Header Ads



பெற்றோல் தட்டுப்பாடு பற்றி, சி.ஐ.டி விசாரணை

இலங்கை முழுவதிலும் அண்மையில் ஏற்பட்ட பெற்றோல் தட்டுப்பாடு தொடர்பில், குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் (சி.ஐ.டி) விசாரணைக்கு, பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க உத்தரவிட்டுள்ளாரெனத் தெரிவிக்கப்படுகிறது.

பெற்றோல் நெருக்கடி தொடர்பில் விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட, அமைச்சரவைச் செயற்குழுவின் விசாரணை அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே, இவ்விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

இம்மாதம் 3ஆம் திகதி முதல், இலங்கையில் திடீரென பெற்றோலுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது. சுமார் ஒரு வாரகாலத்துக்கு நீடித்த இந்நெருக்கடி, பொதுமக்களுக்கு அதிக அசௌகரியங்களை ஏற்படுத்தியிருந்ததோடு, அரசியல் ரீதியாக ஏராளமான அழுத்தத்தை, அரசாங்கத்துக்கும் வழங்கியிருந்தது. 

இதைத் தொடர்ந்து, இது தொடர்பாக விசாரணை செய்வதற்காக, 4 பேர் கொண்ட அமைச்சரவைச் செயற்குழுவொன்றை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்திருந்தார். விசேட பணிப்பொறுப்புகள் அமைச்சர் சரத் அமுனுகம தலைமையிலான இக்குழுவில், அமைச்சர்களான அர்ஜுன ரணதுங்க, அநுர பிரியதர்ஷன யாப்பா, சம்பிக்க ரணவக்க ஆகியோர் உள்ளடங்கியிருந்தனர். 

நேற்று (14) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வைத்து, இவர்களது அறிக்கை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது. 

இவ்வறிக்கையில், மேலதிகமான பெற்றோல் கையிருப்பை வைத்திருக்காமை, அவசர நிலைமையில் பெற்றோல் விநியோகிப்பதற்கான முறைமையொன்று இல்லாமை ஆகிய காரணங்கள் காரணமாக, பெற்றோலுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது எனக் கூறப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. 

இவ்விடயத்தை முழுமையாக விசாரிப்பதற்காக, மேலதிக காலம் வழங்கப்பட்ட இக்குழு, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தாலும் லங்கா இந்தியன் ஒயில் கம்பனியாலும், பெற்றோலுக்காக முன்வைக்கப்பட்ட வேண்டுகோள்கள் இரண்டுமே, ஒரே நேரத்தில் எவ்வாறு தாமதமாகின என, சந்தேகத்தை எழுப்பியுள்ளது. 

எரிபொருளுக்கான கொள்முதல் கட்டளையை வழங்கிய பின்னர், நாட்டுக்கு அக்கப்பல் வருவதற்கு, 21 நாட்கள் தேவைப்படும். சில நிலைமைகளில், குறைந்தது 62,000 தொடக்கம் 65,000 மெற்றிக் தொன் பெற்றோல், இக்காலத்தில் கையிருப்பில் இருந்திருக்க வேண்டுமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதனடிப்படையிலேயே, இவ்விடயம் தொடர்பில் சி.ஐ.டி விசாரணைக்கு, அமைச்சர் அர்ஜுனவால் உத்தரவிடப்பட்டுள்ளது.    

No comments

Powered by Blogger.