Header Ads



மர்ஹூம் அஸ்வர் ஹாஜியார், சில நினைவுக் குறிப்புகள்

– இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் –

முன்னாள் அமைச்சர் அஸ்வர் குறித்த என் நினைவுகள் 60ஆம் தசாப்தத்தின் துவக்க காலப்பகுதியை நோக்கி நகர்கின்றன. 1960ஆம் ஆண்டிலேயே நான் அவரை முதலில் பார்த்தேன். அப்போது எனக்கு 6 வயதிருக்கும். அன்றைய அவதானம் பற்றிய சிறியதொரு நினைவே என்னிடம் உள்ளது. 1960ஆம் ஆண்டு மார்ச் மாத தேர்தல் காலப்பகுதியில் பேருவளை, மாளிகாஹேன பிரதேசத்தில் எனது தந்தைக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக எனது தந்தையின் ஆசானாகிய டி.பி. ஜாயாவின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கலாநிதி ஜாயா ஆங்கிலத்தில் ஆற்றிய உரையை மர்ஹூம் அஸ்வர் அவர்கள் தமிழில் உரைபெயர்ப்புச் செய்ததை நான் அவதானித்தேன். அன்றைய அவரது மொழிபெயர்ப்பு தொடர்பில் எனக்கு எவ்வித புரிதல்களும் நினைவுகளும் இல்லை.

அன்று முதற்தடவையாக நான் மர்ஹூம் அஸ்வர் அவர்களை பார்த்ததன் பின்பு டொக்டர் எம்.சி.எம்.கலீல், பேருவளை பிரதேசத்தில் ஆற்றிய பல்வேறு உரைகளை அவர் மொழிபெயர்ப்புச் செய்ததை அவதானித்துள்ளேன். டட்லி சேனாநாயக்க, ஜே.ஆர். ஜயவர்தன, ஆர்.பிரேமதாச போன்றோர் அரசியல் மேடைகளில் ஆற்றிய உரைகளை அஸ்வர் ஹாஜியார் திறமையான முறையில் மொழிபெயர்ப்புச் செய்ததை நான் என் இளமைப்பருவத்தில் ஆர்வத்தோடு செவிமடுத்துள்ளேன்.

1960களில் பேருவளை லைட் ஹவுஸ் (கலங்கரை விளக்கு) தீவுக்கு அஸ்வர் ஹாஜியாருடன் படகில் சென்ற பயணம் ஒருபோதும் எனக்கு மறப்பதில்லை. அப்போது சவூதி அரேபியாவுக்கான தூதரகம் இலங்கையில் இருக்கவில்லை. இதனால் ஹஜ் யாத்திரைக்குச் செல்லும் இலங்கையர்களுக்கு வருடத்திற்கு ஒரு தடவை வீசா வழங்குவதற்காக வேண்டி சவூதி நாட்டு அதிகாரியொருவர் இலங்கை வருவது அப்போதைய வழக்கமாக காணப்பட்டது. அன்று வருகை தந்த சவூதி நாட்டு அதிகாரி அல்ஹம்தானுக்காக வேண்டி எனது தந்தை ஏற்பாடு செய்த படகுப் பயணத்தில் அஸ்வர் ஹாஜியாரும், முன்னாள் செனட் சபை உறுப்பினரான மசூர் மௌலானாவும் கலந்துகொண்டிருந்தனர். படகுப் பயணத்திற் போது கடலலையின் வேகம் உக்கிரமடைந்து காணப்பட்டமையினால் படகு அங்கும் இங்கும் அசைய ஆரம்பித்தது. கடலில் பயணித்து பழக்கமின்மையால் அஸ்வர் ஹாஜியாரும் மசூர் மௌலானவும் சிறிது பயத்துடன் இருந்தார்கள்.

அஸ்வர் ஹாஜியார் தனது பொக்கட்டிலிருந்த தஸ்பீஹை எடுத்து அல்லாவை நினைவுகூற ஆரம்பித்தார். மசூர் மௌலானவும் பொக்கட்டிலிருந்த சிறிய குர்ஆனை எடுத்து ஓத ஆரம்பித்தார். அஸ்வர் ஹாஜியாரை பற்றிய இக்குறிப்பை எழுதும் போது அன்று நான் கண்ட அந்தக்காட்சி இன்றும் என் மனக்கண் முன்னால் நிழலாடுகிறது.

