Header Ads



"அஷ்ரப்பின் மரணம்" - நான் நேரடியாக, நீதிமன்றம் நாடுவேன் - பஷீர் சேகுதாவூத்

(ஆதில் அலி சப்ரி)

கேள்வி: மறைந்த அமைச்சர், முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த சர்ச்சையை திடீரென தூக்கிப் பிடித்தமைக்கான காரணம் என்ன?

பதில்: இது திடீரென எடுத்த விடயமல்ல. தலைவர் மறைந்து மூன்று மாதங்களிலே இவ்விடயம் குறித்து பாராளுமன்றில் கேள்வியெழுப்பினேன். அது சந்திரிக்கா அம்மையார் ஜனாதிபதியாக இருந்த காலம். தலைவரின் மறைவு குறித்து ஆராய அவர் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றையும் நியமித்திருந்தார். நான் கடந்த 2001ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11ஆம் திகதி பாராளுமன்றில் அவசர கால சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றும்போது,
‘எங்களுடைய தலைவர் அஷ்ரபின் மரணம் ஹெலிகொப்டர் விபத்தொன்றினால் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. அவர் மரணித்து நான்கு மாதங்களாகின்றன. அரசாங்கமும், இந்த நாட்டிலுள்ள புலனாய்வுப் பிரிவினரும் அவசரமாக கவனமெடுத்து, அவருடைய மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என்பதை ஆராய்ந்து தெளிவுபடுத்த வேண்டும். நாட்டில் நடந்த பல ஹெலிகொப்டர் விபத்துகளும், கொலைகளும் ஒருவார காலத்திற்குள் கண்டறியப்பட்ட வரலாறு உண்டு. ஏன் இவ்விடயத்தில் நான்கு மாதங்களாகியும் தீர்வில்லை. இவ்விடயத்தை ஆணைக்குழு மற்றும் உளவுத்துறை ஆகியன ஒருசேர தலைவரின் மரணம் குறித்து ஆராயவேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தேன்.

2001 மார்ச் மாதம் 7ஆம் திகதி சபையில், ‘ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபின் மரணத்தைப் பற்றிய மர்மம் இன்னும் துலக்கப்படவில்லை என்பதை மீண்டும் குறிப்பிட விரும்புகின்றேன். அவருடைய மனைவி கௌரவ அமைச்சர் பேரியல் அஷ்ரப் தமது இத்தா கடமையை முடித்துக்கொண்டு இந்த சபைக்கு வந்து பல நாட்கள் கடந்துவிட்டன. இந்தச் சூழ்நிலையில் எமது தலைவருக்கு என்ன நடந்தது? மரணத்தின் மர்மம் என்ன? என்பது துலக்கப்பட வேண்டும் என்று மீண்டும் மீண்டும் நான் இந்தச் சபையில் கோரிக்கை விடுக்க விரும்புகின்றேன்.’
இதற்குப் பின்னரும் பேசிய சந்தர்ப்பங்கள் உண்டு. இது திடீரென வந்த ஒன்றல்ல. எப்போதுமே இது மனதில் இருந்தது. ஆனால், இப்படியான முக்கியமான விடயங்களில் கவனம் செலுத்தி அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி, ஆணைக்குழுவின் அறிக்கையை பெற்றிருக்க வேண்டிய பொறுப்பு கட்சியை பொறுப்பேற்ற தலைவரையே சாரும். நாம் தலைவருக்கு முட்டுக்கொடுக்கும் வேலையையே செய்தோம். எல்லாம் செய்வார். பார்ப்பார் என்று. 2015வரை இதுவே தொடர்ந்தது. பல தடவைகளும் கட்சித் தலைமையுடனும், ஏனையோருடனும் இது குறித்து பேசியும் உள்ளேன். ஸ்தாபகத் தலைவருக்கு பின்னர் தலைவரான றவூப் ஹக்கீம் அதுகுறித்து எவ்வித அக்கறையும் எடுக்கவில்லை.
காலப்போக்கில் கட்சியை ஒரு தனி நபர் கைப்பற்ற எடுத்த முயற்சியில், தலைவர் அஷ்ரப் உருவாக்கிய கட்சியின் யாப்பும் மாற்றப்பட்டு, தனிநபர் அதிகாரத்திற்கு கட்சி உட்பட்டது. இதன் பின்னர் நான் பல விடயங்களையும் மீள்பரிசீலனைக்கு உட்படுத்தவேண்டிய தேவையேற்பட்டது. 17 வருட காலமாக இருக்கும் கட்சியின் உள்ளார்ந்த பிரச்சினைகளை எடுத்து, தூசு தட்டி, அதனை ஆய்வு செய்து, அதற்குரிய பெறுபேறுகளை பெற்றுக்கொள்ளவேண்டிய அவசியம் இருந்தது. ஏனெனில் இது மக்களுடைய கட்சியாகும். தனி நபரொருவருடைய கட்சியல்ல. அதனடிப்படையில் தலைவரின் மரணம் குறித்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை வெளியில் எடுத்தல், கொள்ளையடிக்கப்பட்ட தாருஸ்ஸலாத்திற்கு நீதியைப் பெற்று மக்கள் கையில் ஒப்படைத்தல், மீண்டும் யாப்பை தனி நபர் அதிகாரத்தில் இருந்து மீட்டு மக்கள் யாப்பாக மாற்றல் போன்ற பல விடயங்கள். தனி நபர் சார்ந்த விடயங்கள் கட்சிக்கும் சமூகத்துக்கும் பாதகமான விளைவுகளையும், நாட்டிலும், சர்வதேசத்திலும் முஸ்லிம் சமூகத்துக்கென்று இருந்த பேரம்பேசும் அதிகாரத்தை முற்றாக இல்லாது செய்தது.

