Header Ads



பாராளுமன்றில் தீப்பற்றி எரிந்த, பெற்றோல் பிரச்சினை


முழு நாட்டையுமே கடந்த சில தினங்களாக செயலிழக்க வைத்திருக்கும் பெற்றோல் தட்டுப்பாடு பாராளுமன்றத்திலும் தாக்கம் செலுத்தியதால் சபையில் சுமார் ஒரு மணித்தியாலம் வரை பெற்றோல் சர்ச்சை தீப்பற்றி எரிந்தது.

பாராளுமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் 
கரு ஜெயசூரிய தலைமையில் கூடியது. இதனையடுத்து சபாநாயகர் அறிவிப்பு, பிரேரணை , மனுக்கள் சமர்ப்பணம் என்பன இடம்பெற்றன.


இதேவேளை நேற்றுப் பாராளுமன்றம் கூடியபோது எதிர்க்கட்சிகள் தரப்பில் 6 உறுப்பினர்களும் அரச தரப்பில் ஒரு சில அமைச்சர்கள், உறுப்பினர்கள் மட்டுமே அமர்ந்திருந்தனர். இந்நிலையிலேயே முழு நாட்டையும் கடந்த சில தினங்களாக செயலிழக்க வைத்திருக்கும் பெற்றோல் தட்டுப்பாட்டு பிரச்சினைக்கு சபையில் தீ மூட்டிப் பற்றவைத்தார் மகிந்த ஆதரவு அணி எம்.பி.யான விமல் வீரவன்ச.


பெற்றோல் இல்லாதததால் எம்.பி.க்கள் இல்லை


சபை நடவடிக்கைகள் தொடங்கி சபாநாயகர் அறிவிப்புகள் முடிவடைந்தவுடன் எழுந்த விமல் வீரவன்ச எம்.பி. ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பினார். பெற்றோல் தட்டுப்பாட்டால் நாடே முடங்கிப்போயுள்ளது. எம்.பி. க்கள் கூட பெற்றோல் இல்லாததால் சபைக்கு வர முடியவில்லை. சபை வெறிச்சோடிப் போயுள்ளது என்று கூறிக் கொண்டிருக்கும் அரச தரப்பிலுள்ள சில உறுப்பினர்கள் விமலுக்கு எதிராக கூச்சலிடத் தொடங்கினர்.


எம்.பி. க்களுக்கு மட்டுமல்ல எனக்கும் அதே நிலைதான்


விமல் வீரவன்சவுக்கும் அரச தரப்பு எம்.பி.க்களுக்குமிடையே தர்க்கம் ஏற்படவே அதனைக் கட்டுப்படுத்த முயன்ற சபாநாயகர் கரு ஜெயசூரிய, நாட்டில் ஏற்பட்டுள்ள பெற்றோல் தட்டுப்பாடு தொடர்பில் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க விளக்கமளிக்கவுள்ளார். பெற்றோல் எம்.பி.க்களின் வாகனத்துக்கு மட்டும் இல்லாமல் போகவில்லை. எனது வாகனத்துக்கும் கூட இல்லைதான். எனவே பொறுமையாக இருங்கள் அமைச்சர் பதில் தருவார் என்றார்.


கப்டன் "கூலி'ன் உதவியுடன் மீள்வோம்


இதன்போது மகிந்த ஆதரவு அணித் தலைவர் தினேஷ் குணவர்தன எம்.பி. பெற்றோல் தட்டுப்பாடு தொடர்பில் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவிடம் 23 இன் கீழ் 2 இல் கேள்விகளைத் தொடுத்தார். தனது கேள்விகளுக்கும் மேலதிகமாக சில கருத்துக்களை அவர் முன்வைக்க முயன்ற போது நேரத்தை காரணம் காட்டிய சபாநாயகர் கேள்வியை முடிக்குமாறு அறிவுறுத்தினார். இதனால் சபாநாயகருக்கும் தினேஷ் குணவர்தனவுக்குமிடையே தர்க்கம் ஏற்பட்டது.


