Header Ads



இலங்கை முஸ்லிம்களிடம், கவனமாக இருக்குமாறு வேண்டுகிறேன் - பேராசிரியர் காதர் மொகிதீன்

(நன்றி - மீள்பார்வை)

பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்கள் தமிழ் நாடு புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருநள்ளுரைப் பிறப்பிடமாக் கொண்டவர். இவர் தனது ஆரம்பக் கல்வியை திருச்சிராப்பள்ளி வரகனேரி பகுதியிலுள்ள ஸ்ரீ ராம் மத்திய பள்ளியிலும், இரண்டாம் நிலை மற்றும் உயர் நிலைக் கல்வியை திருச்சி புனித வளனார் உயர்நிலைப்பள்ளியிலும் கற்றுள்ளார். திருச்சிராப்பள்ளி தூய வளனார் கல்லூரியில் இளங்கலை வரலாற்றுப் பட்டத்தையும், சென்னை மாநில கல்லூரியில் முதுகலை வரலாற்றுப் பட்டத்தையும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டத்தையும் பூர்த்திசெய்துள்ளார். 1965ல் திருச்சி ஜமால் முஹம்மத் கல்லூரியில் விரிவுரையாளராக இணைந்த இவர், 1980 வரை வரலாற்றுத்துறையில் பேராசிரியராகவும், பின்பு துறைத்தலைவராகவும் பதவி உயர்வு பெற்றுள்ளார். அதன் பிறகு கல்லூரி வேலையை இராஜினாமாசெய்துவிட்டு பொதுவாழ்வில் இனைந்துள்ளார்.

மாணவர் பருவத்திலேயே காயிதே மில்லத் முஹம்மத் இஸ்மாயில் சாகிப் அவர்களது கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் தன்னை இணைத்துக்கொண்டார். பள்ளியில் மாணவரணி அமைப்பாளராகவும், இளைஞரணி அமைப்பாளராகவும், கல்வி மற்றும் கலாசார அமைப்புச் செயலாளராகவும், கட்சிப் பொதுச்செயலாளராகவும், தமிழ் நாடு ஐருஆடு இயக்கத்தலைவராகவும் பதவிகளை வகித்துள்ள இவர் தற்போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் அகில இந்தியத் (தேசிய) தலைவராக உள்ளார். பேராசிரியர் காதர் மொகிதீன் கடந்த 16.11.2017 அன்று விஷேட அழைப்பொன்றின் பேரில் இலங்கை வந்திருந்தார். அவர் மீள்பார்வை பத்திரிகைக்கு வழங்கிய சிறப்பு நேர்காணல் இங்கு தரப்படுகின்றது.

நேர்காணல்- ஹெட்டி ரம்ஸி

இலங்கையில் 30 வருட கால யுத்தம் நடைபெற்றது. அக்காலப்பகுதிகளில் தமிழ் போராளிகளுக்காக வேண்டி தமிழகம் குரல் கொடுத்த அளவுக்கு பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் தொடர்பில் தமிழகம் ஏன் வாய்திறக்கவில்லை?

விடுதலைப் புலிகள் விவகாரம் தமிழ்நாட்டு அரசியலில் ஒரு பகுதியாகவே மாறியிருந்தது. தமிழ் நாட்டிலுள்ள சில அரசியல் கட்சிகள் எல்.டீ.டீ.ஈ யினரை அவர்களது சொந்த கொள்கையில் ஒன்றாக ஆக்கிக்கொண்டார்கள். இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிக்கு எந்தக் கொள்கை இருக்கக்கூடாதோ அந்தக் கொள்கையை தங்களது கொள்கையாக ஆரத்தழுவிக்கொண்டார்கள். இலங்கையை பிரிக்க வேண்டும் என்பதில் இந்திய முஸ்லிம்களுக்கோ இந்திய முஸ்லிம் லீக் கட்சிக்கோ எவ்வித தேவைகளும் உடன்பாடுகளும் கிடையாது. ஒன்றை அழித்து ஒன்றை உருவாக்குவதென்பது முட்டாள்தனம்.

தமிழ்நாட்டில் புலிகள் பிரச்சினையை தமிழ் பிரச்சினை, தமிழ் ஈழப்பிரச்சினை, தமிழர்களுடைய எழுச்சி, உலகத் தமிழர்களுடைய எழுச்சி என்பதாக பிரச்சாரப்படுத்தினார்கள். இதற்கான முக்கியத்துவங்கள் அதிகம் வழங்கப்பட்டன. மாநாடுகளில் நாம் பேசும் போது இந்த வித்தியாசத்தை விளங்கிக்கொண்டோம். எமக்கு ஆதரவில்லாமல் போனது. இலங்கையில் போர் இடம்பெற்று வந்த காலப்பகுதியில் ஒரு மாநாட்டில் வைத்து, ‘இலங்கையில் இரு தரப்புக்குமிடையில் உடன்பாடு எட்டப்பட வேண்டும். ஆயுதம் ஏந்தி இதற்கு தீர்வு காண முடியாது. புலிகள் ஆயுதம் ஏந்திப் போராடி வெற்றிபெற்றால் அது இலங்கையை மாத்திரமல்ல இந்தியாவையும் பாதிக்கும்’ என்பதாக கூறினோம். இதனால் எமக்கு பல விமர்சனங்களை சந்திக்க நேரிட்டது.

