Header Ads



மியான்மாரில் ரோஹின்ய முஸ்லிம்கள் பற்றி, வாய் திறக்காத போப் பிரான்சிஸ்


மியான்மர் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ள போப் ஃபிரான்சிஸ், "அனைத்து இனக் குழுக்களுக்கும் மரியாதை வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளபோதும், 'ரோஹிஞ்சா முஸ்லிம்கள்' என்று குறிப்பிட்டுக் கூறுவதைத் தவிர்த்தார்.

அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் 'ரோஹிஞ்சா முஸ்லிம்கள்' எனும் பதத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று மனித உரிமைகள் குழுக்கள் வலியுறுத்தியிருந்தபோதும், அந்தப் பதத்தைப் பயன்படுத்துவது, அந்நாட்டில் வாழும் கத்தோலிக்கர்களுக்கு சிக்கல்களை உண்டாக்கும் என்று மியான்மரில் உள்ள கத்தோலிக்கத் திருச்சபை போப்பிடம் கூறியிருந்தது.

இனச் சுத்திகரிப்பில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள மியான்மரில் நடக்கும் வன்முறைச் சம்பவங்களில் இருந்து தப்ப, சுமார் 6.2 லட்சம் ரோஹிஞ்சாக்கள் அண்டை நாடான வங்கதேசத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

'ரோஹிஞ்சா' எனும் பதத்தை அங்கீகரிக்க மறுக்கும் மியான்மர் அரசு அவர்களை 'வங்காளிகள்' என்று அழைக்கிறது. அவர்களை வங்கதேசத்தில் இருந்து வந்த சட்டவிரோதக் குடியேறிகள் என்றும், அவர்களை பூர்வக் குடிகளாக கருத முடியாது என்றும் அந்நாட்டு அரசு கூறுகிறது.

ரோஹிஞ்சாக்கள் பற்றி போப் எதையும் குறிப்பிட்டுப் பேசாதபோதும், அவர்களின் பூர்வீக உரிமைகளுக்கு வலிமையான ஆதரவு தரும் வகையில்அவரது உரை அமைந்திருந்தது.

"மியான்மரின் எதிர்காலம் அமைதியை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். சமூகத்தில் உள்ள ஒவ்வொரு தனி நபரின் கண்ணியம் மற்றும் உரிமைகள், இங்குள்ள ஒவ்வொரு இனக்குழுக்கள் மற்றும் அவர்களின் அடையாளத்திற்கான மரியாதை, சட்டத்தின் ஆட்சிக்கான மரியாதை, எந்தத் தனி நபர் மற்றும் இனக் குழுக்களையும் புறக்கணிக்காத, அனைவரின் நன்மைக்கும் பங்களிக்கக் கூடிய ஜனநாயக அமைப்பு முறைக்கான மரியாதை ஆகியவற்றை அந்த அமைதி அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்," என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

"மியான்மர் மக்கள்தான் அந்நாட்டின் மிகப்பெரிய சொத்து," என்று குறிப்பிட்ட அவர், "உள்நாட்டுப் போர், இங்கு நீண்ட காலமாக நிலவும் அமைதியின்மை, அதனால் உண்டான ஆழமான வேறுபாடுகள் ஆகியவற்றால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் தொடர்ந்து பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர், " என்றும் அவர் கூறினார்.

"மத வேறுபாடுகள் நம்பிகையின்மை மற்றும் பிளவுகளுக்கான மூலமாக இருக்கக் கூடாது. ஒற்றுமை, மன்னித்தல், சகிப்புத்தன்மை மற்றும் தேசத்தை திறம்படக் கட்டமைத்தல் ஆகியவற்றின் ஆதாரமாக அது இருக்க வேண்டும்," என்று அவர் பேசினார்.

'ரோஹிஞ்சா சகோதர சகோதரிகள்' என்று குறிப்பிட்டு அவர் தன் முந்தைய உரைகளில் அவர்களுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.

முன்னதாக, மியான்மர் நாட்டின் செயல்முறைத் தலைவராக உள்ள ஆங் சான் சூச்சியை அவர் சந்தித்தார். ஆங் சான் சூச்சியும் தனது உரையில் ரோஹிஞ்சாக்கள் பற்றிக் குறிப்பிடவில்லை.

ஆனால், "ரகைன் மாகாணத்தில் நடக்கும் சம்பவங்கள் உலகின் கவனத்தை மிகவும் வலிமையாக ஈர்த்துள்ளது, என்று சூச்சி குறிப்பிட்டார்.

ரோஹிஞ்சாக்கள் விவகாரத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுவரும், நோபல் அமைதிப் பரிசு பெற்றவரான சூச்சிக்கு வழங்கப்பட்ட 'ஃபிரீடம் ஆஃப் தி இங்கிலிஷ் சிட்டி ஆஃப் ஆக்ஸ்ஃபோர்ட்' பட்டம் திங்களன்று பறிக்கப்பட்டது.

மியான்மரில் நான்கு நாள் பயணம் மேற்கொள்ளும் 80 வயதாகும் போப் ஃபிரான்சிஸ்-இன் இரண்டாம் நாள் பயணம் இன்று.

யங்கூனில் புத்த, இஸ்லாமிய, இந்து, யூத மற்றும் கிறிஸ்தவ சமயத் தலைவர்களுடன் அவர் நடத்திய 40 நிமிட சந்திப்பின்போதும், அவர் ரோஹிஞ்சாக்கள் பற்றி நேரடியாக எதுவும் குறிப்பிடவில்லை என்று வாடிகன் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மியான்மரில் இருந்து புறப்பட்ட பின் வங்கதேசம் செல்லும் போப் அடையாள நிமித்தமாக ஒரு சிறு ரோஹிஞ்சா அகதிகள் குழுவைச் சந்திக்கிறார்.

No comments

Powered by Blogger.