Header Ads



அழிவை ஏற்படுத்தும் ஈரான், அச்சத்தில் லெபனான் பிரதமர் ராஜினாமா


தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, மத்திய கிழக்கு நாடான லெபனானின் பிரதமர் சாத் அல்-ஹரிரி பதவி விலகியுள்ளார். நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய அவர், இரான் நாட்டை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இவரது தந்தையும் முன்னாள் பிரதமருமான ரஃபிக் அல்-ஹரிரி கடந்த 2005-இல் படுகொலை செய்யப்பட்டார்.

லெபனான் உள்ளிட்ட பல நாடுகளிலும் அச்சத்தையும் அழிவையும் விதைப்பதாக அவர் இரான் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த 2009 முதல் 2011 வரை லெபனான் பிரதமராக பதவி வகித்த அவர், 2016 நவம்பரில் மீண்டும் பிரதமராக பதவியேற்றார்.

"தியாகி ரஃபிக் அல்-ஹரிரி படுகொலை செய்யப்படுவதற்கு முன்பு நிலவிய அதே சூழலில் நாம் இப்போது வாழ்ந்து வருகிறோம்," என்று அவர் கூறியுள்ளார்.

லெபனானில் குறிப்பிடத்தகுந்த தாக்கம் கொண்டுள்ள, இரான் ஆதரவு பெற்ற ஷியா பிரிவைச் சேர்ந்த 'ஹெஸ்புல்லா' அமைப்பை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் லெபனான் இருந்தபோது, இரான் ஆதரவுடன் 1980-களில் அந்த அமைப்பு உருவானது.

இரான் அரசுக்கு எதிரான தலைமையை கொண்டிருக்கும் சௌதி அரேபியாவுக்கு அவர் சமீபத்தில் பல பயணங்களை மேற்கொண்டார்.

இரண்டு ஆண்டுகள் அரசியல் சிக்கலுக்குப் பிறகு பிரதமர் பொறுப்புக்கு வந்த ஹரிரி லெபனான் நாட்டுக்கு 'புதிய அரசியல் சாகாப்தத்தை' ஏற்படுத்தப்போவதாக அவர் உறுதியளித்திருந்தார்.

அவரது பதவி விலகல் பெரும் ஆச்சர்யத்தை உண்டாக்கியுள்ளது. தனக்கு முக்கிய ஆதரவளிக்கும் நாடான சௌதி அரேபியாவிலும் லெபனானிலும் அவர் மாறி மாறி வசித்து வந்தார்.

இவரது முந்தைய ஆட்சியில், லெபனான் ராணுவம் ஹெஸ்புல்லா அமைப்புடன் முன்பு மேற்கொண்ட சண்டைகளில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.