Header Ads



மழை பாதிப்பில் அவதிப்படும், ரோஹிங்யா முஸ்லிம்களின் முகாம்


வட கிழக்குப் பருவமழையால் சென்னை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதிலும் குறிப்பாக, சென்னை கேளம்பாக்கம் புயல் பாதுகாப்பு மையத்தில் தங்கவைக்கப்பட்டிருக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்களின் துயரம் கொடுமையானது.

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில், மியான்மரில் இருந்துவந்த ரோஹிங்யா முஸ்லிம்கள் கிட்டத்தட்ட 96 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாள்களாகப் பெய்துவரும் கனமழையினால், அந்த முகாமில் தங்கவைக்கப்பட்டிருக்கும் ரோஹிங்யா முஸ்லிம்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியிருக்கின்றனர். இங்கிருக்கும் பெரும்பாலானோருக்குத் தமிழ் தெரியாததால் தாங்கள் படும் கஷ்டத்தைக்கூடச் சரிவர சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள். 

கடும் மழையிலும் அவர்களுள் கொஞ்சம் தமிழ் தெரிந்தவரைத் தேடிப்பிடித்து விசாரித்தோம். அதில், அன்வர் சாதிக் என்பவர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பேசத் தொடங்கினார். “இங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மொத்தம் 96 பேர் தங்கியுள்ளோம். கடந்த மூன்று நாள்களா பெய்துவரும் கன மழையினால் நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறோம். குறிப்பாக, 2-ம் தேதி இரவு பெய்த பலத்த மழையினால், அதிக பாதிப்புக்கு உள்ளாகிருக்கிறோம். நாங்கள் தங்கி இருக்கும் இந்த முகாமில் உள்ள குடியிருப்பின் மேற்கூரையிலிருந்து மழை நீர் வேகமாக உள்ளே வந்தது. கையில் தற்காலிகமாகக் கிடைத்த பொருளைக் கொண்டு அந்த மழை நீர் வரும் அந்தப் பகுதியை அடைத்தாலும் தொடர்ந்து மழை நீர் உள்ளே வந்தபடியே இருந்தது.

நாங்கள் இதுவரை சமையல் செய்து சாப்பிடப் பயன்படுத்திவந்த கூடாரங்களில் இடுப்பளவுக்குத் தண்ணீர் நிற்கிறது. தண்ணீர் போவதற்கும் வழி இல்லை. தற்போதைக்குக் கூடாரங்களைச் சரி செய்ய முடியாது. அதனால் வெளியே காசு கொடுத்துத்தான் சாப்பாடு வாங்கிச் சாப்பிடுகிறோம். ஒரு முஸ்லிம் நண்பர், காலை மற்றும் மதிய வேளைகளுக்குச் சாப்பாடு கொடுத்து உதவினார். மழை பொழியும் இரவு நேரங்களில் சாப்பாட்டுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கையில் இருக்கும் காசைப் போட்டுத்தான் சாப்பாடு வாங்க வேண்டியிருக்கும். போதுமான அளவு காசு கையில் இல்லையென்றால், பலர் பட்டினியாகவே இருக்க நேரிடுகிறது. நாங்கள் தினமும் ஐந்து முறை தொழுகை செய்வோம். ஆனால், இப்போது தொழுகை செய்யும் கூடாரத்தைச் சுற்றிலும் முழுவதுமாகத் தண்ணீர் நிற்பதால் தொழுகை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. திருக்குர் ஆன் முதற்கொண்டு அனைத்தும் தண்ணீரில் மூழ்கிவிட்டன. 

இரவு நேரங்களில் பெய்யும் கனமழையினால் கழிப்பறைகளிலிருந்து அசுத்த கழிவு நீர் நாங்கள் தங்கியிருக்கும் இடத்துக்குள்ளே வருகிறது. இங்கு உள்ள குழந்தைகள் இந்த அசுத்த நீரிலேயே நடந்துசென்று வருகிறார்கள். இதன் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவருக்கும் சேற்றுப்புண் ஏற்பட்டு அவதிக்குள்ளாகி இருக்கிறோம். பல குழந்தைகளுக்குக் காய்ச்சல் வரும் இந்நேரத்தில், தங்கியிருக்கும் இடங்களிலேயே கழிவுநீர் வருவதால் நோய்த்தொற்று அதிகரிக்கும் நிலை உருவாகி உள்ளது. இந்தக் குடியிருப்பில் எங்கும் மழை நீர் ஊறி உள்ளே வந்தபடியே இருக்கிறது. இதனால் போர்த்திக்கொள்ள பயன்படுத்தும் போர்வைகள், மெத்தை விரிப்புகள் ஈரமாவதால் கடும் குளிருக்கும் ஆளாகி இருக்கிறோம். 

பொதுவாகவே இங்கு கொசுக்களின் தொல்லை அதிகமாக இருக்கும். இப்போது மழை நீர் அதிகம் தேங்கியுள்ளதால், கொசுக்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கிறது. கொசுக் கடியினால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இதுமட்டுமின்றி, இந்தக் கட்டடம் ஆங்காங்கே இடிந்துவிழும் நிலையில் இருக்கிறது. ஒரு மாதத்துக்கு முன்பு கட்டடத்தின் சிறு பகுதி இடிந்து ஒரு சிறுமியின் தலையில் விழுந்ததில் பெரிய காயம் ஏற்பட்டது. இப்போது மழை அதிகம் பெய்துவரும் நேரத்தில் கட்டடத்தின் சில பகுதிகள் எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் இருக்கிறது. வெள்ளம் சூழ்ந்த அன்று காலை காஞ்சிபுரம் டி.எஸ்.பி மற்றும் சில அதிகாரிகள் வந்து பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்த்துவிட்டுச் சென்றார்கள். சில தொலைக்காட்சி சேனல்களில் இருந்தும் வந்து வீடியோ எடுத்துக்கொண்டு சென்றார்கள். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்றார் கண்ணீருடன்.

No comments

Powered by Blogger.