கேள்வி: சந்திரிக்கா அம்மையாரின் ஆட்சியில் மேற்கொண்ட முயற்சிகளை கூறியிருந்தீர்கள். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் பலமான அமைச்சரொருவராக இருந்தீர்கள். அதன்போது தலைவரின் மரணம் தொடர்பான சந்தேகத்தை துலக்க முயற்சிகள் மேற்கொள்ளவில்லையா?

பதில்: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் எவ்வித முயற்சிகளும் எடுக்கப்படவில்லை. இது கிடப்பில் போடப்பட்டிருந்தது. அதனை தோண்டியெடுக்கவேண்டும் என்ற அவசியமோ, சிந்தனையோ அந்த காலகட்டத்தில் வரவில்லை. இதுவோர் நீண்டகால பிரச்சினையாக தொடர்ந்தது. நான் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று, எல்லா விடயங்கள் குறித்தும் மீள்பரிசீலனை செய்யும் அவசியம் 2015இன் பின்னரே தோன்றியது.

 கேள்வி: தலைவரின் மரணத்தில் சந்தேகம் வந்ததற்கான விஞ்ஞான ரீதியாக அல்லது அரசியல் ரீதியாக அவதானங்கள் உண்டா?

  பதில்: இவ்விடயம் தொடர்பாக உட்கட்சிக்குள் சில கலந்துரையாடல்கள் நடந்துள்ளன. சிலர் சிலவிதமான கருத்துக்களை கூறியுள்ளனர். மிக முக்கியமான ஒருவர். மறைந்த தலைவர் அஷ்ரபின் குடும்பத்தவரும் கூட. அவர் ஓர் ஆண். பெண் என்றால் மனைவியென்று நினைக்க வாய்ப்புள்ளது. அவர் இன்றும் கட்சியில் முக்கிய பதவி வகிப்பவர். நாம் ஒரு குழுவாக இருந்து பேசிக்கொண்டிருக்கும்போது, ‘தலைவர் 2000ஆம் ஆண்டு தேர்தலில் ஓர் ஹெலிகொப்டர் விபத்தில் தப்பி,
தேர்தலுக்காக அனுதாபம் தேட எடுத்த முயற்சியின்
தோல்விதான் மரணத்தில் முடிந்தது’ என்று குறிப்பிட்டார்.
அப்படியொரு வாய்ப்பே கிடையாது. யதார்த்தமாக, தத்துவார்த்த ரீதியாக அவ்வாறு நடக்க வாய்ப்பே இல்லை. இன்றும் அந்த கதை. இவற்றை திருப்பிப் பார்ப்பதற்கான தூண்டுதலாக உள்ளது. விஞ்ஞான பூர்வமாக என்று கூறுவதை விட, அரசியல்பூர்வமாக- பின்னர் சிந்திக்கும்போது, தலைவரின் மரணம், மரணத்தைத் தொடர்ந்து வந்த கட்சியின் நடவடிக்கைகள் என எல்லாவற்றையும் தொகுத்து பார்க்கும்போது அந்தக் காலத்தில் ஏற்பட்ட அரசியல் தேவை அவரை மரணிக்கச் செய்ததா? என்று தோன்றுகின்றது. நீண்ட கால அரசியல் ஆய்வு மாணவன் என்றவகையில் இதற்கான மர்மங்களை துலக்கவேண்டிய அவசியம் எனக்குள்ளது.

