Header Ads



பெற்றோல் தட்டுப்பாட்டுக்கு, இந்தியா காரணமா..? பிரதமர் ரணில்


சிறிலங்காவில் பெற்றோலுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டுக்கு லங்கா ஐஓசி எனப்படும் இந்திய நிறுவனமே காரணம் என்று சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை ஏற்க முடியாது என்றும்,  இந்த நெருக்கடிக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று அனுரகுமார திசநாயக்க, தினேஸ் குணவர்த்தன ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்து உரையாற்றிய சிறிலங்கா பிரதமர்,

“ தற்போதைய நெருக்கடி பெரும்பாலும், ஏனையவர்களால் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம். இது குறித்து விசாரிக்கப்படும்.

பெற்றோலிய கூட்டுத்தாபன பணியாளர்கள் அண்மைக்காலங்களில் வேலை நிறுத்தப் போராட்டங்களை நடத்திய போது  மிகச் சிக்கலான தருணங்களில், எரிபொருள் விநியோகத்தை மேற்கொண்டதற்காக லங்கா ஐஓசிக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

திருகோணமலையில் உள்ள எண்ணெய் தாங்கிகள் லங்கா ஐஓசிக்கு வழங்கப்பட்டு விட்டன. போதிய நிதிவளம் இல்லாமையால், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால், அவற்றைப் பயன்படுத்த முடியவில்லை.

அப்போது, இதில் முதலீடு செய்ய இந்தியா விரும்புகிறதா என்று கேட்டோம். அவர்கள் இணங்கினார்கள். புரிந்துணர்வு உடன்பாடும் கையெழுத்திடப்பட்டது.

திருகோணமலையில் 10 எண்ணெய் தாங்கிகளை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்குப் பெற்றுக் கொள்வது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை சமர்ப்பித்துள்ளேன்.

தற்போதைய நெருக்கடியைத் தீர்க்க, மற்றொரு கப்பல் பெற்றோலை இந்தியாவில் இருந்து பெற்றுக் கொள்வது குறித்து, இந்தியத் தூதுவருடன் நானும் சிறிலங்கா அதிபரும் பேசியுள்ளோம். நாளை கொழும்பு வரவுள்ளதற்கு மேலதிகமாக இந்தக் கப்பல் வரவுள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.