November 05, 2017

யார் இந்த, அல்வாலித் பின் தலால்...?

சவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரேபிய நாட்டின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் மிக முக்கியமானவர் அல்வாலித் பின் தலால். உலகின் மதிப்புமிக்க பில்லியனர்கள் பட்டியலில் தனக்கென ஒரு இடத்தை இவர் பெற்றிருக்கிறார்.

இதனால் இவருடைய கைது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அல்வாலித் பின் தலால் யார்? அவர் என்ன தொழில் செய்கிறார்? எதற்காக தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார்?

சவுதி அரேபியாவின் அரச குடும்பத்தில் இளவரசர் தலால் மற்றும் மோனா அல் சோக் இணையர்களுக்கு அல்வாலித் பின் தலால் 1955ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் திகதி பிறந்தார்.

இவருடைய தாத்தா இபின் சவுத் சவுதி அரேபியாவின் முதல் அரசர் ஆவார். அல்வாலித் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள மென்லோ கல்லூரியில் தொழில் நிர்வாகப் பட்டமும், நியூயார்க் நகரில் உள்ள சைரக்ஸ் பல்கலைக் கழகத்தில் சமூக அறிவியல் பாடப் பிரிவில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.

அல்-தலாலைப் பொறுத்தவரையில் பெண் உரிமைகளுக்குக் குரல் கொடுப்பவராகவும் இருந்துள்ளார். அண்மையில் சவுதியில் பெண்கள் வாகனங்கள் ஓட்டத் தடை என்ற அறிவிப்பு வெளியான போது "பெண்கள் வாகனங்கள் ஓட்ட நேரம் இது" என்று டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். சவுதி அரேபியாவின் முதல் பெண் விமான ஓட்டியாக நியமிக்கப்பட்ட ஹனாடி ஜகாரியா அல்-ஹின்டிக்கு நிதியுதவி வழங்கியுள்ளார்.

அல்வாலித் பின் தலால் தற்போது கிங்டம் ஹோல்டிங் என்ற நிறுவனத்தின் தலைவராக உள்ளார். இந்நிறுவனத்தின் 95 சதவிகிதப் பங்குகளை இவர் கொண்டுள்ளார்.

நிதித்துறை, சுற்றுலாத்துறை, சுகாதாரத்துறை, ஊடகத்துறை, கேளிக்கைத்துறை, சில்லறை வர்த்தகம், வேளாண்துறை, தொழில்நுட்பம், ரியல் எஸ்டேட், விமானப் போக்குவரத்து, பெட்ரோகெமிக்கல்ஸ் எனப் பல்வேறு துறைகளில் அல்வாலித் வெற்றிகரமாக இயங்கி வருகிறார்.

முதலீட்டுத் துறையில் இவருக்குள்ள துணிச்சல் காரணமாக அரேபியாவின் வாரன் பஃபட் என்று வர்ணிக்கப்படுகிறார். 2017ஆம் ஆண்டின் ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலகின் பணக்காரர்கள் பட்டியலில் அல்வாலித் 45ஆவது இடத்தைப் பெற்றார்.

அதேபோல ஃபோர்ப்ஸ் இதழின் 2017ஆம் ஆண்டுக்கான அரேபியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். இவருடைய நிகர சொத்து மதிப்பு 18.7 பில்லியன் டொலர்களாகும்.

அரேபியாவைத் தாண்டியும் பல நாடுகளில் அல்வாலித் முதலீடு செய்துள்ளார். அமெரிக்காவின் சிட்டி குரூப், ஆப்பிள், 21ஸ்ட் சென்சுரி பாக்ஸ், டிவிட்டர் ஆகிய நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார்.

1991-95க்கு இடைப்பகுதியில் தற்போதைய அமெரிக்க ஜனாதிபதியான டொனால்டு டிரம்பின் ரியல் எஸ்டேட் நிறுவனம் இழப்பைச் சந்தித்த போது மீட்க உதவினார். மேலும் டிரம்பின் பிளாசா ஹோட்டலில் முதலீடு செய்துள்ளார்.

இந்நிலையில் சவுதியில் இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையில் 4-ஆம் திகதி சனிக்கிழமை புதிதாக அமைக்கப்பட்ட ஊழல் தடுப்பு கமிஷனால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவருடன் சேர்த்து மேலும் பத்து இளவரசர்கள், 4 அமைச்சர்கள், 12 முன்னாள் அமைச்சர்கள் எனப் பலர் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் உறுதி செய்துள்ளன.

கடந்த மாதத்தில் அல்வாலித் வெஸ்டன் மீடியாவுக்கு அளித்த பேட்டியில்," சவுதி அரசு எண்ணெய் நிறுவனங்களின் பொதுப் பங்குகளுக்கு தனியார் நிறுவனங்களை அனுமதிக்கத் திட்டமிட்டுள்ளது" என்றார்.

அந்தப் பேட்டியில் அவர் ரகசிய கிரிப்டோ நாணயங்கள் குறித்து பதில் அளித்திருந்தார். இந்நிலையில் ஊழல் வழக்கில் இவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டிருப்பது உலகளவில் இவர் முதலீடு செய்துள்ள பெருநிறுவனங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அல்வாலித் உள்படக் கைது செய்யப்பட்ட அனைவர் மீதும் சவுதி அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

4 கருத்துரைகள்:

இப்போது புரிகிறதா சல்மான் இல்லுமினாட்டின் கை பொம்மை!

A billionaire is needless to commit fraud. World acclaimed business magnet having assets of multi million worth. Not known true reason for his arrest.

I am in Saudi and local people are happy on his rule what is your problem, do not judge as a utter fool

அல்வாலீத் கம்பி எண்ணுவதை பார்க்கும்போது, முஸ்லிம்களுக்கு சந்தோஷம்தான்.

Post a Comment