Header Ads



எமது வட்டாரமும், எமது கடமையும்..!!

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் இதுவரைக்கும் நாம் பரிச்சயமான தேர்தல் முறையல்ல.இதைப் பற்றி எம்மவர்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.

முந்தைய தேர்தல்களில் ஒரு ஊரில் ஒரு மூலையைச் சேர்ந்த ஒருவர் இன்னொரு மூலையைச் சேர்ந்த ஒருவருக்கு வாக்களிக்கலாம்.எமது பிரச்சினைகளை ஒருவர் இல்லாவிட்டால் இன்னொருவரிடம் போய் பேசலாம்.அதே நேரத்தில் எமது பிரதேசத்தில் இரண்டு வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் இருப்பார்கள்.ஒருவர் இல்லாவிட்டால் இன்னொருவரை நாம் நாடலாம்.

ஆனால் வட்டார முறையில் அந்தக் கதைக்கே இடமில்லை.ஒரு குறிப்பிட்ட வட்டாரத்திற்கு ஒருவர் மாத்திரம்தான்.அவர்தான் அந்த வட்டாரத்திற்குப் பொறுப்புதாரி.இன்னொரு வட்டாரத்தில் தெரிவு செய்யப்பட்டவர் உங்களுக்கு உதவி செய்ய முன்வரமாட்டார்,காரணம் அவர் அவரின் வட்டாரத்தைக் கவனிக்க வேண்டும்.

ஒரு வட்டாரத்தில் இரண்டு உறுப்பினர்கள் வரமாட்டார்கள்.ஆகவே ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தில் நாம் தெரிவு செய்யும் ஒரே ஒருவரின் கையில் எமது வட்டாரத்தின் அரசியல் அபிலாஷைகளை 5 வருடங்களுக்குக் கொடுக்கிறோம்.ஒரு பிழையானவரின் கைகளில் எமது அதிகாரங்கள் செல்லும் போது 5 வருடங்கள் எமக்கு வீணாகிவிடும்.

ஆகவே எமது வட்டாரத்தில் எமது உறுப்பினரை நாம் தெரிவதில் மிக மிகக் கவனமாக இருக்க வேண்டும்.ஒரு பிழையானவரைத் தெரிவு செய்து விட்டு ''பாருங்கோ வோட்டுப்போட்டம்.அவன் ஒண்டும் செய்ரானில்ல'' என்று குறை கூறக்கூடாது.ஏனெனில் வாக்களித்து அவரைத் தெரிந்தது நாம்.அவர் தவறானவர் என்றால் தவறிழைத்தது நாம்தான்.

எமது வட்டாரத்தில் எமது பிரநிதியைத் தெரியும் விடயத்தில் மிக மிகக் கவனமாக இருக்கவேண்டும். பெரும்பாலும் எமது வட்டாரத்தில் வாக்குக் கேட்பவர் எமக்குப் பரிச்சயமானவராகத்தான் இருப்பார்.எமது உறவினராக இருப்பார்.எமது நண்பராக இருப்பார்.எம்மோடு மைதானத்தில் விளையாடி யவராக இருப்பார்.ஆகவே எமது மனங்கள் அவரை நோக்கித் திரும்புவது சாதாரணம்.ஆனால் அது தவறு.

அரசியல் வேறு நட்பு வேறு.பரிச்சயம் வேறு.பிரதேசத்தின் அரசியல் பிரதிநிதித்துவம் வேறு.நட்பையும் அரசியலையும் குழப்பக்கூடாது. உங்களின் ஒரு நல்ல நண்பர் அரசியலில் குதிக்க ஆசைப்படுவார்.அவர் உங்களின் நண்பர் என்பதற்கு அவரை ஆதரிக்காமல் அவர் எமது வட்டாரத்தின் அரசியலுக்குப் பொருத்தமானவரா என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.ஏனெனின் எமது அந்த நண்பர்,உறவினர் எமக்கு மட்டுமல்ல எமது வட்டாரத்தில் உள்ள அனைவருக்கும் பொறுப்புதாரியாக இருப்பவர்.எமது நண்பர் என்ற சுயநலம் எமது வட்டாரம் என்ற பொது நலத்தினைக் கெடுக்கக் கூடாது.

மாப்பைக்கட் தந்தார்,கொப்பி புத்தகம் தந்தார்,எனது ஆசிரியர்,எனது நண்பர்,எனது முன் வீட்டுக்காரர், எனக்கு கடன் கொடுத்தவர் என்ற பார்வையால் ஒரு திருடனை,பொதுப்பணத்தைக் கொள்ளையடித்தவனை, மக்களை ஏமாற்றி பணம் பிடுங்கியவனை,தன் தலைவன் சொல்வதற்கெல்லாம்தலையாட்டுபவனை,பணத்தைக் காட்டி வாக்கு வாங்க நினைப்பவனைத் தெரிவு செய்தால் கஷ்டப்படப்போவது நாம்தான்.

அதனால் அந்தந்த வட்டாரத்தின் இளைஞர்கள் மிகவும் அவதானமாக இருங்கள்.உங்கள் வட்டாரத்தில் யார் வேட்பாளராக நியமிக்கப்படுகிறார் என்பதை அவதானமாக அவதானியுங்கள்.நியமிக்கப்படும் வேட்பாளர் உங்கள் சொந்தத் தந்தையாக இருந்தாலும் அவர் எம்மை அரசியல் ரீதியாகப் பிரதிதித்துவம் செய்யப் பொருத்தமானரில்லை என்றால் அவரை எதிருங்கள். வட்டார இளைஞர்கள் சேர்ந்து உங்கள் வட்டாரத்தில் ஒரு பொதுவான நல்ல மனிதரைக் கொண்டுவர முயற்சி செய்யுங்கள். அந்தந்த வட்டாரத்தில் சரியானவரைத் தெரிவது அந்தந்த வட்டார இளைஞர்களின் கடமை.

வட்டாரத் தேர்தல் மிகவும் இலகுவானது.இரண்டு மூன்று தெருக்கள்தான் எமது வட்டாரம். இருப்பவர்கள் எல்லாம் எமது குடும்பமும், உறவினர்களும்தான்.எப்படி எமது வட்டாரத்தில் எமது வேட்பாளருக்கு செல்வாக்கு இருக்கிறதோ அப்படி எமக்கும் எமது வட்டாரத்தில் செல்வாக்கிருக்கிறது.அதைப் பயன்படுத்தி நல்லவரை உங்கள் வட்டாரத்திற்கு தெரிவு செய்யுங்கள்.

பொருத்தமில்லாத வேட்பாளரை எதிர்க்கப் பயப்படாதீர்கள்.நாம்தான் கதாநாயகர்கள்.வேட்பாளர் எமது சேவகர் மாத்திரமே.அவர்களால் எம்மை ஒன்றும் செய்ய முடியாது.

அரசியலில் சாதாரண மக்களின் தலையீடு இல்லாததால்தான் சில அரசியல்வாதிகள் அந்தந்த ஊரின் அரசியல் ஏக போக உரிமையாளர்களாகிறார்கள்.

வட்டார இளைஞர்களே,உங்கள் வட்டாரம் உங்கள் பொறுப்பு.

Raazi Muhammadh Jaabir

No comments

Powered by Blogger.