Header Ads



வங்காளதேசத்தில் தஞ்சமடைந்த ரோஹிங்கியர்களை, திரும்ப பெறுவது குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம்


வங்காளதேசத்தில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்கியா அகதிகளை திரும்ப பெறுவது குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய உள்ளதாக மியான்மர் அரசின் ஆலோசகர் ஆங் சான் சூகி கூறியுள்ளார்.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் சமீபத்தில் நடைபெற்ற ஆசியான் உச்சி மாநாட்டுக்கு இடையில் மியான்மர் அரசின் தலைமை ஆலோசகரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூகியை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் சந்தித்து, ரக்கினே மாநிலத்தில் உள்ள மக்களுக்கு மனிதநேய அடிப்படையிலான உதவிகள் சென்று சேருவதை உறுதிப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

அமெரிக்க வெளியுறவு மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் மியான்மர் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தனது பயணத்தில் ராணுவ அதிகாரிகள், ரோகிங்கியா மக்கள் என பல தரப்பினரையும் அவர் சந்தித்து பேசினார். இதனையடுத்து, அந்நாட்டின் தலைமை ஆலோசகராக இருக்கும் ஆங் சான் சூகியுடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தார்.

மியான்மரை விட்டு வெளியேறிய அகதிகள் கண்ணியமான வகையில் மீண்டும் தாய்நாடு திரும்ப தேவையான நடவடிக்கைகளை ஆங் சான் சூகி மேற்கொள்ள வேண்டும் என டில்லர்சன் வலியுறுத்தினார். நாடு திரும்பும் அகதிகளின் மீள்குடியமர்த்தல் தொடர்பாக தேவையான வரையறைகளை வகுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், வங்காளதேசத்தில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்கியா அகதிகளை திரும்ப பெறுவது குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய உள்ளதாக மியான்மர் அரசின் ஆலோசகர் ஆங் சான் சூகி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆசிய ஐரோப்பிய கூட்டமைப்பின் உயரதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திய பின்னர் அவர் செய்தியாளார்களிடம் பேசிய அவர், ரோஹிங்கியா அகதிகளை பாதுகாப்பாக திரும்ப பெறுவது தொடர்பாக இந்த வார இறுதியில் வங்காளதேச அரசுடன் நடைபெற உள்ள பேச்சுவார்த்தையானது, புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு சிறந்த முடிவாக அமையும் என நம்புவதாக கூறினார்.

No comments

Powered by Blogger.