இந்தியாவில் சகல கட்சிகளும் இவ்விடயத்தை பேசி வந்தமையினால் இலங்கையில் அகதிகளான முஸ்லிம் மக்களது விவகாரங்கள் எமக்கு மறக்கடிக்கப்பட்டன. அப்போது இலங்கை அகதி முஸ்லிம்கள் தொடர்பில் பத்திரிகைகளில் ஒரு வரி கூட பிரசுரமாகாது. அவ்விடயத்தை நாங்களாகவே எடுத்துப்பேச வேண்டும் என்றொரு நிலை இருந்தது. உலகில் சோனகத் தமிழர்கள் என தங்களை பெயர்வைத்துள்ள ஒரேயொரு சமூகம் இலங்கை முஸ்லிம்கள். அப்படிப்பட்ட இலங்கை முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள், அதைப்பற்றிய கண்டனங்கள், ஆர்ப்பாட்டங்களை ஏன் நீங்கள் மேற்கொள்ளவில்லை என ராமதாஸிடமும் அடிக்கடி கேள்விகளை தொடுத்துள்ளோம்.

இந்தியாவில் எமக்கான எல்லை வரையறுக்கப்பட்டது. அதற்குரிய முறையில் நாம் குரல்கொடுத்துள்ளோம். பொதுமேடைகளில் பேசியுள்ளோம். சம்பந்தப்பட்டவர்களிடம் நியாயம் கேட்டுள்ளோம். தீர்மானங்களையும் நிறைவேற்றியுள்ளோம்.

ரோஹிங்கிய அகதிகள் இந்திய முகாம்களில் மிகுந்த கஷ்டங்களை எதிர்கொண்டு வருவதாக கேள்விப்படுகிறோம். இது விடயத்தில் இந்தியா எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது?

மியன்மார் ஒரு பௌத்த நாடு. பௌத்தத் தலைவராக கருதப்படுகின்ற தலைலாமாவினை இந்திய முஸ்லிம் லீக் சார்பில் நாம் நேரடியாக டில்லியல் வைத்து சந்தித்து அவரிடம் மகஜரொன்றை கையளித்தோம். தற்பொழுது தலைலாமா அதை கண்டித்து அறிக்கை விடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட அகதிகளுக்காக வேண்டி நிறைய பண உதவிகளை செய்வதாகவும் அவர் வாக்குறுதியளித்தார். எனவே பௌத்த நாடொன்றில் நடக்கின்ற தவறொன்றுக்கு பௌத்த தலைவர் ஒருவரே முன்வந்து இது மிகப்பெரும் அநியாயம் எனக் கூறியுள்ளார்.

இதுபோன்று பௌத்த மதத்திலுள்ள பெரியவர்கள், ஆண்மீகத் தலைவர்கள் அநியாயங்கள் இடம்பெறும் போது அதை மதவாத நோக்கில் பார்க்காமல் மனிதாபிமானத்துடன் பார்க்க வேண்டும். ரோஹிங்கியாவில் ஏற்பட்டுள்ள விவகாரத்தை நாம் மனித சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள பாதகமாகவே நோக்குகிறோம். இலங்கையிலுள்ள பௌத்த மத தலைவர்கள் இவ்விடயத்தை எச்சரித்து ‘மியன்மார் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும்’ என அறிக்கை விட்டிருந்தால் இந்த நேரத்தில் அது மிகப்பெரிய வரவேற்புக்குரிய விடயமாக இருந்திருக்கும்.

