Header Ads



கத்தாருக்கு மாடுகள் தேவை, குளிர்சாதன வசதியும் வழங்கப்படும்

கத்தார் தற்போது நிறைய மாடுகளை வாங்கவுள்ளது. அந்நாட்டுக்கு இப்போது ஆயிரக்கணக்கான மாடுகள் தேவை.

அந்த மாடுகள் இல்லாவிட்டால் 27 லட்சம் மக்கள்தொகை கொண்ட அந்த நாடு தன் உணவுத் தேவைகளுக்காக பிற நாடுகளின் உதவியை எதிர்நோக்கி இருக்க வேண்டும்.

கடந்த ஜூன் 5 அன்று சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் கத்தார் உடனான தொடர்பைத் துண்டித்துக் கொண்டன.

அதனால், உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. குறிப்பாக பால் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. அவை அனைத்தும் சௌதி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்டுகளில் இருந்து வந்தன.

சௌதியால் தரைவழி மூடப்பட்டுவிட்டதால், துருக்கி மற்றும் இரான் ஆகிய நாடுகளிடம் இருந்து வான்வழியாக அதிக பொருட் செலவில் இறக்குமதி செய்யவேண்டியுள்ளது.

பாதிப்பை உணர்ந்துள்ள கத்தார் தனது உணவுத் தேவைகளை பூர்த்தி செய்ய முயன்று வருகிறது. பல்தானா எனும் ஒரு தனியார் பால் பண்ணை ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் இருந்து 600 மாடுகளை இறக்குமதி செய்துள்ளது.

பாலை வனத்தின் மத்தியில் குளிர்சாதன வசதி செய்யப்பட்டு அந்தப் பசுக்கள் பராமரிக்கப்படுகின்றன. 13,000 அல்லது அதற்கும் மேற்பட்ட பசுக்களை பராமரிக்கும் வசதி செய்யப்பட்டு வருகிறது.

அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜான் ஜோசஃப் தோர் இந்த ஆண்டு இறுதிக்குள் 3000 பசுக்கள் இறக்குமதி செய்யப்படும் என்று அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் மேலும் 10,000 பசுக்கள் இறக்குமதி செய்யப்படும் என்றும் பிபிசியிடம் கூறினார்.

மே 2018 வாக்கில், அங்குள்ள 14,000 பசுக்களும் நாளொன்றுக்கு சுமார் 300 டன் பால் உற்பத்தி செய்யும் என்றும் இதனால் கத்தார் பால் உற்பத்தியில் தன்னிறைவு அடையும் என்றும் அவர் கூறினார்.

இந்த புதிய ஏற்பாடுகள் இந்த ஆண்டின் இறுதிக்குள் செய்யப்பட்டு, அங்கு ஒரே சமயத்தில் 100 பசுக்கள் கறவை செய்யும் ஒரு கூடம் மற்றும் 80 பசுக்கள் கறவை செய்யும் மூன்று கூடங்கள் ஆகியவை அமைக்கப்படும்.

இவற்றை செய்து முடிக்க 300 கோடி கத்தார் ரியால் (90 மில்லியன் அமெரிக்க டாலர்) செலவாகும் என்று அவர் கூறினார்.

"பொருளாதார தடை விதிக்கப்படுவதற்கு முன் 80-85% பால் தேவைகளுக்காக கத்தார் சௌதி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்டுகளை நம்பி இருந்தது. பால் தேவையை பெரு நிறுவனங்கள் பூர்த்தி செய்து வந்தன என்பது எங்களுக்கு தெரியும். இப்போது நாங்கள் அந்த வாய்ப்பை பற்றிக்கொள்ள விரும்புகிறோம்," என்கிறார் ஜான்.

பால் தவிர, தனது 80% காய்கறி தேவைகளை கத்தார் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து பூர்த்தி செய்து வருகிறது. உள்நாட்டு தேவைகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு போதுமான காய்கறி உற்பத்தியை கத்தாரிலேயே செய்ய முடியும் என்று சில கத்தார் வேளாண் நிபுணர்கள் கூறுகின்றனர்.

கத்தாரில் உள்ள 1,400 வேளாண் பண்ணைகளில் 300 மட்டுமே இயங்குகின்றன. அதுவும் ஆண்டு முழுதும் அல்லாமல் சில பருவங்களில் மட்டுமே செயல்படுகின்றன.

வடக்கு கத்தாரில் உள்ள அக்ரிகோ எனும் பண்ணை கடந்த மூன்று ஆண்டுகளாக, ஆண்டு முழுவதும் இயங்குகிறது.

ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான மாதங்களில் கத்தார் பருவநிலை வெப்பமாகவும் வறண்டும் இருப்பதால், அது வேளாண்மைக்கு ஏற்றதாக இருக்காது என்று அந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் நாசர் அல்-கலாஃப் கூறுகிறார்.

"ஆண்டு முழுதும் வேளாண் உற்பத்தி செய்யத் தொடங்கிய கத்தாரின் முதல் பண்ணை எங்களுடையதுதான். பல ஆண்டுகள் அறிவியல் சோதனைகள் செய்த நாங்கள், இதை வெற்றிகரமாக செய்ய முடியும் என்று நிரூபணம் செய்துள்ளோம்," என்று அவர் கூறியுள்ளார்.

1,20,000 சதுர மீட்ட பரப்பளவு கொண்டுள்ள அந்த பின்னணியில் தக்காளி, வெங்காயம், காளான், பழங்கள் என பலவும் விளைவிக்கப்படுகின்றன.

உள்நாட்டு வேளாண் உற்பத்தியை அதிகரிக்க இத்தகைய முயற்சிகளை ஊக்குவிக்க அரசு முடிவு செய்துள்ளதாக அவர் கூறுகிறார்.

"எங்கள் தொழில்நுட்பத்தை நாங்கள் அரசுடன் பகிர்ந்து கொள்கிறோம். பிற பண்ணைகளும் அதை செய்கின்றனர் என்று நான் நம்புகிறேன். சில ஆண்டுகள் கடுமையாக உழைத்தால் நாம் நமக்கு தேவையான உணவை உற்பத்தி செய்ய முடியும் என்று நம்புகிறேன், " என்கிறார் அவர்.

காய்கறி உற்பத்தியில் தன்னிறைவு பெற 3-5 ஆண்டுகள் ஆகும். ஆனால் அவர்காளால் எல்லா வேளாண் பொருட்களையும் உற்பத்தி செய்ய முடியாது. அதிக நீர் தேவைப்படும் கரும்பு, சோளம் போன்றவற்றை அவர்களால் உற்பத்தி செய்ய முடியாது.

வேளாண்பொருட்கள் சேமித்து வைக்கும் கிடங்குகளை கட்ட தனியார் நிறுவனத்துக்கு கத்தார் அரசு ஒப்பந்தம் அளித்துள்ளதாக தெரிகிறது. அக்கிடங்குகளால் 30 லட்சம் மக்களுக்கு, இரண்டு ஆண்டுகளுக்குத் தேவையான உணவைச் சேமித்து வைக்க முடியும் என்கின்றன உள்நாட்டு ஊடகங்கள்.

No comments

Powered by Blogger.