Header Ads



முஸ்லிம்கள் எம்முடன் ஐக்கியத்துடன், வாழ்ந்து வருகின்றனர் - சபாநாயகர் புகழாரம்

-பாறுக் ஷிஹான்-

இலங்கையில் வாழும் அனைத்து தரப்பினரும் ஒன்றாகவும் ஒற்றுமையுடனும் வாழும் காலத்தில் உள்ளோம். நாட்டில் இனவாத செயலுக்கு இடமில்லை. எதிர்கால இளைஞர்களிடம் இன ஒற்றுமை நல்லிணக்கம் ஆகியவற்றுடன் கூடிய வளமான எதிர்காலத்தை நாம் உருவாக்க வேண்டும் என நாடாளுமன்ற சபாநாயகர் கருஜெயசூரிய தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியில் நேற்று(23) நடைபெற்ற தேசிய மீலாத் விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தாவது

இலங்கையில் அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழுகின்றனர். அன்று தொட்டு இன்றுவரை முஸ்லிம் சமூகம் எம்முடன் ஐக்கியத்துடன் வாழ்ந்து வருகின்றனர். அதேபோல் எமது நாட்டில் உள்ள தமிழ் அரசியல்வாதிகளும் எம்முடன் உன்னதமாகச் செயற்பட்டு வருகின்றனர். இந்த நிகழ்வில் மூவின தலைவர்களும் ஒற்றுமையுடன் ஆர்வத்துடன் கூடியுள்ளோம். அதுபோலவே நாட்டில் உள்ளவர்களும் ஒற்றுமையுடனும் சமாதானத்துடனும் வாழ வேண்டும். அதனையே தற்போதைய அரசும் வலியுறுத்துகின்றது.நானும் அதனையே வலியுறுத்துகின்றேன்.

ஆசியாவில் இலங்கை மற்றும் ஜப்பான் நாடுகள் ஒரே அளவான பொருளாதார வளத்துடனேயே காணப்பட்டன. ஆனால் தற்போது ஜப்பான் எமது நாட்டை விடப் பல துறைகளில் வளர்ச்சி அடைந்து எமக்கு மேலாக வளர்ந்து இருக்கின்றது. அதை நினைத்து நாம் மன ரீதியாகக் கவலை அடைகின்றோம்.



நாம் எமது இளைய சமுதாயத்துக்காக நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்க வேண்டும். எமது பிள்ளைகள் சமாதானம் ஒற்றுமையுடன் வாழக்கூடிய சமூகங்களை உருவாக்க வேண்டும்.
எதிர்கால இளைஞர்களிடம் இன ஒற்றுமை நல்லிணக்கம் ஆகியவற்றுடன் கூடிய வளமான எதிர்காலத்தை நாம் உருவாக்க வேண்டும் என்றார்.

இந்த நிகழ்வில் ஞாபகார்த்தமாக முத்திரை ஒன்றும் வெளியிடப்பட்டது. முத்திரையை நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரிய மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் மற்றும் தபால்துறை அமைச்சர் எம்.எச்.எம்.ஹலீம் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.

கைத்தொழில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா ஈ.சரவணபவன் கே.மஸ்தான் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே யாழ்ப்பான மாவட்டச் செயலர் நா.வேதநாயகன் அரச அதிகாரிகள் மாணவர்கள் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.