Header Ads



இன உணர்வைத், தூண்டும் மஹிந்த - சம்பந்தன் தாக்கு

"முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, இன உணர்வைத் தூண்டுவதற்கு ஏன் முயல்கிறார்? அவர்களுக்கு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றிபெற வேண்டியுள்ளது. அதனை அடைவதற்காகவே, இன உணர்வைத் தூண்ட முயன்று வருகிறார். மஹிந்த ராஜபக்‌ஷ, மக்களின் மதிப்பை வென்ற தலைவர் என்ற வகையில், இவ்வாறு செயற்படக் கூடாது. உங்களுக்கு அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டுமானால், வேறு வழிகளைக் கையாளுங்கள்" என்று, நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன், நாடாளுமன்றில் நேற்று (16), கோபத்துடனும் ஆக்ரோஷத்துடனும் தெரிவித்தார்.

2018 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாவது மதிப்பீடு மீதான ஆறாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு உரை நிகழ்த்தினார். அவர் அங்கு தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில் கூறியதாவது,

"சமத்துவமின்மை, நீதியின்மை, பாரபட்சம், தனிமைப்படுத்தப்பட்டமை, சட்டவாட்சி அமுலாக்கப்படாமை ஆகியவை காரணமாக, நாட்டின் அபிவிருத்தி பின்னோக்கிச் சென்றது. இந்தப் பிரச்சினைகள் தான், ஆயுதம் தாங்கிய மோதலுக்கு இட்டுச் சென்றன. இவை முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டிருக்குமானால், யுத்தம் தவிர்க்கப்பட்டிருக்கும். நாம் சுதந்திரம் அடைந்தபோது இருந்த நிலைமைக்கும், இப்போதுள்ள நிலைமைக்கும் பாரிய வேறுபாடு காணப்படுகிறது.

"தமிழர்களின் சட்டபூர்வமான அபிலாஷைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். எனினும் தமிழ்த் தலைவர்களின் கோரிக்கைகள், அன்றைய காலம் தொட்டு, பகிஷ்கரிக்கப்பட்டு வந்துள்ளன.

"நாம் தற்போது, புதிய அரசமைப்பை உருவாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளோம். இதன் வெற்றியானது, வெற்றிகரமான பொருளாதார முன்னேற்றத்துக்குத் தேவையானதாகும். இதன்மூலம் சமாதானத்தையும் அபிவிருத்தியையும் ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும், சமாதானத்துக்கான அங்கிகாரம் கிடைக்கப்பெறுவதன் ஊடாக, மக்கள் அதன் பயனையடைவர்.

“எனினும் இவற்றுக்கு மத்தியில், ஒன்றிணைந்த எதிரணியினர், அதற்கு எதிராகக் குரல் கொடுக்கின்றனர் என்று தெரிவித்த அவர், புதிய அரசமைப்பானது பொருளாதாரத்துக்கான அடிப்படை அம்சமாகும் என்பதுடன், அது தொடர்பில் மக்களுக்குத் தெளிவுபடுத்தப்படவும் வேண்டும்” என்றார்.

தொடர்ந்து அவர், முன்னாள் ஜனாதிபதி மீது, கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
"இங்கே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் நிலைப்பாடு, மக்களிடையே ஐக்கியமின்மையை ஏற்படுத்துகிறது. அதிகாரப் பரவலாக்கல் என்பது, நாட்டைப் பிளவுபடுத்தும் எனத் தவறான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவரது, இவ்வாறான பொய்யான வாதத்தின் காரணமாக, நாட்டு மக்களைப் பிளவுபடுத்தக் கூடாது.

"நாம், மூத்த அரசியல்வாதிகள் என்ற அடிப்படையில், மக்களுக்கு வெளிப்படையானதும் உண்மையானதுமான தகவல்களைக் கொண்டு சேர்க்க வேண்டும். பிரிக்க முடியாத, பிரிய முயலாத நாட்டுக்குள், அனைத்து மக்களுக்கும் சமமான வகையிலான அதிகாரப் பரவலாக்கலையே நாம் கோரி நிற்கிறோம்.

"மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்தில், சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவுக்குத் தெரிவித்த கருத்துகளை, நான் இங்கே முன்வைக்க விரும்புகிறேன். அவற்றில் அவர், 'பிளவுபடாத இலங்கையில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும். மேலும் மக்கள் அனைவரும் அவர்களுடைய சுய இடத்தில் அரசியல் பொருளாதார தீர்மானங்களைத் தாமே தீர்மானித்துக்கொள்ளும் வகையில் அரசியல் தீர்வு அமைய வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

"நாம் அதே முயற்சியைத்தான் இப்போது மேற்கொண்டு வருகிறோம். அவர் குறிப்பிட்டதைத் தவிர, வேறொன்றும் செய்ய முயலவில்லை. நாம் வெளிப்படையாக இருக்கிறோம். ஆனாலும், அன்று உறுதியளித்துவிட்டு, இன்று மறுப்புத் தெரிவித்து, மக்களிடையே தவறான கருத்துகள், மஹிந்தவின் தலைமைத்துவத்தின் கீழ் கொண்டு செல்லப்படுகின்றன" என்று தெரிவித்தார்.
தொடர்ந்தும், முன்னாள் ஜனாதிபதி மீதான விமர்சனத்தை முன்வைத்த அவர், “ஒற்றுமைதான் அபிவிருத்திக்குரிய மூலாதாரம். அரசமைப்பு விடயத்தை வைத்து, இன உணர்வைத் தூண்டி, அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு முயற்சி செய்யாதீர்கள். உங்களுடைய தந்தை டி.ஏ.ராஜபக்‌ஷவை நான் நன்கறிவேன். மக்களின் நலனுக்காகப் பாடுபட்ட அவரது தூரநோக்கு சிந்தனைகளையும் அறிவேன்.

"அரசியல் இலாபத்துக்காக இவ்வாறு செயற்பட வேண்டாம் என நான் இந்த சபையில் கோரிக்கையை முன்வைக்கிறேன். அத்துடன், ஒற்றுமையாக இருந்து, நாட்டின் முன்னேற்றத்துக்காக செயற்படுமாறும் நான், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். புதிய அரசமைப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும். அத்துடன் அது மக்களின் தீர்ப்பினையும் பெற்றிருத்தல் வேண்டும்" என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.