November 25, 2017

கிந்தொட்டைகள் தொடர்வதை, நிறுத்துவோம்...!

-Abdul Haq Lareena-

கிந்தொட்டை சம்பவமும் அதற்கு முந்திய சம்பவங்களும் நாடறிந்தவைதாம். சகோதரர் Rasmy Galle ஒரு நீண்ட பதிவை எழுதி அதனை மொழிபெயர்க்க உதவுமாறு கோரி இருந்தார். Siaaf Muhammedh உள்ளிட்டு, வேறு சிலரும் அப்பதிவின்கீழ் என் பெயரை டேக் செய்திருந்தனர். எனினும், மாத்தளையில் இடம்பெற்ற பரிசளிப்பு விழாவுக்குச் சென்றுவிட்டு வந்திருந்த களைப்பு, மலைபோல் குவிந்திருந்த வீட்டு மற்றும் வெளிப் பொறுப்புகள் காரணமாக உடனடியாகக் கருத்தெதுவும் பதியவில்லை. வெறுமனே லைக்குடன் கடந்து செல்லும் பதிவுமல்ல, அது. சகோதரர் ரஸ்மியின் மிகப் பெறுமதியான அப் பதிவின் தூரநோக்கினை நான் மிகத் தெளிவாகப் புரிந்துகொண்டேன். அவரை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக!

முதலில், நாம் சிங்கள சமூகத்துக்குக் கொண்டு செல்ல விரும்பும் செய்தியைச் சொல்வதற்கான நமது 'தொனி' குறித்து இப்போதிருப்பதை விடவும் அதிகக் கவனம் செலுத்துதல் அவசியம். சொல்லப்படும் ஒரு கருத்து யாரால், எச்சமூகத்தவரால், எச்சந்தர்ப்பச் சூழமைவில் சொல்லப் படுகிறது என்பதையே எல்லாரும் கூர்ந்து கவனிக்கப் பழகி இருக்கின்றார்கள். இதற்கு நாம் யாரும் விதிவிலக்கல்லர்.

ஆகவே, எச்சமூகத்தினதும் மன உணர்வுகளைக் கிளர்த்தி விடத்தக்க உணர்ச்சிமயமான அல்லது அதன் கூறுகள் கொண்ட தொனியில் அமையும் செய்திகளை நாம் மொழி பெயர்க்கும் போது அதனை மிகக் கவனமாகக் கையாள வேண்டிய தேவை நமக்கு இருக்கிறது. அந்த வகையில் தான், 'மொழிபெயர்ப்பாளர் வெறுமனே ஒரு செய்தியின் ஊடுகடத்தி மாத்திரமே' என்ற பார்வையைத் தனிப்பட்ட முறையில் நான் ஏற்றுக்கொள்வதில்லை. அதற்கு அப்பாலும் நாம் நம் பணியில் இயங்க வேண்டி யிருக்கிறது.

எனவே, இது போன்ற தருணங்களில் உணர்வு நீக்கம் செய்யப் பட்டதும், முழுமையான தரவுகள் அடங்கியதுமான பதிவு செய்தியறிக்கைத் தொனியில் அமைவதே மிகப் பொருத்தமானதாய் அமையும் என்பது என்னுடைய மிகத் தாழ்மையான கருத்து. இதனை நான் தனியே சகோதரர் றஸ்மிக்காக மட்டும் இங்கே குறிப்பிடவில்லை என்பதை அருள்கூர்ந்து கவனம் கொள்க. மாறாக, என்னையும் உள்ளிட்டு நம் எல்லோருக்குமான ஒரு பொதுவான நினைவூட்டலாகும்.

