Header Ads



காசாவை கையளிக்கும் ஹமாஸ், ஆயுதங்களை களைய மறுப்பு - இஸ்ஸதீன் அல் கஸ்ஸாமின் எதிர்காலம் குறித்து கேள்வி


பலஸ்தீன சமரச உடன்படிக்கையின் முக்கியமான காலக்கெடு நெருங்கி இருக்கும் நிலையில் ஆயுதங்களை களைவதை ஹமாஸ் அமைப்பு மீண்டும் ஒருமுறை நிராகரித்துள்ளது. இஸ்ரேல் மீது மேற்குக் கரையில் தாக்குதல்களை நடத்துவதாகவும் அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இஸ்லாமிய அமைப்பான ஹமாஸ் வரும் வெள்ளிக்கிழமை காசாவின் கட்டுப்பாட்டை இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்குக் கரையை தளமாகக் கொண்ட சர்வதேச அங்கீகாரம் பெற்ற பலஸ்தீன அரசிடம் கையளிக்கவுள்ளது.

எனினும் ஹமாஸ் அமைப்பின் ஆயுதப் பிரிவான இஸ்ஸதீன் அல் கஸ்ஸாம் படையின் எதிர்காலம் குறித்து கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் காசாவின் ஹமாஸ் துணைத் தலைவர் கலீல் அல் ஹய்யா கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கஸ்ஸாம் படையை குறிப்பிட்டு கூறும்போது, “எதிர்ப்பு போராட்டத்தின் ஆயுதங்கள் ஒரு சிவப்புக் கோடாக இருக்கும். அது பற்றி பேச்சுக்கு இடமில்லை” என்றார்.

“இந்த ஆயுதங்கள் மேற்குக் கரைக்கு கொண்டு செல்லப்பட்டு ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடுவோம். ஆக்கிரமிப்பு முடியும் வரை அதற்காக போராடுவது எமது உரிமையாகும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேற்குக் கரையில் சுமார் மூன்று மில்லியன் பலஸ்தீனர்களுடன் சர்வதேச சட்டத்தின்படி சட்டவிரோதமென கருதப்படும் குடியேற்றங்களில் சுமார் 400,000 இஸ்ரேலியர் வாழ்கின்றனர்.

2007 ஆம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றியது தொடக்கம் ஹமாஸ் காசாவில் ஆட்சி புரிகிறது. 

எனினும் ஆயுதக் களைவு இன்றி ஹமாஸ் அமைப்புடன் செய்துகொள்ளப்படும் எந்த ஒரு சமரச உடன்படிக்கையையும் ஏற்கப்போவதில்லை என்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளன.

பலஸ்தீன ஆட்சிப் பகுதியில் ஒரே ஒரு பாதுகாப்பு படையே இருக்க முடியும் என்று பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸும் வலியுறுத்தியுள்ளார்.

ஹமாஸ் மற்றும் பத்தா அமைப்புகளுக்கு இடையில் கடந்த ஒக்டோபர் 12 ஆம் திகதியே கெய்ரோவில் வைத்து சமரச உடன்படிக்கை கைச்சாத்தானது.

இதில் ஹமாஸ் ஆயுதப் பிரிவு பற்றி எந்த விபரமும் குறிப்பிடப்படவில்லை. 

No comments

Powered by Blogger.