Header Ads



புத்த மத தலைவர்களுக்கு, போப் அறிவுரை


மியான்மரின் வடக்குப் பகுதியான ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். வங்காளதேசம் நாட்டில் இருந்து குடிபெயர்ந்து மியான்மரில் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டவர்களாக இருக்கும் இவர்களில் சிலர், கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

ராணுவத்தினரின் தாக்குதலால் உயிருக்கு பயந்து ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்காளதேசத்திற்கு தப்பிச் சென்ற வண்ணம் உள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையிலான ஆற்றின் வழியாக படகில் செல்லும் பலர் விபத்துகளில் சிக்கி உயிரிழந்து வருகின்றனர். மியான்மரில் உள்ள போலீஸ் சோதனைச் சாவடிகளின்மீது கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி ரோஹிங்கியா போராளிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அவர்களுக்கு எதிரான ராணுவ வேட்டை தீவிரம் அடைந்தது.

மியான்மரில் ராணுவ நடவடிக்கைகள் தொடங்கிய நாளில் இருந்து சுமார் 6 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேறி அண்டைநாடான வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். ரக்கினே மாநிலத்துக்குள் பத்திரிகையாளர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பலகாலமாக மியான்மரின் ஆட்சியை கைப்பற்றி வைத்திருந்த ராணுவம் ஆட்சியாளர்களின் கட்டளைக்கு கீழ்படிய மறுத்து இஸ்லாம் மதத்தினரான ரோஹிங்கியா மக்கள்மீது அடக்குமுறையை பயன்படுத்தி வருவதாக சில நாடுகள் குற்றம்சாட்டுகின்றன.

முன்னதாக, மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது ராணுவம் நடத்திவரும் ஒடுக்குமுறைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கண்டனம் தெரிவித்தார். ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு மியான்மர் அரசு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள ரோஹிங்கியா மக்களை திரும்பப்பெற மியான்மர் அரசு சம்மதம் தெரிவித்துள்ள நிலையில் இதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் தொடங்கியுள்ளதாக வங்காளதேசம் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி மஹ்மூத் அலி கடந்த மாதம் அறிவித்தார்.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற ஆசியான் உச்சி மாநாட்டுக்கு இடையில் மியான்மர் அரசின் தலைமை ஆலோசகரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூகியை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் சந்தித்தார்.

ரக்கினே மாநிலத்தில் உள்ள மக்களுக்கு மனிதநேய அடிப்படையிலான உதவிகள் சென்று சேருவதை உறுதிப்படுத்த வேண்டும். ரோஹிங்கியா மக்கள் பாதுகாப்பாகவும், கண்ணியத்துடனும் வாழ்வதற்கான வழிவகைகள் ஏற்படுத்தி தரப்பட வேண்டும் என ஆங் சான் சூகியிடம் அன்டோனியோ குட்டெரெஸ் வலியுறுத்தியதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதேபோல், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் சமீபத்தில் ஆங் சான் சூகியை சந்தித்து இதே கோரிக்கையை வலியுறுத்தினார். உலகம் முழுவதும் வாழும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை மதகுருவான போப் பிரான்சிஸ் தற்போது இவ்விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக 4 நாள் பயணமாக மியான்மர் நாட்டுக்கு வந்துள்ளார். மியான்மர் அரசின் ஆலோசகர் ஆங் சான் சூகியை நேற்று அவர் சந்தித்து பேசினார். 

ரோஹிங்கியா இனத்தவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள மா பா தா என்ற புத்த அமைப்பின் தூண்டுதலின் பேரில் அங்கு ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை நடைபெற்றதாக கூறப்படும் நிலையில் அங்கு கலவரத்துக்கு காரணமான இருதரப்பினருடனும் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ள போப் பிரான்சிஸ் இன்று யாங்கூன் நகரில் உள்ள பிரபல புத்த தேவாலயத்தில் நூற்றுக்கணக்கான புத்த மத தலைவர்கள் மற்றும் தலைமை பிட்சுக்களின் கூட்டமைப்பான ’சங்கா’ அமைப்பினரிடையே உரையாற்றினார்.

ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பது நம்முடைய நோக்கமாக உள்ளதால் கருத்து முரண்பாடு,பாரபட்சம், வெறுப்புணர்ச்சி, சகிப்புத்தன்மையின்மை போன்றவற்றை எதிர்த்து வெல்ல நீங்கள் உதவ வேண்டும் என புத்த மத தலைவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

1 comment:

  1. Pope please come to Sri Lanka also. We don't like to see another communal riots like Aluthgama and Gintotta.

    ReplyDelete

Powered by Blogger.