Header Ads



பெண்களை டுபாய்க்கு அனுப்பிய, பிக்கு கைது

தர்ம பிரசாரத்திற்காக துபாய் நாட்டுக்கு செல்வதாக கூறி பல காலமாக சட்டவிரோதமாக பெண்களை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்த பிக்கு ஒருவர் உட்பட மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகள் இவர்களை கைது செய்துள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் நடந்துக்கொண்ட 10 பெண்களிடம் பணியகத்தின் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

பிக்கு ஒருவரின் உதவியுடன் தாம் வெளிநாட்டுக்கு பணிப் பெண்களாக செல்ல உள்ளதாக அந்த பெண்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து பிக்குவிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

துபாய் நாட்டில் நடக்கும் தர்ம போதனைக்காக 10 பெண்களை அழைத்துச் சென்று அங்கிருந்து நேபாளத்திற்கு யாத்திரை அழைத்துச் செல்ல உள்ளதாக பிக்கு அதிகாரிகளிடம் கூறியுள்ளார். இதனையடுத்து அதிகாரிகள் அவர்களை கைதுசெய்துள்ளனர்.

வட்டுகொட, மீகொடமுல்ல ஜயசிறி விகாரையில் வசித்து வரும் பள்ளதெனிய ரதனசிறி தேரர் என்ற பிரதான சந்தேக நபரும், பொரள்ளை சஹசுபுர பிரதேசத்தை சேர்ந்த ஹெட்டியாராச்சி சுரஞ்சித், வெல்லம்பிட்டி, மீதொடமுல்ல பிரதேசத்தை சேர்ந்த சசித சங்கல்ப ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஏற்கனவே நான்கு முறை பெண்களை துபாய் நாட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளமை விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

5 வயதுக்கும் குறைந்த வயதுடைய குழந்தைகள் இருக்கும் பெண்கள் வெளிநாடுகளுக்கு தொழில் புரிய செல்வது சட்டவிரோதமானது என்ற காரணத்தினால், பொய்யான தகவல்களை வழங்கி பெண்களை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

பெண்கள் யாத்திரை செல்பவர்கள் போல் வெள்ளை ஆடை அணிந்து காணப்பட்டுள்ளனர். சந்தேக நபரான பிக்கு பெண்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபா வழங்கியுள்ளார்.

ஏனைய இரண்டு சந்தேக நபர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபா வழங்கியுள்ளார். பெண்கள் வெளிநாடு சென்று இரண்டு வாரங்களில் உறவினர்களுக்கு தலா 75 ஆயிரம் ரூபாவை வழங்குவதாகவும் பிக்கு உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனை தவிர பெண்களுக்கு மாதாந்தம் 40 ஆயிரம் சம்பளத்தை பெற்றுக்கொடுப்பதாக கூறியுள்ளார். கைது செய்யப்பட்டவர்கள் இன்று -10- மினுவங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவிருந்தனர்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் தலதா அத்துகோரள, மோசடி செய்யும் நபர்களிடம் ஏமாற வேண்டாம் எனவும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யாமல் வெளிநாடுகளுக்கு தொழில்களுக்காக செல்வதன் மூலம் பல பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும் எனக் கூறியுள்ளார்.

இவ்வாறான நேரங்களில் பணியகத்தினால் தலையீடுகளை மேற்கொள்ள முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.