கேள்வி: தலைவர் அஷ்ரபின் மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதியரசர் எல்.கே.ஜி.வீரசேகர அறிக்கையைப் பெற்றுக்கொள்ள எடுத்த முயற்சிகள் குறித்து தெளிவுபடுத்த முடியுமா?

பதில்: நான் முதன் முதலில், தகவல் அறியும் சட்டமூலம் வருவதற்கு முன்னதாகவே ஜனாதிபதியின் செயலாளருக்கு, அறிக்கையைக் கேட்டு கடிதமொன்று எழுதினேன். அந்த நேரம் அதற்கு எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் வாய்மொழிமூலமாக பதிலளித்தார். அறிக்கையை இப்போது பெற்றுக்கொள்ள முடியாது. தகவல் அறியும் சட்டமூலங்கள் அண்மையில் வரவாய்ப்புள்ளது. அப்படி வந்தால் விண்ணப்பிக்கக் கூறினார்.
தகவல் அறியும் சட்டமூலம் வந்தவுடன் தலைவரின் மரணம் குறித்த அறிக்கையை கோரி எழுத்துமூலம் விண்ணப்பித்தேன். நேரடியாக ஜனாதிபதிக்கும், அதன் பிரதியை ஜனாதிபதியின் செயலாளருக்கும் அனுப்பினேன். தகவல் அறிவதற்கான அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக பதிலளித்தனர். ஜனாதிபதி காரியாலயத்தின் தகவல் அதிகாரியிடமும் விண்ணப்பித்தேன். எல்.கே.ஜி.வீரசேகர அறிக்கையை தேசிய சுவடிக் கூடத்துக்கு அனுப்பிவைத்துள்ளதாகவும், அங்கிருந்து பெற்றுத் தருவதாகவும் அவர் அறிவித்தார். பின்னர் குறித்த அறிக்கையை தேடியும் கிடைக்கவில்லை என்று அறிவித்தார்.
குறித்த காலத்தில் பதில் கிடைக்காவிடின் தகவல் ஆணைக்குழுவுக்கு விண்ணப்பிக்கலாம். நான் உடனடியாக ஆணைக்குழுவுக்கு சென்றேன். அந்த தகவல் ஆணைக்குழுவின் முடிவு, அறிக்கை காணாமல் போயுள்ளதாக இருந்தது. தகவல் ஆணைக்குழு வாய் மூலமான சாட்சியமொன்றை பெற அழைத்தது. நான் சாட்சியம் அளித்தேன். தேசிய சுவடிக் கூடத்திலிருந்து அறிக்கையின் அட்டை அனுப்பிவைக்கப்பட்டிருந்ததாகவு ம், அட்டையினுள் அறிக்கை இருக்கவில்லை என்றும் ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளர் ஒருவர் தெரிவித்தார். சட்டபூர்வமாக அட்டையுள்ளது. உள்ளேயுள்ள ஆவணமில்லை. இங்கு ஏதோவோர் சதி இருப்பது தெளிவாகின்றது. தேசிய சுவடிக்கூட சட்டங்களின்படி 30 வருடங்கள் ஆவணமொன்று பாதுகாக்கப்பட வேண்டும். இங்கு தவறு நடந்துள்ளது. தேசிய சுவடிக்கூட பொறுப்பதிகாரியை எதிர்வரும் 20 ஆம் திகதி தகவல் ஆணைக்குழு விசாரிக்கவுள்ளது. இதுவே இப்போதைய நிலவரம்.