நமது மொழியாடலின் போது, மிகக் குறிப்பாகப் பிற சமூகங்கள் தொடர்புறும் சமூக நல்லிணக்கம் சார்ந்த விடயங்களிலோ முரண்பாடுகளைக் களையும் ஒரு களவெளியிலோ நாம் உணர்ச்சிமயமான தொனியை விடவும் சிந்தனையைத் தூண்டும் மிக நிதானமான தொனியினைக் குவிமையப் படுத்துவது (ஃபோகஸ்) மிகவும் இன்றியமையாததாகும் என்பதைக் கவனம் கொள்வோமாக. அப்படியான பதிவுகளை மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளர்களும் இது விடயத்தில் செய்தியின் உணர்வினை விடவும் சமூக நலனுக்கு ஊறுவிளைவிக்காத சமூகப் பொறுப்பு உணர்வுக்கே அழுத்தம் கொடுத்துச் செயற்படுவது காலத்தின் தேவையாகும்.

சகோதரர் Rasmy Galle எழுதிய பதிவு என் மனதுக்குள் உழன்றபடியே இருந்தது. அதனை அவரின் எழுத்தின் வெற்றி என்றும் கொள்ளலாம், மாஷா அல்லாஹ். இதனை 1-2 பதிவோ பின்னூட்டமோ இட்டுவிட்டுக் கடந்து செல்லும் ஒரு விடயமாக நான் கருதவில்லை. ஆகவே, நான் என்னளவில் என்ன செய்யலாம் என இடையறாது யோசனையில் ஆழ்ந்தேன்.

அதன் விளைவாகச் சமூக நல்லிணக்கம் தொடர்பில் ஏலவே களத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பிக்குமார் உள்ளிட்ட ஒரு குழுவினரோடு இது தொடர்பிலான ஓர் உரையாடலை நிகழ்த்தினேன். அதில் நான் மிகவும் வலியுறுத்தியது யாதெனில், இப்போது இனத்துவேஷம் புரையோடிப் போயுள்ள மூத்த தலைமுறையையும், அதனை அடியொட்டித் தொடர்ந்து சென்று கொண்டிருக்கும் இளையோரையும் கைவிட்டுவிட்டு, இனிவரும் தலைமுறையினரான சிங்கள - தமிழ் - முஸ்லிம் பாடசாலை மாணவர்களிடையே சமூக நல்லிணக்கப் பட்டறைகளை நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்பதைத்தான்.

இன்ஷா அல்லாஹ், வெகுவிரைவில் அதற்கான களப்பணியில் பிக்குமார் உள்ளிட்ட பெரும்பான்மைச் சகோதர சகோதரிகளுடன் களமிறங்கும் உத்தேசத்திலும் தீர்மானத்திலும் உள்ளோம். இன்ஷா அல்லாஹ், அதற்கான நிதியுதவிகள் தேவைப்படுமிடத்து உங்கள் உதவிகளையும் நாடும் எண்ணம் உண்டு. இன்ஷா அல்லாஹ், இனிவரும் காலங்களில் நம்முடைய இளைய தலைமுறை ஒருவரை ஒருவர் குரோதத்துடன் வெட்டியும் கொத்தியும் சுட்டும் சாய்க்காமல் இலங்கைத் தாயின் மக்களாய் ஒருமித்து வாழத்தக்க கருத்தியல் விதையினை ஊன்றி வளர்க்கும் இப்பணி வெற்றிபெற உங்கள் அனைவரதும் பிரார்த்தனைகளும் ஒத்துழைப்புகளும் அவசியம் என்பதையும் கருத்திற் கொள்க. அற்பமான இந்த ஆயுளுக்குள் நம்மால் செய்து முடிக்கத் தக்க உச்சபட்சப் பணிகள் அனைத்தையும் செய்துமுடிப்போம் என்பதில் உறுதி கொள்வோமாக!

சகோதரர் றஸ்மிக்கும் அவர் குழுவினருக்கும் குடும்பத்தினருக்கும் அல்லாஹ் அருள்பொழிவானாக!

1 கருத்துரைகள்:

அப்த்துல் லத்தீப் லரீனா அவர்கட்கு
உங்கள்ளது ஆக்கம் காலத்தின் தேவை
என்பதை உணர்த்தி உள்ளீர்கள்.தற்போது இப்படிப்பட்ட ஆக்கப்பூர்வமான எதிர்கால இறு
சமூகம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வேலைத்திட்ந்களை செய்வதற்கு முஸ்லிம் சமூகம் முன்வரவேண்டும் என்று.நன்றி.

Post a Comment