Header Ads



என் மீது, அன்புவைத்த மக்களுக்கு நன்றி - ராகுல் காந்தி

குஜராத் மற்றும் ஹிமாச்சலப் பிரதேச மாநிலங்களுக்கான சடடப்பேரவைத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதையடுத்து அங்கு திங்கள்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இதில், கடந்த 25 வருடங்களுக்குப் பிறகு குஜராத் தேர்தலில் காங்கிரஸ் வாக்கு சதவீதம் முன்னேற்றம் கண்டுள்ளது. கடந்த தேர்தலின் போது 20 சதவீதம் மட்டுமே காங்கிரஸுக்கு மக்கள் வாக்களித்தனர். ஆனால் இம்முறை அது 40 சதவீதமாக உயர்ந்துள்ளது.

மேலும், அம்மாநிலத்தின் பல தொகுதிகளில் பாஜக-வுக்கு காங்கிரஸ் கடும் நெருக்கடி கொடுத்து மிகப் பெரிய எதிர்கட்சியாக உருவெடுத்துள்ளது. சமீபத்தில் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற ராகுல், இந்த இரு மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு குஜராத்தில் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

இதனால் அங்கு காங்கிரஸ் தற்போது இத்தனை பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளதாக, அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இருப்பினும் காங்கிரஸ் கட்சி, ஹிமாச்சலப் பிரதேசத்தில் கடும் சரிவை சந்தித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு பாஜக ஆட்சியமைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. குஜராத்தில் காட்டிய வேகத்தை ராகுல் இம்மாநிலத்தில் தவற விட்டது தான் இத்தனை பெரிய தோல்விக்கு காரணம் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

அதுபோல நாடு முழுவதிலும், பாஜக ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 19-ஆக உயர்ந்தது. அதேசமயம் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 4-ஆக சரிந்தது. 

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறியதாவது:

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எனது சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் என்னை பெருமையடையச் செய்துவிட்டீர்கள். இந்த தேர்தல் பணிகளில் மதிப்புடன் கூடிய ஆவேசத்துடன் பணியாற்றியது சிறப்பானதாகும். இதன்மூலம் அனைவரிடமிருந்தும் நீங்கள் வேறுபட்டுவிட்டீர்கள். இதன்மூலம் காங்கிரஸின் மிகப்பெரிய வெற்றியென்பது பலம், தைரியம் மற்றும் தன்னடக்கம் என்பதை நிரூபித்துவிட்டீர்கள். 

மக்களின் இந்த தீர்ப்பை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. இரு மாநிலங்களிலும் ஆட்சியமைக்கப்போகும் அரசுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். என் மீது இவ்வளவு பெரிய அன்பு வைத்த குஜராத் மற்றும் ஹிமாச்சலப் பிரதேச மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

No comments

Powered by Blogger.