கேள்வி: எதிர்வரும் 20ஆம் திகதியும் முடிவுகள் திருப்தியளிக்காதபோது, உங்கள் நடவடிக்கைகள் எவ்வாறானதாக இருக்கும்?

பதில்: தகவல் ஆணைக்குழுவின் முடிவுகள் எவ்வாறானதாக இருக்கும் என்று ஊகிக்க முடியாது. அறிக்கை குறித்த விபரம் தேசிய சுவடிக் கூடத்திலிருந்து தகவல் ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கும் அதிகாரியில் தங்கியுள்ளது. தகவல் ஆணைக்குழு இவ்விடயத்தில் கைவிரிக்கும்போது, நான் நேரடியாக நீதிமன்றம் நாடுவேன். வீரசேகர ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் எல்.கே.ஜி.வீரசேகர இன்னும் உயிரிருடன் இருப்பதாக நினைக்கிறேன். நீதிமன்றம் அவரிடம் விசாரணை மேற்கொள்ளும்.

கேள்வி: இவை, முஸ்லிம் காங்கிரஸில் இருந்து ஒதுக்கப்பட்ட பின்னர் அரசியல் இலாபம் தேட எடுக்கும் முயற்சியா?

பதில்: இவ்வாறு கூறுபவர்களுக்கு சில விடயங்கள் புரியவில்லை. நான் தான் பிரதிநிதித்துவ அரசியலில் இல்லையே. நான் எந்த கட்சியையும் பிரதிநிதித்துவப்படுத்தவும் இல்லை. அப்படியிருக்கும்போது இதில் என்ன அரசியல் இலாபம் தங்கியுள்ளது. அப்படியான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்கள், நான் இதனால் எவ்வகையாக அரசியல் இலாபம்
தேடுகிறேன் என்பதையும் கூறவேண்டுமே. அரசியல் இலாபம் பெறப்படுகிறதோ, இல்லையோ தலைவரின் மறைவுக்கான காரணத்தை கண்டறிந்து சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை பெறப்படவேண்டும். தலைவரின் மரணம் குறித்த அறிக்கையை பெற முயற்சிக்கும்போது, அதற்கெதிராக கூறும் மிகப் பலவீனமான, இயலாமையின் குற்றச்சாட்டே அரசியல் இலாபமென்பது.
நாம் எப்போதும் முஸ்லிம் காங்கிரஸ்தான். முஸ்லிம் காங்கிரஸின் கொள்கை கோட்பாடுகள், அஷ்ரபின் அரசியல் விருப்பங்கள், தலைவர் போன பாதையை விட்டு விலகிய, அதில் இல்லாதவர்களுக்கே அது பிரச்சினை. எங்களுக்கு அது பிரச்சினையல்ல. நாம் அரசியல் ரீதியாக கருத்துக்களை வெளியிடுவோம். முஸ்லிம் காங்கிரஸில் இன்றுள்ளவர்களில் முதல் பாராளுமன்றம் சென்றவன் நான். 19வயதில் அரசியலில் நுழைந்தேன். சமூகத்துக்கான அரசியல் குரல் தொடர்ந்தும் இருக்கும்.

கேள்வி: உங்களது அரசியலில் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து கூறமுடியுமா?  

பதில்: சமூகத்துடனான கலந்துரையாடலே இனிவரும் காலங்களில் என்னுடைய அரசியலாக இருக்கும்.
சிவில் சமூக செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு முஸ்லிம் சமூகத்தில் அதிகமானோர் உள்ளனர். இனியொரு சமூக சேவகனாக, அரசியலை சமூகத்துடன், புதிய பரம்பரையுடன் கலந்துரையாடுவது, எழுத்துப் பணி போன்றனவே தொடரும். ஓரளவுக்கு எழுதவும் பேசவும் அல்லாஹ் அருள்புரிந்துள்ளான். அதனை மக்களுக்கும் சமூகத்துக்கு பயன்தரும் விதத்தில் பயன்படுத்துவேன்.
சமூகம் தொடர்பான அரசியல் ஆலோசனைகள் கேட்கப்படுமிடத்து எந்த தரப்பினருடனும் கலந்துரையாட முன்வருவேன். சுதந்திர ஊடகவியலாளர்களைப் போன்று, சுதந்திர அரசியல்வாதியாக இருக்க விரும்புகின்றேன்.

