரு இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் என மேலதிகக் கொடுப்பனவைப் பெறுகிறார். இவர்கள் தான் இன்று தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இது எந்தளவுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத செயற்பாடு? இப்படி எந்த நாட்டிலும் இடம்பெறுவதில்லை” எனத் தெரிவித்தார்.  

ஜனாதிபதி மைத்திரிபால சிறிவேனவின் உத்தரவுக்கு அமைய ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோவால் வெளியிடப்பட்டுள்ள, புகையிரத சேவைகள் மற்றும் புகையிரத சேவைகள் திணைக்களத்தின் அனைத்துச் சேவைகளையும் அத்தியாவசியத் தேவைகளாகப் பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி 44 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தின் அங்கிககாரத்தைப் பெற்றது. அதற்கு ஆதரவாக 52 வாக்குகளும் எதிராக 8 வாக்குகளும் அளிக்கப்பட்டன. ஒன்றிணைந்த எதிரணியினர் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியினர் இதற்கு எதிராக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.  

No comments

Powered by Blogger.