Header Ads



ஜிந்தோட்டைக்கு கலவரத்திற்கு, யார் காரணம்..?


முஹிடீன் M.A. (Cey.)

கடந்த அரசாங்க கால வடுக்கள் மனதை விட்டும் நீங்காத நிலையில் கிந்தொட்ட நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன. அளுத்கம சம்பவம் ஒரு ஆட்டோ சம்பவத்தின் அடியாக ஆரம்பித்தது போல, கிந்தொட்ட சம்பவம் ஒரு மோட்டார் சைக்கிள் விபத்திலிருந்து புகைந்து பற்றியது என்று சொன்னால் வரலாற்று நினைவுள்ள எவரும் மறுக்க மாட்டார்கள்.

வீடுகள் உடைப்பு, கடைகள் தீவைப்பு, வாகனங்கள் மற்றும் ஏனைய பொருட்கள் சோதம் என பொருளாதார ஒழிப்பு நடவடிக்கைகள் இனவாதிகளினால் கிந்தொட்டயிலும் அரங்கேற்றப்பட்டன.

பொலிஸ் தகவல்களின்படி, இவ்வசம்பாவிதத்தில் சேதமடைந்த வீடுகள் – 66 எனவும், சேதமடைந்த வியாபார நிறுவனங்கள் – 26 எனவும், சேதமடைந்த பள்ளிவாயல்கள் இரண்டு எனவும் தெரிவிக்கப்படுகின்றது.  அத்துடன், பாதையில், வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 வாகனங்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் இதுவரை 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐவர் காயமடைந்த நிலையில் கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது கிந்தொட்ட அசம்பாவிதம் ஏற்படுத்திய விபரீதங்களின் விபரம்.

பாதுகாப்புக்கு வந்த பொலிஸார் வேடிக்கை பார்த்ததாகவும், பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டவர்கள் முஸ்லிம்கள் நடமாடுவதைத் தடுத்து தீவிரவாதக் கும்பலுக்கு இடங்கொடுக்கவே களத்தில் செயற்பட்டதாகவும் கடந்த காலத்தில் அளுத்கமை முஸ்லிம்கள் தமது கவலைகளாக முன்வைத்தது நினைவுக்கு வருகின்றது.

கிந்தொட்டயிலும் சம்பவத்தை அனுபவித்த மக்கள், ஒருபடி மேலே சென்று பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டவர்களும் சேர்ந்தே சேதம் ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர் எனவும், இதனை தான் கண்ணால் பார்த்ததாகவும் எந்த இடத்திலும் சாட்சி கூற வரத் தயார் எனவும் கூறுவதை நாம் உண்மையான வீடியோ காட்சிகளில் கண்டு கவலைப்பட்டோம்.

கிந்தொட்டயில் இவ்வாறான ஒரு நிலைமை வரும் என பாதுகாப்புப் பிரிவு ஏற்கனவே அறிந்திருந்தும் அதனைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுப்பதில் தவறிழைத்து விட்டதாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்திருந்தார்.

அப்பிரதேச செய்திகளை வெளியிட வேண்டாம் என பொலிஸ் தலைமையகமும், சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னநாயக்கவும் அறிவித்தல் விடுத்திருந்தமையும், உண்மையான செய்திகளையும் வதந்தி சாயம் இட்டு பொய்யாக்க முற்பட்டதையும் நாம் அனைவரும் ஊடகங்களில் கண்டோம்.

பெரும்பாலான சகோதர ஊடகங்கள் கிந்தொட்ட அசம்பாவிதங்களில் சேதங்களே ஏற்பட வில்லையென்பது போலவும் ஒரு சில வீடுகளின் யன்னல் கண்ணாடிகள் தான் கல்வீச்சுத் தாக்குதலில் உடைந்துள்ளது போலவும் காட்டின. இது ஒரு சமூகத்தின் முதுகெலும்பான பொருளாதார அழிவை பட்டப்பகலில் மூடிமறைக்க எடுத்த ஊடக துஷ்பிரயோகம் என்றே பார்க்கப்படுகின்றது.