கேள்வி: சாய்ந்தமருது- கல்முனை விடயம் சூடுபிடித்துள்ளது. இதுதொடர்பாக உங்கள் நிலைப்பாடென்ன?

பதில்: முஸ்லிம் அரசியலுக்கு பின்னால் உள்ள வாக்குறுதி அரசியல், கதாநாயக பிம்பங்களுக்கு பின்னாலும் வழிபடும் தன்மைகளுடன் சென்றதே இந்நிலைமைக்கு பிரதான காரணம். இவ்விடயத்தில் சம்பந்தப்படும் எல்லா தரப்புகளும் கலந்துரையாடலொன்றுக்கு அமரவேண்டும். அதற்கான வியூகமொன்று வகுக்கப்படவேண்டும். மக்கள் விருப்பங்கள் நிறைவேற்றப்படவேண்டும். சாய்ந்தமருது மக்களுக்கு ஒரு விருப்பம் இருக்கலாம். அந்த விருப்பம், உள்ளூராட்சி சபையொன்றால் தங்களை தாங்களே ஆளவேண்டும் என்ற விருப்பத்தை யாரும் நிராகரிக்க முடியாது.
அதேநேரம், கல்முனை மக்களுக்கும் ஒரு விருப்பம், அச்சம் இருக்கலாம். அந்த அச்சம், இந்த வட்டத்துக்குள் வாழும் முஸ்லிம்கள் பிரிந்தால் தங்களுடைய உள்ளூராட்சி பிரிவில் தங்களுடைய பிடிமானம் தளர்ந்துவிடுமா? என்ற சந்தேகமும் தொடர்கின்றது. ஆகவே இது அமர்ந்து ஆழமாக கலந்துரையாடப்படவேண்டிய விடயமாகும்.
இதுவரையிலும் குறித்த இரண்டு தரப்பும் உட்கார்ந்து பேசவில்லை. சாய்ந்தமருதும் கல்முனையும் உட்கார்ந்து பேசி, இதனை எவ்வாறு வடிவமைக்கலாம் என்று கலந்துரையாட வேண்டும். அதன்படி செயற்பட வேண்டும். எதிரும் புதிருமான செயற்பாடுகள் ஆரோக்கியமாக அமையாது. இது கிழக்கு மாகாண முஸ்லிம்களின் அரசியலில் தனித்துவமான தளம். அந்த தளத்தில் பிரச்சினைகள் தொடரக்கூடாது. புரிந்துணர்வுடன் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள முன்வரவேண்டும். உள்ளூராட்சி நிர்வாக கட்டமைப்பு, எல்லை நிர்ணயம் தொடர்பான துறைசார்ந்தோர் முஸ்லிம் சமூகத்தில் உள்ளனர். அவர்களின் உதவிகளுடன் சிவில் சமூகமும் ஒன்றிணைந்து, ஸலாம் கூறி பேசி, ஒற்றை முடிவொன்றுக்கு வரவேண்டும்.

கேள்வி: நீங்கள் ஓர் அரசியல் அவதானி என்றவகையில், இவ்விடயத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றின் அணுகுமுறைகள் எவ்வாறுள்ளன?

பதில்: இவ்விடயத்தில் நீண்ட கால வாக்குறுதிகளை வழங்கி வருவது முஸ்லிம் காங்கிரஸ். குறுகிய கால வாக்குறுதிக்குள் உட்புகுந்ததே மக்கள் காங்கிரஸ். இரு சாராரும் வாக்குறுதிகளை வழங்கியுள்ளனர். இந்த வாக்குறுதியை மக்கள் காங்கிரஸ் தேர்தலை அடியொட்டி வழங்கவில்லை. எனினும், பல தடவைகளிலும், பல தேர்தல்களை அடியொட்டி முஸ்லிம் காங்கிரஸ் வழங்கியுள்ளது. இந்த பிரச்சினை தலைவர் அஷ்ரப் இருக்கும் வரை தோன்றவில்லை. இந்த கோரிக்கை உருவாகி 10 அல்லது 12 வருடங்களே இருக்கும்.

