Header Ads



ரஷ்ய தடை, சிறிலங்கா அதிர்ச்சி – மொஸ்கோ விரைகிறது உயர்மட்டக் குழு


சிறிலங்காவில் இருந்து தேயிலை உள்ளிட்ட விவசாய விளைபொருட்களை இறக்குமதி செய்வதற்கு ரஷ்ய அரசாங்கம் தடை விதித்திருப்பது, சிறிலங்கா அரசாங்கத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலைப் பொதிக்குள் வண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, சிறிலங்காவில் இருந்து தேயிலை உள்ளிட்ட விவசாய விளைபொருட்களை இறக்குமதி செய்வதற்கு ரஷ்யா தற்காலிக கட்டுப்பாடு விதித்துள்ளது.

நாளை மறுநாள் தொடக்கம் இந்த தடை நடைமுறைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் தேயிலைச் சந்தையில் ஈரானுக்கு அடுத்த இரண்டாவது இடத்தில் ரஷ்யா உள்ளது. சிறிலங்காவின் தேயிலை ஏற்றுமதியில் 11.3 வீதம் ரஷ்யாவுக்கே மேற்கொள்ளப்படுகிறது. 143 மில்லியன் டொலர் பெறுமதியான சிறிலங்கா தேயிலையை ரஷ்யா இறக்குமதி செய்து வருகிறது.

இந்த நிலையில் ரஷ்யாவின் தற்காலிக தடை சிறிலங்காவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, இந்தப் பிரச்சினை தொடர்பாக ரஷ்ய அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்துவதற்கு உயர் மட்டக் குழுவொன்றை மொஸ்கோவுக்கு சிறிலங்கா அரசாங்கம் அனுப்பவுள்ளது.

சிறிலங்காவின் பெருந்தோட்டைத் துறை அமைச்சர் நவீன் திசநாயக்கவும், அடுத்தவாரம் ரஷ்யாவுக்குப் பயணமாகவுள்ளார்.

அதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சிறிலங்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தேயிலைத் தொகுதி ஒன்றில் கஹப்ரா வண்டு எனப்படும், பூச்சி கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்தே, கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.