Header Ads



இலங்கையில் 14,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கு மலேசியா இணக்கம்


மலேசியா - இலங்கைக்கிடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கும், இலங்கையில் முதலீட்டை மேம்படுத்துவதற்கும் இலங்கையில் 14,000 மத்திய தர வர்க்க வீடுகளை அமைக்கவும் போன்ற பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பையேற்படுத்த இரு நாடுகளின் தலைவர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் மலேசிய பிரதமர் நஜீப் ரஸாகிற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று  முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்த மலேசியப் பிரதமரை ஜனாதிபதி மகிழ்ச்சியுடன் வரவேற்றார். 

21 பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு, இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் இவ்வரவேற்பு இடம்பெற்றது.

இரு நாடுகளின் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பைத் தொடர்ந்து இரு தரப்பு பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

மலேசியாவுக்கும் இலங்கைக்குமிடையில் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இரு நாடுகளின் தலைவர்களும் விரிவாக கலந்துரையாடியதுடன், விமான நிலைய முகாமைத்துவம், மத்திய தர வர்க்க வீடமைப்பு, விஞ்ஞான தொழில்நுட்பம்,நெனோ தொழில்நுட்பம் மற்றும் உயிரியல் தொழில்நுட்பம், சுற்றுலாத்துறை, மருத்துவம், கல்வி, இராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி, புலனாய்வு தகவல்களை பரிமாறிக்கொள்ளுதல், தூதுவர்களுக்கான பயிற்சி, ஈ-நீதிமன்ற தொழில்நுட்பம், விவசாயம் போன்ற துறைகள் குறித்து கலந்துரையாடப்பட்டன.

இரு நாடுகளுக்கிடையில் சுதந்திர, வர்த்தக உடன்படிக்கையை ஏற்படுத்தல் மற்றும் முதலீட்டை உறுதிப்படுத்தல் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இலங்கைக்கும் மலேசியாவுக்குமிடையிலான வருடாந்த வர்த்தக பெறுமதி இவ்வருடம் 680 மில்லியன் அமெரிக்க டொலர் வரை அதிகரித்துள்ளது. 

இது தொடர்பில் மகிழ்ச்சி தெரிவித்த மலேசிய பிரதமர், இலங்கையில் முதலீடுகளை அதிகரிப்பதற்கு தனது நாடு எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார்.

மலேசியாவின் ஈ- நீதிமன்ற தொழில்நுட்பத்தின் மூலம் வழக்குகளை விசாரிப்பதற்கான கால எல்லையை பெரிதும் குறைக்க முடிந்துள்ளதாக குறிப்பிட்ட மலேசிய பிரதமர், இத் தொழில்நுட்பத்தை இலங்கைக்கு பெற்றுத் தர விருப்பம் தெரிவித்தார்.

இலங்கையில் 14,000 மத்திய தர வர்க்க வீடுகளை நிர்மாணிப்பதற்கு மலேசியா இணக்கம் தெரிவித்ததுடன், இது தொடர்பான கலந்துரையாடல் இன்னும் சில தினங்களில் நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது 3.1 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 47 வெளிநாட்டு முதலீட்டு திட்டங்கள் மலேசியாவினால் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், அதனை மேலும் அதிகரிப்பது தமது எதிர்பார்ப்பாகும் என்றும் மலேசிய பிரதமர் தெரிவித்தார்.

சர்வதேச மன்றங்களில், குறிப்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு மலேசியா வழங்கிவரும் ஒத்துழைப்பை ஜனாதிபதி பாராட்டினார்.

போதைப்பொருள் மற்றும் ஆட் கடத்தல்களை கட்டுப்படுத்துவதற்கு புலனாய்வுத்துறை தகவல் பரிமாற்றத்தை மேலும் மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டியதுடன், இது தொடர்பாக துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்று மலேசிய பிரதமர் குறிப்பிட்டார்.

இரு நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பை மேம்படுத்தும் இரண்டு புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் ஒத்துழைப்பு உடன்படிக்கை ஒன்றும் இதன்போது கைச்சாத்திடப்பட்டன. இரண்டு நாடுகளுக்கிடையிலும் தூதுவர்களுக்கு பயிற்சியளிப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பனவும் மலேசிய பிரதி வெளிநாட்டலுவல்கள் அமைச்சரும் கைச்சாத்திட்டனர்.

இரு நாடுகளுக்கிடையில் விஞ்ஞான தொழில்நுட்பம், புத்தாக்க ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கை இலங்கை விஞ்ஞான தொழில்நுட்ப செயலகத்திற்கும் மலேசிய கைத்தொழில், உயர் தொழில்நுட்பத்திற்கான அரச பேரவைக்குமிடையில் கைச்சாத்திடப்பட்டது.

இலங்கை சார்பில் விஞ்ஞான தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைச்சின் செயலாளர் உதய ஆர் செனவிரத்னவும் மற்றும் மலேசிய கைத்தொழில் உயர் தொழில்நுட்ப அரச பேரவையின் தலைமை நிறைவேற்று அதிகாரியும் இதில் கைச்சாத்திட்டனர்.

இலங்கைக்கும் மலேசியாவுக்குமிடையில் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 60 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு மலேசிய பிரதமரின் இந்த விஜயம் இடம்பெறுவதுடன், அதனை நினைவுகூறும் வகையில் விசேட நினைவு முத்திரை ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

தபால் சேவைகள் அமைச்சர் அப்துல் ஹலீமினால் நினைவு முத்திரை இரு நாடுகளின் தலைவர்களிடமும் கையளிக்கப்பட்டது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான திலக் மாரப்பன, ஜோன் அமரதுங்க, ராஜித்த சேனாரத்ன, மலிக் சமரவிக்கிரம, சுசில் பிரேம ஜயந்த, தலதா அத்துகோரல, கயந்த கருணாதிலக்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

2 comments:

  1. எமது முஸ்லீம் அரசியல்வாதிகள் யாரும் இவரை சந்திக்கவில்லை போலத் தெரிகிறது.

    முஸ்லிம்களின் வீட்டுப் பிரச்னையை மலேசிய அதிபரிடம் கோரிக்கை விட யாரும் இல்லையா?

    ReplyDelete
  2. Why not my several comments regarding government or published. If this is a meadia. You must publish people comments with out second thoughts. Thank you

    ReplyDelete

Powered by Blogger.