தமிழ்நாட்டில் தற்போது 92,000 ரோஹிங்கிய முஸ்லிம் அகதிகள் உள்ளார்கள். தமிழ்நாடு அரசு சில ஏற்பாடுகளை செய்துகொடுத்துள்ளது. முஸ்லிம் லீக் கட்சிக்கு வெளிப்படையாக சென்று சில விடயங்களை செய்ய முடியவில்லை. முஸ்லிம் லீக் கட்சி எம்.எல்.ஏ. முஹம்மத் அபூபக்கர் உள்ளார். அவர் மூலமாக சில விடயங்களை செய்துவருகின்றோம். மேலதிகமாக என்னென்ன செய்யலாம் என்ற விடயத்தில் எமக்கு அனுமதி வழங்கினால் நாம் செய்கிறோம் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளோம். அதற்கான அறிவித்தல் இன்னும் எமக்கு வழங்கப்படவில்லை. தற்போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக ரோஹிங்கிய அகதிகளுக்காக வேண்டி நிவாரண நிதி திரட்டப்பட்டு வருகின்றது

அதை நேரடியாக அரசிடம் கையளிக்க உள்ளோம். ரோஹிங்கிய அகதிகள் பிரச்சினையை ஒரு முஸ்லிம் பிரச்சினையாக பார்க்காமல் மனிதாபிமான முறையில் அனுக வேண்டும் என்பதே எமது வேண்டுகோள்.

நரேந்திர மோடியின் ஆட்சியின் கீழ் இந்திய முஸ்லிம்களது நிலை எவ்வகையில் உள்ளது?

சிறியதொரு கூட்டமே அவர்களது ஆட்சிக்கு ஆதரவு தெரிவிக்கின்றது. பசுவைக் கொல்லாதே என்பது அவர் சார்புடைய RSS இனுடைய கொள்கையாக இருக்கலாம். அதேநேரம் இறைச்சி சாப்பிடாதே எனக்கூறினால் அது மக்கள் எதிர்ப்புக்கே காரணமாக அமையும். இந்தியாவில் 85 வீதமானவர்கள் இறைச்சி சாப்பிடுபவர்கள் உள்ளார்கள். இந்நிலையில் இறைச்சி சாப்பிடக்கூடாது எனக்கூறினால் எப்படியிருக்கும்? இதுபோன்றே அவர்களது செயற்பாடுகள் உள்ளன. ஒரு வருடத்திற்கு முன்னர் பண மதிப்பு நீக்கத்தை கொண்டு வந்தார். இதனால் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டார்கள். இந்தியாவில் இது மோடி எதிர்ப்பலை வலுப்பெற காரணமாக அமைந்தது. GST (Goods Service Tax) வரியை கொண்டு வந்தார். இதனாலும் மக்கள் பாதிக்கப்பட்டார்கள். பி.ஜே.பி கட்சிக்குள்ளேயே இதற்கு பாரிய எதிர்ப்புகள் கிளம்பியது. இவ்வாறு பிழையான கொள்கைகளை அமுல்படுத்தப்போய் மோடியின் ஆட்சிக்கு எதிராக மக்கள் எதரிப்பலை மேலோங்கிக்கொண்டுள்ளது.

இலங்கை முஸ்லிம்கள் தொடர்பில் உங்களது மனப்பதிவு என்ன?

இந்திய தமிழ் நாடு முஸ்லிம்களுக்கும் இலங்கை முஸ்லிம்களுக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் கிடையாது. இரு நாடுகளினதும் கலாசார விடயங்கள் ஒன்றாகவே உள்ளன. இந்திய முஸ்லிம்களை பொதுவாக நோக்கினால் மத வழிபாடுகளில் அதிக கவனமுடையோராக இருப்பார்கள். இலங்கையிலும் அவ்வாறான நிலைமையே உள்ளது. அரசியல் கட்சி ரீதியாக பார்த்தால் இந்தியாவில் முஸ்லிம் லீக் என்ற அமைப்புள்ளது. இலங்கையில் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் இன்னும் பல கட்சிகள் உள்ளன.

சமூகம் மற்றும் மத விவகாரங்களில் கவனமாக இருக்குமாறு நான் இலங்கை முஸ்லிம்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன். ஜனநாயக மரபுகளை பேணிச்செயற்பட வேண்டும் என்றும், தீவிரமான விடயங்களில் ஈடுபட வேண்டாம் என்றும், ஆர்ப்பாட்டங்கள் செய்வதில் மிகக் கவனமாக செயற்படுமாறும் நான் ஆலோசணை பகர்கின்றேன்.

இலங்கை விஜயம் குறித்து முஸ்லிம் சமூகத்திற்கு என்னென்ன விடயங்களை சொல்லப் போகிறீர்கள்?

இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான தொடர்புகள் மிக இறுக்கமானது. இந்தியாவிலும் இலங்கையிலும் முஸ்லிம்கள் சிறுபான்மையினராகவே வாழ்கிறார்கள். அதனால் ஏனைய இன மக்களுடன் நல்லிணக்கமான முறையில் தொன்மை தொட்டு வாழ்ந்து வரக்கூடிய வரலாற்றுப் பின்னணியை நாம் பார்க்கின்றோம். சமூக நல்லிணக்கத்தை இஸ்லாம் வலியுறுத்துகிறது. அதற்கு எடுததுக்காட்டாக இருக்கக்கூடிய முன்மாதிரி வாழ்க்கையை இலங்கை முஸ்லிம்கள் பெற்றுள்ளார்கள். இலங்கை ஒரு தொன்மையான பூமி. இலங்கையின் இயற்கைத் தன்மை அமைதி ஆகும்.

