Header Ads



29 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு - மஹிந்த டீம் சாதனை

2017 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் 20 அரசியல் கட்சிகளும் ஒன்பது சுயேட்சை குழுக்களும் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் நடவடிக்கைகள் நேற்று நண்பகல் 12 மணியுடன் முடிவடைந்தது.

இம்முறை இரண்டு கட்டங்களாக வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. முதற்கட்டத்தில் 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் இரண்டாம் கட்டத்தில் 248 மன்றங்களுக்குமாக மொத்தமாக 341 உள்ளூராட்சி மன்றங்களுக்காக வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

மொத்தமாக 20 அரசியல் கட்சிகளும் ஒன்பது சுயேட்சை குழுக்களும் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.முஹமட் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஐந்து உள்ளூராட்சி நிறுவனங்களுக்காக தாக்கல் செய்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் அனுராதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த திரப்பனே பிரதேச சபை, யாழ்ப்பாண மாநகர சபை, வலிகாமம் வடக்கு பிரதேச சபை, வலிகாமம் கிழக்கு பிரதேச சபை, நெடுந்தீவு பிரதேச சபை ஆகியவையும் அடங்கும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெலிகம மற்றும் ரிதிகம பிரதேச சபைகளுக்காக தாக்கல் செய்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மௌபிம மக்கள் கட்சி திக்வெல்ல பிரதேச சபைக்காக தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. தேசிய மக்கள் கட்சி கொழும்பு மாநகர சபைக்கும், கோரளைப்பற்று வடக்கு பிரதேச சபைக்கும் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

ஸ்ரீஜயவர்தனபுர, கோட்டே மாநகர சபைக்காக ஐக்கிய சோசலிச கட்சி தாக்கல் செய்த வேட்புமனுவும், எல்பிட்டி, பொல்கஹவெல, பிபில பிரதேச சபைகளுக்காக ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி தாக்கல் செய்த வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டன. ஜனசெத்த பெரமுன என்ற கட்சி கட்டுநாயக்க, சீதுவ நகர சபைகளுக்காகவும், வெலிகந்த பிரதேச சபைக்காகவும் தாக்கல் செய்த நியமனப் பத்திரங்கள் நிராகரிக்கப்பட்டன.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் என்ற கட்சி மட்டக்களப்பு மாநகர சபைக்கும், துணுக்காய் பிரதேச சபைக்கும் தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. ஸ்ரீலங்கா சமசமஜா கட்சி நுவரெலியா பிரதேச சபைக்காக தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. நல்லாட்சிக்கான தேசிய இயக்கம் மஹவ பிரதேச சபைக்காக தாக்கல் செய்த வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

கல்முனை மாநகர சபை, கஸ்பாவ - ஹாரிஸ்பத்துவ  வலிகாமம் மேற்கு வவுனியா வடக்கு பிரதேச சபைகள் ஆகியவற்றுக்காக ஒன்பது சுயாதீன குழுக்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. உள்ளுராட்சி தேர்தல் வாக்குப் பதிவு பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெறுமென மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பவர்களுக்கு இன்றைய தினமே விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான இறுதி தினமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.

அருகில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.