இது எமது கட்சிப் பிரச்சினையல்ல. முழுநாட்டையும் பாதித்துள்ள, முடக்கியுள்ள பிரச்சினை. இது தொடர்பில் நான் பேசியேயாக வேண்டும். கப்டன் கூலின் (அர்ஜுன ரணதுங்கவின்) உதவியோடு நாம் இந்தப் பிரச்சினையிலிருந்து மீள வேண்டும் என்றார்.


இதனையடுத்து ஜே.வி.பி. தலைவரும் எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவுமான அநுரகுமார திசாநாயக்கவும் பெற்றோல் தட்டுப்பாடு தொடர்பில் 23 இன் கீழ் 2 இல் அமைச்சர் அர்ஜுனவிடம் கேள்விகளை எழுப்பினார்.


பொறுப்பேற்க பிரதமர் மறுப்பு


அநுரகுமார திஸாநாயக்க தன் கேள்வியில் திருகோணமலை எண்ணெய்க் களஞ்சியங்கள் இந்தியாவுக்கு கொடுக்கப்பட்டமையே தற்போதைய நிலைமைகளுக்கு காரணம் எனவும் அது தொடர்பான உடன்படிக்கையுடன் பிரதமர் ரணிலை தொடர்புபடுத்தியும் கூறினார். எனினும் இதனை மறுத்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்த உடன்படிக்கை தொடர்பில் நாம் பேசினோம். ஆனால் இதன் பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது. எனவே நான் பொறுப்பாளியாக முடியாது என்றார்.


முதுகெலும்பிருந்தால் யார் எனக் கூறுங்கள்?


தினேஷ் குணவர்தன மற்றும் அநுரகுமார திஸாநாயக்க, ஆகியோரின் கேள்விகளுக்கு அமைச்சர் அர்ஜுன ரணதுங்க பதிலளித்து முடித்தவுடன் விமல் வீரவன்ச மீண்டும் எழும்பி ஒழுங்குப் பிரச்சினை எழுப்பினார். ஆனால் அதற்கு சபாநாயகர் அனுமதி மறுக்கவே அவர் சபாநாயகருடன் தர்க்கத்தில் ஈடுபட்டார். அதனுடன் அமைச்சர் அர்ஜுனவை பார்த்து என் கேள்விக்கு பதிலளிக்க நீங்கள் தயார்தானே எனக் கேட்டார்.


அதற்கு அமைச்சர் அர்ஜுன ஆம் எனப் பதிலளிக்கவே  அமைச்சரே இணங்கிவிட்டார் எனவே எனக்கு கேள்வி கேட்க அனுமதி கொடுங்கள் என சபாநாயகரிடம் கூறிவிட்டு அமைச்சர் அர்ஜுனவைப் பார்த்து நாட்டிற்கான பெற்றோல் கொள்வனவில் பெருமளவான அரசியல் தலையீடுகள் உள்ளதாகக் கூறினீர்களே, உங்களுக்கு முதுகெலும்பிருந்தால் அந்த அரசியல் தலையீடுகளை செய்தது யார் என்பதை உங்களால் இங்கு கூறமுடியுமா எனக் கேட்டார்.


இதற்கு அமைச்சர் அர்ஜுன பதிலளிக்கையில், சரியான நேரத்தில் சரியான இடத்தில் அதனை நான் கூறுவேன். எந்தவித அரசியல் தலையீட்டுக்கும் யாரையும் அனுமதிக்க மாட்டேன் என்றார். இதனை மகிந்த ஆதரவு அணியினர் மேசைகளில் தட்டி வரவேற்றனர்.