எனவே இங்கு அமைதி நிவல வேண்டும். இங்குள்ள சகல மக்களும் ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்பதே எமது அவா. இது ஜனநாயக பூமி. இங்கு ஜனநாயகம் தழைக்க வேண்டும். அதாவது சட்டப்படி வாழ வேண்டும். ஒவ்வொரு விடயமும் சட்டரீதியாகவே நடக்க வேண்டும் என முஸ்லிம் லீக் கட்சியின் ஸ்தாபர் காயிதே மில்லத் முஹம்மத் இஸ்மாயீல் அவர்கள் எமக்கு சொல்லிக்கொடுத்துள்ளார்கள். இலங்கையில் ஒரு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவதாக இருந்தால் அதில் சொல்லபப்டுகின்ற நியதிகளுக்கு உட்பட்டு நடக்க தயாராக வேண்டும்.

அப்போதே நாடு எழுச்சி பெரும். சிங்கப்பூர் இலங்கையை விட சிறிய நாடு. அங்கு டொலரின் பெறுமதி அதிகம். அதுபோன்று இங்குள்ள டொலரின் பெறுமதியும் கூட வேண்டும். அதற்கு அரசியலமைப்பு ஸ்திரமடைய வேண்டும். இலங்கை நாணயத்தின் பெறுமதி அதிகரிக்கப்பட வேண்டும். அதுவே இலங்கைக்கு பெருமை சேர்க்கும் விடயம்.

இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் குறித்து பிற சமூகத்தவர்களிடம் உள்ள பிழையான மனப்பதிவுகளை போக்க இலங்கை முஸ்லிம்களாகிய நாம் எவ்வாறான விடயங்களை செய்ய வேண்டும்?

முஸ்லிம் சமூகத்தின் பெயரால் இன்று உலகம் முழுவதும் அபாண்டமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இஸ்லாத்தில் வன்முறை கிடையாது. அது யாரையும் ஒதுக்கிவிடும் மார்க்கமல்ல. இது வன்முறைபடைத்த மார்க்கமல்ல என்பதை நாம் உரக்கச்சொல்ல வேண்டும். இஸ்லாம் என்றால் என்ன? அதன் சட்டதிட்டங்கள் என்ன என்பதை பகிரங்கமாகச் சொல்ல வேண்டும். குறிப்பாக மாற்று மொழிகளில் இஸ்லாமிய விடயங்கள் சொல்லப்பட வேண்டும். பத்திரிகையாளர் மாநாடு நடாத்தப்படுவது போன்று சிங்கள மொழியில் இஸ்லாமிய விடயங்கள் சொல்லப்பட வேண்டும். சிங்கள மொழியில் புத்தரைப் பற்றியும் முஸ்லிம் கவிஞர்கள் காப்பியங்களை எழுத வேண்டும். அவர்களுடைய இலக்கிய மரபுகளையும் எமது கவிஞர்கள் பாட வேண்டும். நாம் அடுத்த இன மக்களுடன் ஒன்றித்து போக வேண்டும். அவர்களுடைய விவகாரங்களில் நுழைவதற்கான பாதைகளையே நாம் தேட வேண்டும். அதுவல்லாமல், அவர்களை விட்டு விலகுவதற்கான வழிகளை தேடக் கூடாது. மதங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் பெரும்பாலான விடயங்கள் ஒன்றாகவே இருக்கும். அவை ரயில் தண்டவாளங்களை போன்றிருக்கும். சிங்கள மக்களில் சரித்திரம் படைத்த சிலர் இருப்பார்கள். அவர்கள் தொடர்பில் கவிதை, காப்பியங்களை வடியுங்கள். இலங்கையிலுள்ள அறிஞர்கள் நெருக்கத்திற்கான வழியை ஏற்படுத்த வேண்டும். அது மொழியின் மூலமாகவும் இலக்கியத்தின் மூலமாகவும் வர வேண்டும். அதுவே புரட்சிகரமான மாற்றத்திற்கு வழிவகுக்கும்.

தற்போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியில் எத்தனை எம்.பிக்கள் உள்ளார்கள்?

எமது கட்சியில் 3 எம்பிக்கள் உள்ளார்கள். தமிழ் நாட்டில் ஒருவரும் இல்லை. ராஜ்ய சபாவில் ஒருவரும் லோக சபாவில் இருவரும் உள்ளார்கள். ஏனையவர்கள் முன்னாள் எம்பிக்கள். தேசிய ரீதியில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்துள்ளோம்.

No comments

Powered by Blogger.