Header Ads



எல்லை மீள் நிர்ணயம், அடிப்படை உரிமை மீறல் மனு- 15 ஆம் திகதி பரிசீலனை

எல்லை மீள் நிர்ணயம் தொடர்பான அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று எதிர்வரும் 15 ஆம் திகதி பரிசீலனைக்காக எடுத்து கொள்ளப்படவுள்ளதாக மனுதாரர் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த அடிப்படை உரிமை மீறல் மனு கடந்த 7ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டது.

நுவரெலியா மாநகர சபைக்கு உட்பட்ட பீட்ரோ தோட்டத்தின் ஒரு பகுதியான லவர்ஸ்லீப் என்ற பகுதி தொடர்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த பகுதியை மாநகர சபை எல்லையிலிருந்து நீக்கிவிட கடந்த 2015 ஆம் ஆண்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

எனினும், மாநகர சபை இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, அந்த நடவடிக்கைகள் விலக்கி கொள்ளப்பட்டன..

இந்த நிலையில், தற்போது வெளியிடப்பட்ட எல்லை நிர்ணய வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய, நுவரெலியா பிரதேச சபையின் கீழ் லவர்ஸ் லீப் பகுதி கொண்டுவரப்பட்டுள்ளது.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்தே குறித்த அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நுவரெலியா மாநாகர  சபைக்குட்பட்ட பகுதியில் மொத்தமாக 19 ஆயிரம் வாக்காளர்கள் பதிவாகியுள்ளனர்.

அவர்களுள் லவர்ஸ் லீப் என்ற பகுதியில் ஆயிரத்து 160 வாக்காளர்கள் பதிவாகியுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த பகுதி நுவரெலியா மாநகர சபையிலிருந்து, பிரதேச சபைக்கு மாற்றப்படும்போது, அந்தப் பகுதியிருந்த சுமார் 5 வீதமான வாக்குகள் கைமாறுகின்றன.

இதனால், நுவரெலியா மாநாகர சபையின் உயர் பதவிகளுக்கு சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் வரும் வாய்ப்பு இல்லாதுபோகும் நிலைமை உள்ளது.

இதனைக் கருத்திற்கொண்டே குறித்த அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனு எதிர்வரும் 15 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்கப்பட உள்ளதாக மனுதாரர் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.