சபாநாயகரை நோக்கி விரல்நீட்டிய வாசு - விமல்


இவ்வாறு விமல் வீரவன்ச அடிக்கடி இடையூறுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கவே அவரை சபாநாயகர் எச்சரித்தபோது, சபாநாயகரே இந்தப் பெற்றோல் தட்டுப்பாட்டுக்கு நீங்கள்தான் காரணம். நீங்கள் பெற்றோலியத்துறை அமைச்சராகவிருந்த போது தான் இந்தியாவுடன் உடன்படிக்கை செய்தீர்கள் என விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டினார். அடுத்ததாக ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய மகிந்த ஆதரவு அணி எம்.பி.யான வாசுதேவ நாணயக்காரவும் பெற்றோல் தட்டுப்பாட்டுக்கு சபாநாயகர்தான் பொறுப்புக் கூற வேண்டும். இந்நிலைமைக்கு நீங்கள்தான் காரணம். எனவே நீங்கள் தான் பொறுப்பாளி என உரக்கக் கத்தினார்.


சபாநாயகர் -  வாசுகடும் தர்க்கம்


இக்குற்றச்சாட்டுகளால் கடும் சினமடைந்த சபாநாயகர் கரு ஜெயசூரிய, உரத்த குரலில் இதற்கு நான் எப்படி பொறுப்பாளியாக முடியும்? அப்போது அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு நான் பொறுப்பேற்க முடியாது. என்மீதான குற்றச்சாட்டை நீங்கள் உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்றார்.


இதனையடுத்து மீண்டும் எழுந்த வாசுதேவ நாணயக்கார, தற்போதைய பெற்றோல் தட்டுப்பாட்டுக்கு சபாநாயகர் கரு ஜெயசூரியவே காரணம் என்ற எனது கூற்றை நான் வாபஸ் பெறுகின்றேன். எனினும் இப் பெற்றோல் தட்டுப்பாட்டுக்கு அப்போது உடன்படிக்கையை செய்த அப்போதைய பெற்றோலிய வரித்துறை அமைச்சராகவிருந்த கரு ஜெயசூரியவே பொறுப்பாளி, காரணமானவர் என்பதை இங்கு கூற விரும்புகிறேன் என்றார்.


இதனால் இன்னும் சினமடைந்த சபாநாயகர் கரு ஜெயசூரிய சிரேஷ்ட உறுப்பினரான நீங்கள் மிகவும் கீழ்த்தரமாக தரக்குறைவாக நடந்து கொள்கின்றீர்கள் எனக் கூறினார்.


மகிந்த ஏன் இரத்துச் செய்யவில்லை?


இதன் போது எழுந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சரி நாம் இந்தியாவுடன் ஆரம்பித்த உடன்படிக்கை தவறு எனில் அதனை ஏன் பின்னர் ஜனாதிபதியான மகிந்த ராஜபக்ஷ இரத்துச் செய்யவில்லை? இந்தியாவில் வாஜ்பாய் பிரதமராகவிருந்த காலத்தில் தான் நாம் இதுபற்றி பேசினோம்.

அதுமட்டுமன்றி அம்பாந்தோட்டையில் சீன உதவியுடன் எண்ணெய் களஞ்சியசாலைகளை நாம் ஆரம்பிக்க முயன்ற போது அதனை குழப்பியவர்கள் யார் என்பதும் அனைவருக்கும் தெரியும் என்றார்.


இவ்வாறு சுமார் ஒரு மணித்தியாலம் வரை சபையில் பெற்றோல் தட்டுப்பாட்டுப் பிரச்சினை பற்றியெரிந்த நிலையில் இறுதியில் எம்.பி.க்கள் எதிர்நோக்கும் பெற்றோல் தட்டுப்பாட்டுப் பிரச்சினைக்கு உடனடி பரிகாரம் காண ஏதாவது நடவடிக்கை எடுக்க முடியுமாவென ஆராயுமாறு பெற்றோலிய வரித்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவிடம் சபாநாயகர் கரு ஜெயசூரிய கேட்டுக்கொண்டு சர்ச்சையை முடிவுக்கு கொண்டுவந்தார்.

பா. கிருபாகரன், டிட்டோகுகன்

No comments

Powered by Blogger.