இளம் வயதில் இடதுசாரி சிந்தனைகளை சுமந்து, ரொபட் குணவர்தன போன்ற இடதுசாரி தலைவர்களோடு போராட்ட கோஷங்களை கூறி, ஊர்வலங்கள் சென்று, அரசியலில் காலடியெடுத்து வைத்த இனிமையான கதைகளை நாம் அவரிடமிருந்து செவிமடுத்துள்ளோம். பிற்பட்ட காலத்தில் அகில இலங்கை முஸ்லிம் லீக்கீன் இளைஞர் பிரிவில் தொடர்புகளை பேணிய அஸ்வர் ஹாஜியார் கலாநிதி டி.பி. ஜாயா, டொக்டர் எம்.சி.எம் கலீல், பளீள் கபூர் போன்ற ஐக்கிய தேசியக் கட்சி தலைவர்களின் நிழலில் ஐக்கிய தேசிய கட்சி அரசியலில் பிரவேசித்தார்.

அஸ்வர் ஹாஜியார் ஆரம்பத்தில் டொக்டர் எம்.சி.எம். கலீலுடன் மத்திய கொழும்பு அரசியல் செயற்பாடுகளிலும் பிற்பட்ட காலத்தில் எம்.எச்.முஹம்மதுடன் பொரளை தொகுதி அரசியல் செயற்பாடுகளிலும் மிகுந்த ஈடுபாட்டுடன் பங்குகொண்டார். 1960களின் நடுப்பகுதியில் எம்.எச்.முஹம்மதின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட ‘மார்க்சிஸத்திற்கு எதிரான முஸ்லிம் கூட்டமைப்பி’ன் செயலாளராகவும் இவர் இருந்துள்ளார்.

எனது தந்தை பாராளுமன்ற சபாநாயகராக இருந்த காலத்தில் அவரது தனிப்பட்ட செயலாளராக இருந்த அஸ்வர் ஹாஜியார் பாராளுமன்ற நூலகத்துடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்தார். சுதந்திரப் போராட்டத்தின் இறுதிக் காலப்பகுதியில், கலாநிதி டி.பி. ஜாயா அவர்கள் தேசிய அரசுப் பேரவையில் ஆற்றிய உரை மிக முக்கியமானதொன்றாக காணப்பட்டது. இவ்வலராற்று முக்கியத்துவம் மிக்க உரையை நான் அஸ்வர் ஹாஜியாரின் மேசையில் இருந்த ஹன்சார்ட் அறிக்கையொன்றிலிருந்து வாசித்தேன். உண்மையில் அவர் பாராளுமன்ற சட்டதிட்டங்களையும் இந்நாட்டின் அரசியல் வரலாற்றையும் நன்றாக தெறிந்துகொண்ட அமைச்சரொருவராக காணப்பட்டார்.

முஸ்லிம் விவகார அமைச்சராக இருந்த காலப்பகுதியில் அவ்வமைச்சினை மக்களுக்கு மிகவும் நெருக்கமானதாக அமைத்து, மக்களின் தேவைகளை விரைவில் நிறைவேற்றிக் கொடுக்கும் முன்மாதிரிமிக்க அமைச்சொன்றாக முன்னெடுப்பதற்கு அவர் வழங்கிய தலைமைத்துவத்தை பாராட்ட வேண்டும். எதிர்கட்சி உறுப்பினராக இருந்த காலப்பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ‘நம்நாடு’ எனும் பெயரில் தமிழ் பத்திரிகையொன்றை ஆரம்பித்து அதை பிரச்சாரப்படுத்துவதற்கு அவர் நாடு முழுவதிலும் பயணித்துள்ளார். அப்பத்திரிகையின் வளர்ச்சிக்கு அவர் மிகவும் ஆர்வத்துடன் ஒத்துழைப்பு வழங்கினார்.

கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் அதிபராக இருந்த எஸ்.எல்.எம்.சாபி மரிக்கார் அவர்களின் தலைமையில் உருவாக்கப்பட்ட அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின் ஆரம்பகர்த்தாவான அஸ்வர் ஹாஜியார் துவக்க காலத்திலிருந்தே அதன் நடவடிக்கைகளில் மிகுந்த ஈடுபாட்டுடன் பங்குபற்றி வந்துள்ளார். தென் ஆபிரிக்க மக்களின் சுதந்திரத்திற்கான போராட்டம், பலஸ்தீன் மக்களின் விடுதலை போராட்டம், கியூபா நாட்டு மக்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட அநீதிகளுக்கு எதிராக அவர் குரல் கொடுத்துள்ளார். அஸ்வர் ஹாஜியார் தனது வாழ்நாளின் இறுதிக்கட்டத்தில் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வேளையிலும் கூட பலஸ்தீன் நட்புறவுச் சங்கம் நடத்திய கூட்டமொன்றில் மிகுந்த கஷ்டத்துடன் பங்குபற்றியிருந்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி, அகில இலங்கை முஸ்லிம் லீக், அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாடு, முஸ்லிம் லீக் இளைஞர் முன்னணி, இலங்கை பலஸ்தீன் நட்புறவுச் சங்கம் போன்றவற்றில் அவர் கலந்துகொண்டு தனது உயரிய பட்ச பங்களிப்புக்களை நல்கியுள்ளார். அவரது வாழ்வின் இறுதிக்கட்டத்தில் அவர் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகி மஹிந்த அணியில் இணைந்துகொண்டார். அவர் ஐதேகா கொள்கையிலிருந்து விலகி பிறிதொரு அணியில் இணைந்துகொண்டார் என்பதை சொல்வதற்கு பதிலாக, அவ்வரசியல் முடிவுக்கு அவர் தள்ளப்பட்டார் என்பதை நான் இங்கு சொல்ல விரும்புகின்றேன். இம்முடிவை தவிர என்னிடம் மாற்றீடுகள் இல்லையென அவர் மிகுந்த மனவேதனையுடன் என்னிடம் கூறிய விதம் என் நினைவில் ஊசலாடுகிறது.

அவர் இணைந்துகொண்ட அணிக்காக வேண்டி விசுவாசமாக இருந்தார். அவருக்கு வழங்கப்பட்ட பொறுப்புக்களை நூறு வீதம் நிறைவேற்றி வந்தார். அக்காலப்பகுதியில் இந்நாட்டின் சிறுபான்மை மக்கள் முகம்கொடுத்து வந்த இனவாதப்பிரச்சினைகள் தொடர்பில் அவர் மனவேதனையுடன் இருந்ததை நான் அவரோடு உரையாடுகின்ற போது தெரிந்துகொண்டேன். நடந்துகொண்டிருக்கும் விடயங்கள், மற்றும் அதன் பின்னணி குறித்து அவர் நல்ல புரிதலுடன் இருந்தார். ஆனாலும் வேறு மாற்றீடுகள் தொடர்பில சிந்திக்க முடியாத இக்கட்டில் இருந்த அஸ்வர் ஹாஜியார், தான் இருந்த வரையரைக்குள் நீதி, நியாயத்திற்காக வேண்டி உயரிய பட்சம் தன்னால் செய்ய முடியுமானவற்றை செய்வதற்கான அவதானத்துடன் இருந்தும் அவரால் ஒன்றும் செய்ய முடியாமல் போனது.

அன்றைய காலப்பகுதியில் முஸ்லிம்கள் தமது சுயகௌரவத்தை இழந்து, உயிர் அச்சத்துடன் தமது வாழ்வை கழித்த இருள்மயமான காலப்பகுதி. முன்னாள் அமைச்சர் அஸ்வர் உள்ளக ரீதியில் எதிர்கொண்டு வந்த கவலையான நிலைமைகளை எனக்கு புரிந்துகொள்ள முடிந்தது.

முன்னாள் அமைச்சர் அஸ்வரின் வாழ்விலிருந்து இன்றைய அரசியல்வாதிகளுக்கும் அரசியலில் பிரவேசிக்க காத்திருப்போருக்கும் நிறையவே பாடங்களை கற்றுக்கொள்ள முடிகிறது. அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட நாம் அல்லாஹ்விடமே திரும்பிச்செல்ல வேண்டும் என்ற இஸ்லாமிய நியதிக்கமைய இறையடிச்சேர்ந்த அஸ்வர் ஹாஜியாருக்கு ஜன்னதுல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கம் கிடைக்க வேண்டும் எனப் பிராத்தனை செய்கிறேன்.

5 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. Only good things bro after here after

      Delete
    2. Dear admin,

      Please entertain only the constructive comments but definitely not destructive comments. Some half boiled and some empty vessels are making noise. Some time those are intolerable.

      Delete
  2. Fortunately he was not the Kai kooli of KARUNA n Serious killer PRABHA

    ReplyDelete
  3. Let us pray for Azwar Haji to Jannathul Firthouse.

    ReplyDelete

Powered by Blogger.