Header Ads



பாராளுமன்றத்தை அதிரச்செய்த, அநுராவின் பேச்சு

உள்ளூராட்சி தேர்தலை ஒத்திவைக்கும் வழக்குத் தாக்கலும், அது தொடர்பான தீர்ப்பும் ஏற்கெனவே திட்டமிட்டே இடம்பெற்றுள்ளதாக ஜே.வி.பி நேற்று (22) பாராளுமன்றத்தில் குற்றஞ்சாட்டியுள்ளது. தேர்தல் நடத்தி ஜனநாயகத்தை நிலைநாட்டும் போராட்டத்திற்காக ஒன்றிணைந்த எதிரணி அடங்கலாக எதிர்பாராத தரப்புகளுடனும் இணைந்து செயற்பட தயாராக இருப்பதாக ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய அவர்,தேர்தலை நடத்துவதற்காக எடுக்க வேண்டி சகல நடவடிக்கைகளையும் எடுக்க இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் உரையாற்றிய அவர்,

கடந்த இரண்டரை வருடங்களாக உள்ளூராட்சி தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.அத்தியாவசிய விடயங்களுக்காக சில காலம் தாமதமானதில் நியாயம் இருக்கிறது. ஆனால் நியாயத்தை நிலைநாட்டுவதற்காக வழக்கு தொடரப்பட்டதாக நம்ப முடியாது.

தமது நேர்மையற்ற தேவைகளை நிறை​வேற்றிக் கொள்வதற்காக நீதிமன்றத்தை பயன்படுத்தியுள்ளனர். சுதந்திரக் கட்சி அமைச்சர்களின் ஆதரவாளர்கள் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளனர். அரசாங்கத்தின் ஒரு தரப்பு இவ்வாறு தேர்தலை ஒத்திவைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

சர்வாதிகார பயணத்திற்கும் ஜனநாயக விரோத ஆட்சிக்கும் எதிராக ஜனவரி 8 ஆம் திகதி ஆணை வழங்கப்பட்டது.இதனை நாம் ஏற்கிறோம். ஆட்சிக்கு வந்த சக ஜனாதிபதிகளைவிட ஜனநாயகத்தையும் மக்களின் சுதந்திரத்தையும் பாதுகாப்பதில் தற்போதைய ஜனாதிபதிக்கு முக்கிய பங்கு இருக்கிறது.

மேடையில் நல்லாட்சி பற்றி பேசிவிட்டு, நடைமுறையில் மாற்றமாக நடப்பதை அனுமதிக்க முடியாது.

எம்மீது 1988/89 காலப்பகுதி தொடர்பில் சேறு பூசுகின்றனர். எமது தவறுகளை உணர்ந்து திருத்திக் கொண்டு செயற்படும் போக்கையே நாம் பின்பற்றுகிறோம்.

கடந்த 23 வருடங்களாக ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்துள்ளோம். எமது ஆதரவாளர்கள் கொல்லப்படுகையில் ஆயுதம் ஏந்தாமல் சிறு கல்லை கூட தூக்காமல் பொறுமையாக செயற்படுகிறோம்.

1988/89 கால வரலாறு பற்றி விவாதம் நடத்தினால் எமது தவறுகள் மட்டுமன்றி நிறைகள் குறித்தும் பேச தயாராக இருக்கிறோம்..

சு.கட்சி பிரிந்தால் ஜனாதிபதியின் தரப்பு சிறியதாகும். மக்கள் ஆணை தொடர்பில் இன்னொரு ஜனாதிபதி தேர்தலில் தான் உராய்ந்து பார்க்க முடியும்.

பெப்ரவரி மாதத்தில் வர்த்தமானியில் அறிவித்த விடயம் நவம்பரில் தவறு என நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்படுகிறது. உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் தமது பொறுப்பை தவறவிட்டுள்ளார். அவருக்கு வர்த்தமானியில் தவறு இருப்பது தெரியாதா? நான் அறிந்த பைசர் முஸ்தபா இப்படி தவறு விடுபவரல்ல.

முக்கிய வழக்கு இருக்கையில் அவர் வெளிநாடு சென்றுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலுக்கு எதிரான வழக்கும் தீர்ப்பும் ஏற்கெனவே திட்டமிட்டப்பட்டவையாகும்.

"கேம்" களினால் அரசியல் செய்திருந்தால் இன்றும் மஹிந்தவே ஜனாதிபதியாக இருந்திருப்பார்.

பைசர் முஸ்தபாவுக்கு எதிரான வழக்கில் அவரின் தந்தையின் சிஷ்யர் ஆஜராகியுள்ளார்.

இந்த வழக்கை வாபஸ் பெற வேண்டும். தேர்தல் நடத்தப்படுவதற்காக எடுக்க வேண்டிய சகல நடவடிக்கைகளையும் நாம் மேற்கொள்வோம். நீதிமன்றத்திலும் இது தொடர்பில் எடுக்க வேண்டிய சகல முயற்சிகளையும் முன்னெடுக்க இருக்கிறோம்.

டிசம்பர் (08) முன்னர் வழக்கை மீள விசாரணை செய்ய வேண்டும்.

இந்த பிரச்சினையை நடு வீதியில் தான் தீர்க்க வேண்டும் என்றால் அதற்கும் தயாராக இருக்கிறோம். தேர்தல் நடத்தும் பிரச்சினையை வெற்றி கொள்ள யாருடனும் இணைந்து செயற்பட தயாராக இருக்கிறோம். எதிர்பார்க்காத சக்திகளுடனும் இணைந்து செயற்படுவோம். ஒன்றிணைந்த எதிரணி ,ஜனநாயகத்தை விரும்புவோர்,சிவில் அமைப்புகள் அடங்கலான சகல தரப்புடனும் இணைந்து செயற்பட வருமாறு அழைப்பு விடுக்கிறேன்.

வெற்றி பெறும் நிலை ஏற்படும் வரை தேர்தலை ஒத்திவைத்தால் ஒரு நாளும் தேர்தலை நடத்த முடியாது. எனவே வழக்கை வாபஸ் பெறுமாறு கோருகிறேன்.

3 comments:

  1. Election will not be held until My3 & Mahinda are united. My3's game plan is working against the UNP's plan of dividing the SLFP.

    ReplyDelete
  2. இவர்கள் பரவாயில்லை போல் தெரிகிறது

    ReplyDelete
  3. Fast growing Sri Lanka's next President with entire minorities support.

    ReplyDelete

Powered by Blogger.