உப்புத் திண்டவன் தண்ணீர் குடிக்க முடியாது என பிடிவாதம் பிடிப்பது நியாயமற்றதாகும். முஸ்லிம்கள் விட்ட தவறுகள் தான் இந்த இனவாத செயற்பாடுகளின் பின்னணிக் காரணமும், உடனடிக் காரணமும் ஆகும் என்பது வெளிப்படையாக சொல்ல முடியாத ஒரு கசப்பான உண்மையாகும்.
தர்கா நகரில் விட்ட தவறையே காயம் காய்வதற்கு முன்னர் மீண்டும் விட்டுள்ளனர் என பல சமூக புத்திஜீவிகளும் சிந்திந்து கவலைப்படுகின்றனர். இந்த நாட்டில் இனவாத விதைகள் பாடசாலை மாணவர்கள் உள்ளங்கள் தொடக்கம் தூவப்பட்டுள்ளன. அவற்றுக்கு நீர் ஊற்றும் பணியில் ஈடுபடாது தவிர்ந்து கொள்வது மாத்திரமே இனவாதிகளின் செயற்பாட்டுக்கான தடைப்புள்ளியாகும்.

இது எனது வீடு. நீ இதில் குடியிருப்பவன். உன்னால், வீட்டுக்கு உரிமைகோர முடியாது. வீட்டு உரிமையாளனுக்குரிய மரியாதையை நீ கொடுத்தேயாக வேண்டும் என்ற சிந்தனையையே இனவாதிகள் விதைத்து வருகின்றனர்.

இனவாதக் குட்டைகள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் உறைந்து போயுள்ளன. அவை சில நல்லவர்களிடையேயும் குழுங்கும் போது நல்ல நீரையும் அசுத்தமாக்கி விடுகின்றன. எல்லோரையும் நல்லவர்களாக சிந்திக்க வைக்கும் ஒரு யதார்த்தமான முயற்சி இஸ்லாம் காட்டும் வழிகாட்டலில் தான் உள்ளது என்பதை இந்த இடத்தில் ஞாபகப்படுத்தாது போனால் அது தவறாகும்.

யாரையும் ஏமாற்றி வாழலாம், காலம் கடத்தலாம் என்ற சிந்தனை மலையேறிப் போய்விட்டது. மாறாக, உள்ளத்தால் அடுத்தமனிதனை இஸ்லாம் காட்டும் நேயத்துடன் பார்த்து, வாழும் போதே குட்டையாகவுள்ள உள்ளங்களை வடிகட்டி சுத்தப்படுத்த முடியும்.

மீசை முறுக்கிக் கொண்ட செயற்பாடு எமது நாட்டில் ஆபத்தானது என்பதுதான் இனவாத வன்முறைகள் அனைத்தினதும் படிப்பினையாகும் என்பதை படித்தவர்கள் மட்டுமல்ல படியாதவர்களும் விளங்கிக் கொள்கின்றனர். அதற்காக நாம் அடிமைகளாக வாழ்வதா? என்று யாராவது கேட்டால் அதற்கு ஆம் ! என்று பதில் சொல்லவும் முடியாது என்பது மட்டுமல்ல கூடாது என்றே கூறுவது பொருத்தமாகும்.

அகிலத்தைப் படைத்த ரப்பு, முஸ்லிம்களை உன்னத சமூகம் என்றே அல்குர்ஆனில் குறிப்பிடுகின்றான். அவர்கள் இஸ்லாத்தை கையில் ஏந்தும் வரையில் தலைநிமிர்ந்து வாழ்வார்கள். யாரிடமும் மண்டியிட மாட்டார்கள். அனைவராலும் மதிக்கப்படுவார்கள் என்பது அல்குர்ஆனின் போதனைகள்.
எமது நாட்டிலும் முஸ்லிம்கள் இன்று எடுப்பார் கைப்பிள்ளையாகவும், செல்லாக் காசுகளாகவும் மாறுவதற்கும், அடிப்படைவாதம், இனவாதம் எனும் போர்வையில் உடைமைகள் அழிக்கப்படுவதற்கும் பிரதான காரணங்கள் பல எமது அறிஞர்களினால் சுட்டிக்காட்டப்படுகின்றன.

