Header Ads



இராஜகிரிய மேம்பாலம் ஜனவரி 9 இல் திறப்பு

இறுதிக்கட்ட நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வரும் இராஜகிரிய மேம்பாலம், எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு ஜனவரி 09 ஆம் திகதி, மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இன்றைய தினம் (21) மேம்பாலத்தின் இறுதிக்கட்ட நிர்மாணப் பணிகள் தொடர்பிலான மேற்பார்வைக்காக சென்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், பொருளாதார பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஸ்பெய்ன் நாட்டின் நிவாரண வட்டி கடன் திட்டத்தின் கீழ், ரூபா 4,700 மில்லியன் செலவில் இடம்பெறும் ராஜகிரிய மேம்பாலத்தின் 95 வீதமான நிர்மாணப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நான்கு ஒழுங்கைகளைக் கொண்ட இப்பாதையின் நீளம் 534 மீற்றர்களாகும்.

குறித்த பாலம் பயன்பாட்டுக்காக விடப்படும் நிலையில் பொரளை மற்றும் பத்தரமுல்லைக்கு இடையில் விசேட போக்குவரத்து ஓழுங்குகள் நடைமுறைப்படுத்தவும், ராஜகிரிய மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலுள்ள வீதிகளில் தற்போது நிலவும் போக்குவரத்து நெரிசலையும் குறைக்க முடியும் என ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

2018 ஆம் ஆண்டு ஜனவரி 09 ஆம் திகதி இராஜகிரிய மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்க முடியும் எனவும், திட்டமிடப்பட்டதை விடவும் அண்ணளவாக ஒரு வருடத்திற்கு முன்னதாக திறந்து வைக்கப்படவுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இராஜகிரிய மேம்பால நிர்மாணப் பணிகள் கடந்த வருடம் (2016) ஜூலை மாதம் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.