Header Ads



ராஜிநாமா முடிவு இறுதியானது, லெபனான் பிரதமர்

பிரதமர் பதவியிலிருந்து விலகுவது என்கிற எனது ராஜிநாமா முடிவில் உறுதியாக உள்ளேன் என்று லெபனான் பிரதமர் சா-அத் ஹரீரி கூறினார்.

 பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது:

 லெபனான் பிரதமர் பொறுப்பிலிருந்து விலகுவதாக நான் அறிவித்ததில் மிக உறுதியாக இருக்கிறேன். அது எனது சொந்த முடிவு. அந்த முடிவை சவூதியிலிருந்து வெளியிட்டதால் குழப்பம் ஏற்பட்டிருக்கலாம். யார் கட்டாயப்படுத்தியும் இந்த முடிவை நான் எடுக்கவில்லை. சவூதி அரேபியாவில் நான் சிறை வைக்கப்பட்டேன் என்று கூறப்படுவது முற்றிலும் பொய். எனது பிரான்ஸ் பயணமும் இங்கு வெளிப்படையான சந்திப்புகளும் இப்போது செய்தியாளர்களுடன் சந்திப்பதும் நான் சுதந்திரமாக இருப்பதற்கு சாட்சியாக உள்ளன.

வரும் புதன்கிழமை (நவ. 22)லெபனானுக்கு திரும்பவுள்ளேன். லெபனான் சுதந்திர தின நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன். எனது ராஜிநாமா தொடர்பான சட்டபூர்வமான தொடர் நடவடிக்கைகளை நான் லெபனான் திரும்பியதும் மேற்கொள்வேன் என்றார் அவர்.

 லெபனானில் கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் முதல் சா-அத் ஹரீரி பிரதமர் பொறுப்பு வகித்து வந்தார். அண்மையில் சவூதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொண்ட அவர், தனது பதவியிலிருந்து விலகுவதாக அங்கிருந்தே திடீரென அறிவித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். தொலைக்காட்சி பேட்டியின்போது அவ்வாறு அறிவித்தார்.

மேலும், லெபனானில் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும் அந்த பேட்டியில் அவர் தெரிவித்தார். லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இயக்கம் மூலமாகத் தனது நாட்டு அரசியலில் ஆதிக்கம் செலுத்த ஈரான் முயற்சிக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார். கடந்த நவ. 4-ஆம் தேதி அவரது திடீர் அறிவிப்பு லெபனான் மட்டுமல்லாமல், அரபு பிராந்தியத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கிழக்கு ஆசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 இந்த நிலையில், பிரான்ஸ் இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய முன்வந்தது. இதையடுத்து, ஹரீரி பிரான்ஸýக்கு சென்று அந்த நாட்டு அதிபர் இமானுவல் மெக்ரானை சனிக்கிழமை சந்தித்துப் பேசினார்.

 ஹரீரியின் குற்றச்சாட்டுகளை ஹிஸ்புல்லா மறுத்துள்ளது. மாறாக, சவூதியில் ஹரீரி கைதியாக உள்ளார் என்று ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கூறியிருந்தார். இதனிடையே, ஹரீரியின் ராஜிநாமாவை இன்னும் ஏற்கவில்லை என்று லெபனான் அதிபர் மிஷெல் அவுன் கூறியுள்ளார்.

 "பிரதமர் ஹரீரி எந்த முடிவை எடுத்தாலும் லெபனானில் அதை வெளியிட வேண்டும். அவருடைய ராஜிநாமாவை நான் இன்னமும் ஏற்கவில்லை. அவர் நாடு திரும்பியதும் அவருடன் நேரில் பேசிய பிறகுதான் நான் எந்த முடிவையும் எடுப்பேன்' என்று அதிபர் கூறியிருந்தார்.

 சன்னி பிரிவைச் சேர்ந்த சவூதி, ஷியா பிரிவைச் சேர்ந்த ஈரான் இடையேயான மோதலில் லெபனான் சிக்கியுள்ளதுதான் தற்போதைய விவகாரத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

 சன்னி நாடான சவூதி அரேபியாவானது லெபனானின் நட்பு நாடாக இருந்து வருகிறது. லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா இயக்கம் ஷியா பிரிவினரைக் கொண்டது. இந்த இயக்கத்துக்கு ஈரான் ஆதரவு தெரிவித்து வருகிறது. ஹிஸ்புல்லா இயக்கத்தை பயங்கரவாதக் குழுவாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அறிவித்திருந்தாலும், அதன் அரசியல் பிரிவு லெபனான் நாடாளுமன்றத்தில் இடம் பெற்றுள்ளது. சில காலம் அரசில் பங்கு வகித்தது. ஆயுதங்களை முற்றிலும் கைவிட்டால் மட்டுமே அதனை அரசியல் கட்சியாக ஏற்க முடியும் என்று சவூதி தெரிவித்துள்ளது.

 ஹிஸ்புல்லாவை பிரதமர் ஹரீரி அரசு போதிய அளவு எதிர்க்கவோ கட்டுப்படுத்தவோ இல்லை என்று சவூதி கருதியதால் அவர் பிரதமர் பதவியை ராஜிநாமா செய்ய சவூதி அரேபியாவால் கட்டாயப்படுத்தப்பட்டார் என்று கூறப்படுகிறது.

 ஹரீரியின் தந்தை ரஃபீக் லெபனான் பிரதமராகப் பதவி வகித்தவர். கடந்த 2005-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கார் குண்டு வெடிப்பில் அவர் பலியானார். அந்த குண்டுவெடிப்புக்குக் காரணம் ஹிஸ்புல்லா என்று கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.