எமது நாட்டு முஸ்லிம்கள் முகம் கொடுத்துள்ள இனவாத வரலாற்றைப் பார்க்கும் போது  சமூகவியலாளர்களும், அறிஞர்களும் பல்வேறு கோணங்களில் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் இலங்கை முஸ்லிம்களின் இன முரண்பாட்டுக்கு தீர்வாக கருத்துக்களை முன்வைப்பவர்கள், சகிப்புத் தன்மையையும், சகவாழ்வையும் வழியுறுத்துவதனைக் காணலாம்.

இன்று இந்த சிந்தனையைக் கூட சில சமூக அமைப்புக்கள் மிம்பர் மேடைகளில் கிண்டல் செய்து அதற்குரிய பெறுமானத்தையும் சமூகத்தின் மத்தியில் இழிவாக்கியுள்ள ஒரு துர்ப்பாக்கிய நிலைமையை சொல்லாமல் இருக்க முடியாது.

இந்த நாட்டில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்கள் தமது அனைத்து விவகாரங்களையும் இந்த சகவாழ்வின் அடிப்படையில் அமைத்துக் கொள்ளும் போதே இந்நாட்டில் இனவாத சிந்தனையை ஒழிக்க முடிகின்றது.
மாறாக, வன்முறை, அடிப்படைவாதம் என்பன பற்றி கனவிலும் நினைத்துப் பார்க்கக் கூடாது என்பதே முஸ்லிம் சமூகத்தின் புத்திஜீவிகள், நியாயமாக சிந்திக்கும் சகலரதும் தீர்மானமாகும்.

எமது நாடு கடந்த 30 வருட காலம் முகம்கொடுத்த யுத்தப் படிப்பினை இதனைத் தான் எமக்குச் சொல்லியது. திரைப்படங்களின் தாக்கத்தினாலோ அல்லது ஏனைய நாடுகளை முன்மாதிரியாகக் கொண்டோ எமது நாட்டில் வன்முறைக்குப் பதில் வன்முறை என்ற தீர்மானத்துக்கு வருவது தவறானது என்று சொன்னால் தூரநோக்கோடு சிந்திப்பவர்கள் மறுக்க மாட்டார்கள்.

அடிவாங்கும் போது மாத்திரம், நாம் அனைவரும் முஸ்லிம்கள், ஒரு கலிமாவை மொழிந்தவர்கள் என கோஷம் எழுப்பிவிட்டு மீண்டும் பழைய குருடி கதவைத் திறடி என்ற நிலைக்கு சென்று விடுகின்றோம்.  சமூக ஒற்றுமை, எப்பொது இழக்கப்படுகின்றதோ அப்போது பலம் குன்றி சருகுகளாக மாறிவிடுவோம் என அல்குர்ஆன் எமது உயர்வுக்கான காரணத்தை வழிகாட்டிக் கொண்டே இருக்கின்றது.

தற்பொழுது நாட்டில் கடந்த அரசாங்கத்தில் காணப்பட்டது போன்றே இனவாத சூழல் ஒன்று உருவாகியுள்ளதைக் காணலாம். முஸ்லிம்கள் கடந்த காலத்தைப் போன்றே சந்தேகக் கண்கொண்டு பார்க்கப்படுகின்றார்கள். துவேசப் பேச்சுக்கள் பரவலாக காதில் கேட்க முடிகின்றது.

கடந்த கால வரலாறு மற்றும் நிகழ்கால நிலைமைகள் என்பவற்றை வைத்துப் பார்க்கும் ஒருவர், இந்த நாட்டில் இனவாதத் தீயை அணைப்பதற்கு மாற்றுவழியைத் தேட வேண்டும் என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளார்.   இந்த நாட்டில் எமது ஆரம்பகால முன்னோர்கள் அமைதியாகவும், நிம்மதியாகவும் சகோதர சமூகங்களிடத்தில் கௌரவமாகவும், இஸ்லாத்தை நடைமுறைப்படுத்திக் கொண்டு, தஃவாவும் செய்து கொண்டு வாழ்ந்திருக்கின்றார்கள்.