கேள்வி: வடக்கு- கிழக்கு இணைப்பு குறித்த விடயத்தை எவ்வாறு காண்கின்றீர்?

பதில்: தற்போதைய அரசியல் சூழ்நிலையில் வடக்கும் கிழக்கும் பிரிந்திருப்பதுதான் முஸ்லிம்களுக்கான அரசியல் பாதுகாப்பு என்பதே எனது நிலைப்பாடு. ஏனைய விடயங்கள் குறித்து தமிழர்களும் முஸ்லிம்களும் கலந்துரையாடி தீர்வுகாண வேண்டும். கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம்களின் அரசியல் அபிலாசைகள் வடகிழக்கு இணைப்பால் தாக்கப்படும் என்பதே உண்மை.

கேள்வி: முஸ்லிம் காங்கிரஸின் தற்போதைய தலைவரின் சில முறைகேடுகளை வெளியிடப்போவதாக நீங்கள் குறிப்பிட்டிருந்தது சமூக வலைத்தளங்களில் வெகுவாக பரவின. இது சமூக நலன் நோக்கத்திலா? அல்லது ஓர் அழுத்த சக்தியாக பயன்படுத்த முனைந்தீர்களா?

பதில்: அப்படியொரு விடயம் நடந்தது என்ற உண்மையை மக்களுக்கு கூறவேண்டிய தேவை இருந்தது. நான் முதல் கூறிய கட்சி மீள்பரிசீலனை அம்சங்களில் இதுவும் முதன்மையாக இருந்தது. ஆகவே அந்த விடயத்தை மக்களுக்கு தெளிவுபடுத்த முயன்றேன். மாறாக, தனி நபர்களையோ, தனிக் குடும்பங்களையோ தாக்க முற்படவில்லை. குறைந்தது இரண்டு குடும்பங்கள் சம்பந்தப்பட்டதாக இருக்கும். றவூப் ஹக்கீம் என்ற என்ற தனிநபர், குறித்த பெண் மற்றும் அவள் குடும்பத்தின் எதிர்காலம் தொடர்பான பார்வையொன்றும் உள்ளது. அதேநேரம், தனிக் குடும்பங்களைவிட சமூகத்தின் பிரச்சினை மிகைக்கும்போதே நான் அதனை வெளியிட முயன்றேன். சந்தர்ப்பம், சூழ்நிலை, நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தி, இதுதொடர்பில் மக்களுடன் பேசவேண்டிய அவசியம் ஏற்பட்டால் பேசவும் தயாராக உள்ளேன்.

கேள்வி: மீண்டுமொரு முறை முஸ்லிம் காங்கிரஸிலிருந்து அழைப்பு வந்தால் உங்கள் முடிவு எவ்வாறானதாக இருக்கும்?

பதில்: நான் முஸ்லிம் காங்கிரஸுக்கு எதிர்ப்பானவன் அல்ல. முஸ்லிம் காங்கிரஸில் இருந்து அழைப்பு வராது. ஏன் எனின் முஸ்லிம் காங்கிரஸ் தனி நபரொருவரின் கையில் அகப்பட்டு காற்றில் தொங்குகின்றது. அழைப்பு றவூப் ஹக்கீம் என்ற தனிநபரிடமிருந்தே வரவேண்டியுள்ளது. கட்சியை முறையாக வழிநடத்தக்கூடிய தலைவராக நான் அவரை கருதவில்லை. இவ்வளவு தூரம் சென்றபின்னரான அழைப்பு, அதில் ஓர் ஒன்றிப்பு, உடன்பாடு வரமுடியுமென்று நான் நினைக்கவும் இல்லை. நான் ஏற்கனவே கூறியது போன்று சுதந்திர அரசியல்வாதியாக, சமூக சேவகனாக, ஆலோசகராக செயற்படவே விரும்புகின்றேன்.

2 comments:

  1. joke by a joker. election gimmick.

    ReplyDelete
  2. Basheer segu u r a money minded man..no truth can expect from u...so many examples

    ReplyDelete

Powered by Blogger.