Header Ads



‘மச்சான் போட்ட குண்டை, வீரவன்சவும் போடுவார்’

“இந்த நாடாளுமன்றத்தின் மீது முதன்முதலாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மச்சான்தான் குண்டுத்தாக்குதலை மேற்கொண்டார். மச்சான் செய்ததையே விமல் வீரவன்ச செய்வார் என்று எமக்கு நம்பிக்கை இருக்கிறது. ஏனெனில், அதற்கான அனுபவம் அவருக்கு இருக்கின்றது” என்று பிரதியமைச்சர் அஜித் பீ. பெரேரா சுட்டிக்காட்டினார்.

“நாடாளுமன்றத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட வேண்டும் என்று ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த எம்.பி.க்கள் சிலர் கருத்து வெளியிட்டிருக்கும் விவகாரம் தொடர்பில் நாடாளுமன்ற சிறப்புரிமை குழுவில் முன்னுரிமையளித்து விசாரிக்கப்பட்டு விரைந்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (23) சிறப்புரிமைப் பிரச்சினையொன்றை எழுப்பிய போதே, அவர் மேற்கண்டவாறு கேட்டுக்கொண்டார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

“இந்த நாட்டுப் பிரஜைகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் உயரிய நிறுவனமாக இந்த நாடளுமன்றமே இருக்கிறது. அதன் கௌவரத்தைப் பாதுகாப்பதும், எம்.பி.க்களினதும் பணியாளர்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும், அதேபோல் சபாநாயகரது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் அத்தியாவசியமான விடயமாகும்.

“இதற்கு முன்னர், இந்த நாடாளுமன்றத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இந்த நாடாளுமன்றத்தினுள் எமது உறுப்பினர்கள் உயிரிழந்திருப்பதுடன், காயமடைந்துமுள்ளனர். இந்த நாடாளுமன்றமானது வன்முறைக்குப் புதிய இடமொன்றும் கிடையாது. ஆகவே, இந்த நாடாளுமன்றத்தின் மதிப்பு மற்றும் கௌரவம் கேள்விக்குட்படுத்தப்படும் அனைத்து விடயங்கள் பற்றியும் தீவிரமாக ஆராய வேண்டியுள்ளது.

“நாடாளுமன்றத்துக்கு மேலாக வந்து, அதன்மீது குண்டுத்தாக்குதலொன்றை நடத்தி அதனை அழிக்க வேண்டும் என்று விமல் வீரவன்ச எம்.பி., 2017ஆம் ஆண்டு ஒக்டோர் மாதம் 22ஆம் திகதி தெரிவித்துள்ளார்.

“இந்த நாடாளுமன்றத்தின் மீது, இதற்கு முன்னரும் விமல் வீரவன்சவின் மச்சானால், குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. அவருடை மச்சான் செய்ததையே, விமல் வீரவன்ச செய்வார் என்று எமக்கு நம்பிக்கை இருக்கிறது. ஏனெனில், அதற்கான அனுபவம் அவருக்கு இருக்கின்றது.

“அதுமட்டுமல்லாது, ஒரு குண்டல்ல, இந்த நாடாளுமன்றத்தின் மீது 100 குண்டுகள் கொண்டு தாக்குதல் தாக்குதல் நடத்தப்பட வேண்டும் என்று கெஹலிய ரம்புக்வெல்ல எம்.பி. தெரிவித்துள்ளார்.

“அதேபோல், மேலாக வந்து இந்த நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட வேண்டும் என்பதை தாம் அங்கிகரிப்பதாகக் கூறி இந்த நாடாளுமன்றத்துக்கும் அதில் சட்டப்பூர்வமாகச் செயற்படும் எம்.பி.க்களுக்கும் எதிரான வன்முறையை, விமல் வீரவன்சவின் கட்சியைச் சேர்ந்த ஜயந்த சமரவீரவும் அங்கிகரித்துள்ளார்.

“இந்த விடயம் தொடர்பில் ஆளுந்தரப்பு மற்றும் எதிர்த்தரப்பு எம்.பி.க்கள் சபாநாயகரது கவனத்துக்குக் கொண்டு வந்திருந்தனர். எனினும், இந்த எம்.பி.க்களுக்கு எதிராக இந்த நாடாளுமன்றம் இன்னும் ஒழுக்காற்று ரீதியான நடவடிக்கை எதுவும் எடுத்திருக்கவில்லை. இது எமது நாடாளுமன்றத்தின் பெரும் குறைபாடாகும். இதில் விரைந்து செயற்பட வேண்டும்.

“நாடாளுமன்றத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தி வாக்களிக்கும் எம்.பி.க்களைக் கொல்ல வேண்டும் என்று கூறிய பின்னரும் இந்த நாடாளுமன்றம் பார்த்துக் கொண்டிருக்கும் என்றால் நாம் ஒவ்வொரு உறுப்பினர்களினதும் பாதுகாப்புப் பற்றிப் பார்த்துக் கொண்டிருக்க வழியில்லை.

“ஆகவே, இந்தப் பிரச்சினையை சிறப்புரிமை குழுவுக்கு ஆற்றுப்படுத்தி முன்னுரிமையளித்து விசாரித்து அது தொடர்பில் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.

எவ்வாறிருப்பினும், இந்த விடயம் பற்றி கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் சம்பந்தப்பட்ட பிரச்சினையை சிறப்புரிமை குழுவுக்கு அனுப்பி, பிரேரணையொன்றை முன்வைக்க முடியும் என்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய, இதன்போது தெரிவித்தார்.

இதேநேரம், ஒன்றிணைந்த எதிரணியினர் அவர்களுக்கு எதிராக நடக்கும் சிறப்புரிமை மீறல்கள் தொடர்பில் பல்வேறு முறைபாடுகளைச் செய்துள்ள நிலையில், அது தொடர்பில் நாடாளுமன்றத்தின் சிறப்புரிமை குழு செயற்படாமல் இருப்பின் அது பாரதூரமான நிலைமையாகும் என்றும் எம்.பி.க்கள் யாராக இருந்தாலும் அவர்களது சிறப்புரிமைகள் மற்றும் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் ஒன்றிணைந்த எதிரணியின் உறுப்பினரான தினேஷ்குணவர்தன எம்.பி. கூறினார்.

இருப்பினும், இந்த விடயம் பற்றியும் தாம் கவனம் செலுத்தியுள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.

நிர்ஷன் இராமானுஜம்

No comments

Powered by Blogger.