இந்த நாட்டிற்கு வியாபாரிகளாக வந்த அரேபிய முஸ்லிம்களின் நீதி, நேர்மை, ஒழுக்கப் பண்புகள், சகவாழ்வு சிந்தனை என்பவற்றால், கவர்ந்து, தனது மகளையும், கொடுத்து அவர்கள் தங்களுடன் இருக்க வேண்டும் எனச் சிந்தித்த சமூகமே இன்று எம்மை துரத்த வேண்டும் என மாற்றுக் கண்கொண்டு பார்க்கின்றது. இதற்கான காரணத்தை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

இந்த நாட்டிலுள்ள இனவாத அமைப்பான பொதுபல சேனா நேற்று  (18) வெளியிட்டிருந்த அறிக்கையில் பல்வேறு அழுத்தங்களை முஸ்லிம் சமூகத்துக்கு எழுத்துக்களால் வடித்திருந்தது. முஸ்லிம்கள் தானாக வலிந்து கட்டிக்கொண்டு பிரச்சினைக்கு வரவேண்டாம். ஒரு சில சம்பவங்கள் நிகழும் போது பொறுமையாக பொத்திக் கொண்டிருக்க வேண்டும். தூக்கிப் பிடித்துக் கொண்டு வந்தால் விளைவு மோஷமாகும். இப்படியான ஒரு நிலைமை வந்தால் அதனைத் தடுக்க யாராளும் முடியாது என்பதே அவர்கள் சொல்லவந்த கருத்தின் சுருக்கமாகும்.

கம்பு எடுத்துக் கொடுத்து அடிவாங்கும் நிலைக்கு நாம் செல்வதைத் தவிர்ந்து கொள்ள வேண்டும். சமூகப் பற்றுள்ள மூத்த புத்திஜீவிகள் கூறும் அறிவுரைகளில் அறிவு பெறும் மனப்பாங்கை வளர்த்துக் கொள்ள வேண்டும். எமக்கு வெளிப்படையாக தென்படும் ஓர் உண்மையை சரியான இடத்துக்கு கொண்டு போய்ச் சேர்க்க வேண்டிய வழி முறைகள் எமது மூத்த அனுபவசாலிகளிடத்தில் உள்ளன.

சூடான இரத்தத்தினால் உந்தப்பட்டு புத்தியை மீறி செயற்பட முற்படக் கூடாது. அவ்வான நிலைமைகள் சமூகத்தின் நிலைமையை மோசமாக்கும். தலைக்கு மேல் வெள்ளம் போகாமல் பார்த்துக் கொள்வது அனைவரினதும் பொறுப்பாகும். கூடி நின்று கூத்துப் பார்ப்பவர்களுக்கு காட்சிப் பொருட்களாக நாம் மாறாதிருக்க முயற்சிப்போம். (மு) 

3 comments:

  1. Very good writing .
    We live as a minority. This is a reality .we have all rights but we have to be sensible to act and react to any incident .
    Any small incident could become big violence as this and so we should behave with more responsible manners .
    It is true we are victims and yet we should be careful in dealing with small incidents

    ReplyDelete
  2. (அடி) பட்டுக் கொண்டே இருப்பேபோம்.
    ஏன் திருந்த வேண்டும்?

    ReplyDelete
  3. சிறந்த கருத்துக்கள்.  அடிப்படைவாதிகள் என்பதன் அர்த்தம் என்னவோ? 

    ஆனால்,  இந்நாட்டில் இஸ்லாமிய  அடிப்படைவாதிகள் குறைவாக இருப்பதே, இப்படியான பிரச்சனைகளை அனைத்துச் சமூகங்களும் எதிர்கொள்ளக் காரணம், என் நான் கருதுகின்றேன்

    ReplyDelete

Powered by Blogger.