Header Ads



21ம் நூற்றாண்டின் சிறந்த, பந்துவீச்சா இது..? (வீடியோ)


ஆஷஸ் தொடரின் 3வது டெஸ்ட், வேகபந்து வீச்சுக்கு பிரபலமான பெர்த்-டபிள்யூஏசிஏ கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. அதன் நான்காவது நாளில்தான் வியப்பூட்டும் அந்த ஒரு பந்து வீச்சு அதிசயம் நிகழ்ந்தது.

இங்கிலாந்து அணியின், வலது கை பேட்ஸ்மேன் ஜேம்ஸ் வின்ஸ் அவுட்டாக்கப்பட்ட விதம்தான், அந்த பந்தை, இந்த நூற்றாண்டின் சிறந்த பந்து வீச்சு என அழைக்க காரணம்.

ஆஸ்திரேலிய இடது கை வேகப்பந்து வீச்சாளர் மிட்சேல் ஸ்டார்க், ரவுண்ட் தி விக்கெட் திசையிலிருந்து ஓடி வந்தார். அதாவது பேட்ஸ்மேனின் முகத்திற்கு நேராக ஓடி வந்தார். பவுலிங் கிரீசின் இடதுபக்கம் ஓரம் அருகே நின்றபடி பந்தை, பேட்ஸ்மேனின் கால் திசை, நோக்கி வீசினார். பொதுவாக கிரீசின் ஓரத்தில் நின்று வீசப்படும் பந்துகள் ஸ்விங் ஆவது கஷ்டம்.

ஸ்விங் செய்ய விரும்பும் பவுலர்கள், ஸ்டம்பை ஒட்டினாற்போல நின்றுதான் பந்து வீசுவார்கள். ஸ்டார்க் அப்படி செய்யவில்லை. அவர் பந்து வீசிய இடமும், அவர் பந்தை எறிந்த திசையையும் வைத்து பார்த்தால் அந்த பந்து 'பிட்ச்'ஆன பிறகு இன்னும் அதிகமாக லெக் திசையில்தான் சென்றிருக்க வேண்டும். ஆனால் அப்போதுதான் நடந்தது அந்த ஆச்சரியம். பந்து லெக் திசையை நோக்கி வீசப்பட்டாலும், பிட்ச் ஆன பிறகு, அது ஆப் திசை நோக்கி ஸ்விங்காகியது. பேட்ஸ்மேனோ, லெக் திசை நோக்கி பேட்டை கொண்டு செல்ல, பந்தோ, ஆப்சைடு நோக்கி பயணித்து, ஸ்டெம்பை அடித்து வீழ்த்தியது.

பேட்ஸ்மேன் ஜேம்ஸ் வின்ஸ்சுக்கு சற்று நேரம் என்ன நடந்தது என்பதே புரியவில்லை. அதற்குள்ளாக ஸ்டார்க் தனது கொண்டாட்டங்களை ஆரம்பித்திருந்தார். இத்தனைக்கும் ஜேம்ஸ் வின்ஸ், அப்போதுதான் களமிறங்கவில்லை. அந்த போட்டியில் 55 ரன் குவித்து நல்ல பார்மில்தான் இருந்தார். பந்து வீச்சின் வேகம் 143.9 கி.மீ. இந்த வேகத்தில் வீசப்பட்டும் பந்து சிறப்பாக ஸ்விங் ஆனது. எனவேதான், இந்த மாயாஜால பந்தை 21ம் நூற்றாண்டின் சிறந்த பந்து வீச்சு என வர்ணிக்கிறார்கள் கிரிக்கெட் வல்லுநர்கள்.

முந்தைய நூற்றாண்டின் சிறந்த பந்து வீச்சும் ஆஸ்திரேலியா பந்து வீச்சாளர் ஒருவரால்தான் நிகழ்ந்தது. அது வேறு யாருமல்ல, ஷேன் வார்னே. 1993ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி இதேபோன்ற ஒரு ஆஷஷ் தொடரில்தான் அந்த சாதனை நிகழ்ந்தது. அந்த போட்டி இங்கிலாந்தின் ஓல்ட் டிராபோர்ட் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. 

லெக் ஸ்டெம்புக்கும் வெளியே வார்னே வீசிய அந்த பந்து சுழன்று வந்து ஸ்டெம்பை காலி செய்து மைக் கட்டிங்கை அவுட் செய்தது. மிட்சேல் ஸ்டார்கின் இந்த பந்து வீச்சு டான் பிராட்மேன், சச்சின் டெண்டுல்கர் போன்றவர்களை கூட 1000 முறை அவுட் செய்ய வல்லது. இது ஆட முடியாத பந்து என்று இங்கிலாந்து முன்னாள் ஸ்பின்னர் கிராம் ஸ்வான் உற்சாகத்தோடு தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம், இந்த பந்து வீச்சு தன்னுடைய சிறந்து பந்து வீச்சு நாட்களை நினைவுபடுத்துவதாகவும், இடது கை வேகப்பந்து வீச்சாளர்களை ஸ்டார்க் பெருமைப்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.