Header Ads



"பாபர் மசூதி விஷயத்தில், ரவி சங்கரை நம்ப வேண்டாம்"

பாபரி மஸ்ஜித் - ராமர் கோவில் விவகாரத்தில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் நடுநிலையான மத்தியஸ்தராக பங்குவகிக்கவில்லை என்றும், மாறாக அவர் மஸ்ஜித் இருந்த இடத்தில் ராமர் கோவிலை கட்டுவதற்கான ஆதரவாளராக நடந்து கொள்வதாகவும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச்செயலாளர் எம்.முஹம்மது அலி ஜின்னா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

சில அறிமுகமற்ற இந்து மற்றும் முஸ்லிம் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு ரவிசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கை, அவரது ஒரு தலைபட்சமான நோக்கங்களை தெளிவாக விளக்குகிறது.

பாரபட்சமற்ற மத்தியஸ்தராக செயல்பட ரவிசங்கர் எவ்வகையிலும் தகுதியற்றவர் என்பதை இது தெளிவுபடுத்துகிறது. அவரோடு பேசிய பெரும்பாலான முஸ்லிம்கள் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவிலை கட்டுவதை எதிர்க்கவில்லை என்று கூறுகிறார்.

வேறுவார்த்தைகளில் கூறினால், பாபரி மஸ்ஜித் மீதான தங்களது உரிமையை முஸ்லிம்கள் கைவிட தயார் என்ற தவறான செய்தியை பரப்புரைச் செய்யவே இதன் மூலம் அவர் முயற்சிக்கிறார்.

உண்மைகளும், கட்டுக்கதைகளும் பொதிந்து கிடக்கும் ஒரு விவகாரத்தில் உண்மைகளை ஆராய்வதில் மெளனமாக இருந்து விட்டு கட்டுக்கதைகளின் பின்னால் செல்வது முற்றிலும் பாசாங்குத்தனமாகும். பாபரி மஸ்ஜித் இருந்த இடம் ராமனின் ஜென்மஸ்தலம் என்பது கட்டுக்கதையாகும்.

1528-ஆம் ஆண்டு பாபரி மஸ்ஜித் கட்டப்பட்டதும், 1949-இல் சிலைகளை பாபரி மஸ்ஜிதுக்குள் நிறுவியதும், 1992-இல் பாபரி மஸ்ஜிதை இடித்ததும் எல்லாம் சர்ச்சைக்கு இடமில்லாத வரலாற்று உண்மைகளாகும்.

ரவிசங்கர் நடத்திய பேச்சுவார்த்தை தொடர்பான அறிக்கைகள் கோவில் கட்டுவது தொடர்பான பிரச்சனையை மட்டுமே பேசுகின்றன. அதே வேளையில், இடிக்கப்பட்ட இடத்தில் மஸ்ஜிதை திரும்ப கட்டும் பிரச்சனை வசதியாக தவிர்க்கப்பட்டுள்ளது. இது போன்ற பேச்சுவார்த்தைகளில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றும் ரவிசங்கர் போன்ற சுயவிளம்பரம் தேடும் மத்தியஸ்தர்களின் வலையில் சிக்கி ஏமாந்து விட வேண்டாம் என்றும் எம்.முஹம்மது அலி ஜின்னா, முஸ்லிம் தலைவர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கில் இந்த மத்தியஸ்த பேச்சுவார்த்தைகளுக்கு எவ்வித சட்ட ரீதியான ஏற்புடைமையும் கிடையாது. மேலும் இவை பிரச்சனைக்கு எந்த தீர்வையும் வழங்காது. இவ்வாறு எம்.முஹம்மது அலி ஜின்னா கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.