Header Ads



காலநிலை தொடர்பில், முக்கிய அறிவித்தல்

கடலுக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு கடற்தொழிலாளர் மற்றும் கடற்படை சமூகத்திற்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

நாட்டை சுற்றியுள்ள கடற்பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்து வீசக்கூடும் என அந்த நிலையம் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விசேடமாக தென் மற்றும் தென்மேற்கு பிரதேசங்களில் கடும் மழை மற்றும் விட்டு விட்டு வீசும் காற்று மணிக்கு சுமார் 80 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்பிரதேசங்களில் மணிக்கு சுமார் 100 கிலோமீற்றர் வேகத்தில் கடும் அதிகரித்து காற்று வீசக்கூடும் என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் தெற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களில் 150 மில்லிமீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

காலநிலை அவதான நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இன்று மதியம் 12 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரத்தில் காலி, களுத்துறை, மாத்தளை, மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் 150 மில்லிமீற்றர் வரையிலான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இன்று இரவு வேளைகளில் நாட்டின் பல பாகங்களில் கடும் மழை மற்றும் காற்று வீசக் கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இந்த நிலைமை நாளை மாலை வரை தொடரும் என வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, காலி , மாத்தறை , ஹம்பாந்தோட்டை , களுத்துறை மற்றும் பதுளை மாவட்டங்களில் வீசிய கடும் காற்று காரணமாக மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.

இதன் காரணமாக குறித்த பிரதேசங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் , நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, மாத்தறை மற்றும் கண்டி மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் 12 மணித்தியாளங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

தேசிய கட்டிட ஆய்வு மையத்தினால் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

நிலவும் மழையுடனான காலநிலை காரணமாகவே இந்த எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மழையுடனான காலநிலை நிலவும் போது, மலைகளை அண்டி வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, மலையகத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மேல் கொத்மலை  நீர்த்தேக்கத்தின் அவசர கதவு ஒன்று திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பதுளை – மடுல்சீமை பகுதியில் உள்ள வீதியொன்றில் பயணித்துக்கொண்டிருந்த உந்துருளி மற்றும் முச்சக்கர வண்டி என்பனவற்றின் மீது இன்று மதியம் மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளது.

இந்த அனர்த்தத்தில் உந்துருளியில் பயணித்தவர் பலியானதுடன், முச்சக்கர வண்டிச் சாரதி காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

1 comment:

  1. (நபியே!) நீர் கூறும்: நீங்கள் கரையிலும் கடலிலும் உள்ள இருள்களில் (சிக்கித் தவிக்கும் சமயத்தில்) “எங்களை இதைவிட்டுக் காப்பாற்றிவிட்டால், நிச்சயமாக நாங்கள் நன்றி செலுத்துவோரில் ஆகி விடுவோம் என்று பணிவாகவும், மறைவாகவும் நீங்கள் அவனிடம் பிரார்த்திக்கின்றீர்களே அப்போது உங்களை காப்பாற்றுகிறவன் யார்?”
    (அல்குர்ஆன் : 6:63)
    www.tamililquran.com

    ReplyDelete

Powered by Blogger.