Header Ads



புத்தளத்தில் டெங்கு அதிகரிப்பு, நேற்றும் ஒருவர் வபாத்

புத்தளம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்தும் டெங்கு நோய் பரவி வரும் நிலையில், புத்தளம் ஆதார வைத்தியசாலையில் இன்று மற்றுமொரு டெங்கு மரணம் பதிவாகியுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களில் சுமார் 800 பேர் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் தெரிவித்தார்.

அத்துடன், இந்த வருடத்தில் டெங்கு காய்ச்சலால் 6 பேர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டு புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 36 வயதுடைய அப்துல் மபால் பாத்திமா ரிஸ்னா என்பவர் இன்று உயிரிழந்துள்ளார்.

புத்தளம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது.

கடந்த மாதம் மாத்திரம் 600 பேர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டு கடந்த இரண்டு நாட்களில் புத்தளம் வைத்தியசாலையில் 226 டெங்கு நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், புத்தளத்தில் உள்ள தனியார் வைத்தியசாலைகளிலும் டெங்கு நோயாளர்கள் பலர் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் டெங்கு காய்ச்சலால் 1,77,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 400 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.