Header Ads



மாணவனுக்கு கன்னத்தில் அடித்த, ஆசிரியர் கைது

11 வயதுடைய மாணவன் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக, நீர்கொழும்பு பொலிஸாரால் ஆசிரியர் ஒருவர், நேற்று (21) கைது செய்யப்பட்டுள்ளார். 

கொட்டதெனியாவ பிரதேசத்தைச் சேர்ந்த, நீர்கொழும்பு கல்வி வலயத்தில் உள்ள பிரபல பாடசாலையில் கடமையாற்றும் விஞ்ஞான பாட ஆசிரியரே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, 

கடந்த 15ஆம் திகதி, தரம் 6இல் கற்கும் மாணவர்கள் சிலருக்கிடையில், நண்பகல் வேளையில் சிறு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. குறித்த ஆசிரியர், அதனை விசாரிக்கச் சென்ற வேளையில், அங்கிருந்த மாணவன் ஒருவனின் கன்னத்தில் அறைந்துள்ளார். 

வீட்டுக்குச் சென்ற மாணவன், தனது காது வலிப்பதாகவும் ஆசிரியர் தனது கன்னத்தில் அறைந்ததாகவும் பெற்றோரிடம் கூறியுள்ளார். அடுத்த நாள், பெற்றோர் அம்மாணவனை அழைத்துக் கொண்டு, பாடசாலைக்குச் சென்று இதுதொடர்பாக விசாரித்துள்ளனர்.  

இதுதொடர்பாக மேலதிக நடவடிக்கை எடுக்க வேண்டாம் எனவும் பாதிக்கப்பட்ட மாணவனை சுகப்படுத்துவதற்கு உதவுவதாகவும், ஆசிரியர்கள் சிலரும் பெற்றோர்கள் சிலரும் மாணவனின் பெற்றோரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவனை நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற பெற்றோர், தமது பிள்ளை கீழே விழுந்ததன் காரணமாக காதில் காயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து சிகிச்சைப் பெற்றுள்ளனர்.  

தமது மகனை சுகப்படுத்துவதற்கு உதவி புரிவதாக அளித்த வாக்குறுதி மீறப்பட்டதை அடுத்து, பெற்றோர் நேற்று முன்தினம் (21) நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். 

இதையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியர் நீர்கொழும்பு சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார். 

எம்.இஸட்.ஷாஜஹான் 

No comments

Powered by Blogger.