November 22, 2017

'கம்மல்துறை வரலாறும் வாழ்வியலும்' நூல் அறிமுகம்

-பலகத்துறை அபூ சஊத் -

கம்பஹா மாவட்டம் நீர்கொழும்பு தேர்தல் தொகுதியில் அமையப்பெற்ற ஒரு சிறிய முஸ்லிம் கிராமமே கம்மல்துறையாகும். பலகத்துறை, போருதொட்ட போன்ற பெயர்களால் அழைக்கப்படும் இவ்வூரில் தற்கால கணிப்பீட்டின் படி சுமார் நாலாயிரம் முஸ்லிம் குடும்பங்கள் வாழ்கின்றனர். பொதுவாக இலங்கையில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழக்கூடிய அதிக ஊர்களில் பல்லாண்டுகளுக்கு முன் வாழ்ந்து மறைந்த முஸ்லிம்களின் வரலாற்றுத் தடயங்களோ, எழுத்துமூல ஆவணங்களோ காணப்படாதது ஒரு பெருங் குறைபாடாகும். இதனை உறுதிப்படுத்தியே 'கம்மல்துறை வரலாறும் வாழ்வியலும்' என்ற மகுடம் சூடப்பட்ட இந்நூல் வெளிவந்துள்ளது.

கம்மல்துறை வரலாறும் வாழ்வியலும் எனும் இந்த நூலை எழுதிய கலாபூஷணம் எம்.ஜே.எம். தாஜுதீன் 35 வருடங்களுக்கும் மேற்பட்ட காலங்கள் ஊடகப்பணி செய்த ஒரு சிரேஷ்ட  ஊடகவியலாளர். வாசிக்கத் தெரிந்த அனைவராலும் இலகுவாகப் புரிந்து கொள்ளும் விதத்தில் எளிய தமிழ் நடையில் இப்புத்தகத்தினை இவர் எழுதியிருப்பது இதன் சிறப்பம்சமாகும். பலகத்துறை கலை இலக்கிய வட்டம் மற்றும் ஜெலால்தீன் பௌண்டேஷன் இணைந்து வெளியீடு செய்துள்ள இந்நூல் 218 பக்கங்களைக் கொண்ட முதலாவது பதிப்பாகும். 1853 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட கம்மல்துறையின் பூர்வீக ஜும்ஆ பள்ளிவாசலும், ஊரின் பிரதான நெய்தல் வளமான கடற்கரைப் பிரதேசமும், தற்போதைய ஜும்ஆ பள்ளிவாசலின் ஒரு பகுதியும் முன் அட்டைப்படத்தை அலங்கரிக்கின்றன. பின் அட்டையில் நூலாசிரியர் பற்றிய சிறு அறிமுகத்தினை பலகத்துறை கலை இலக்கிய வட்டச் செயலாளர் எழுதியுள்ளதுடன், தடித்த பெறுமதிமிக்க அதன் அட்டைப் படத்தினை பலகத்துறை கலை இலக்கிய வட்டத்தின் புகைப்படக்கலைஞர் எம்.எம்.எம். பர்ஹான் வடிவமைத்துள்ளார்.

நூலாசிரியர் நூலுக்குள் நுழையமுன் இந்நூலினை தன் அன்புத்தாய் சமூனா உம்மா, அன்புத்தந்தை ஜெலால்தீன் ஆகிய இருவருக்கும் சமர்ப்பணம் செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து ஒரு மனிதன் தன்னைப் பற்றியும், தான் பிறந்த நாட்டைப்பற்றியும், தான் வாழும் சூழல் பற்றியும் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும் என நூலாசிரியர் தனது முகவுரையில் குறிப்பிட்டுள்ளார். இதன் அணிந்துரையைப் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அரபு இஸ்லாமியப் பாடங்களின் முன்னாள் முதுநிலை விரிவுரையாளரும், வரலாற்றுத்துறை ஆய்வாளருமான பேராசிரியர் எம்.ஐ.எம். அமீன் எழுதியுள்ளார். வாழ்த்துரையை சிரேஷ;ட ஊடகவியலாளரும், நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான என்.எம். அமீன் வழங்கியிருப்பதுடன், அதன் மதிப்புரையை மேலதிகத் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் அளவிட்டுள்ளார்.

கம்மல்துறை எனும் ஊரின் புராதன வரலாற்றையும், அக்கால முஸ்லிம்களின் வாழ்வியல் சமூக கலாச்சார ஒழுங்கு முறைமைகளையும் மிகவும் சுவாரஷ்யமாகவும், சுவைபடவும் எழுதியிருப்பது இப்புத்தகத்தை மென்மேலும் மெருகூட்ட வைத்துள்ளது. 66 சிறுசிறு தலைப்புக்களில் எழுதப்பட்டுள்ள இந்த வரலாறும் வாழ்வியலும் என்ற நூலில் அக்கால முஸ்லிம்களின் குடியேற்றம், தர்ஹாவின் தோற்றம், கொடியேற்றம், கல்வி, கலாச்சாரம், சமூக ஒழுங்கு, தொழிற்துறைகள், பொழுதுபோக்கு, கலை இலக்கியம் மற்றும் இஸ்லாமிய நாடகங்கள், பொதுநல இயக்கங்களின் சமூகப்பணிகள், பள்ளிவாசல் அரச பாடசாலை மத்ரஸாக்களின் உருவாக்கம், போக்குவரத்து வசதிகள், இனக்கலவரம், மையவாடி மற்றும் காதியானிப்பிரச்சினைகள் என்பன முக்கிய இடம் வகிக்கின்றன. கம்மல்துறை மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய அரசியல் பிரமுகர் சேர் ராஸிக் பரீதின் சேவைகள் இங்கு புகழாரம் சூட்டப்பட்டுள்ளது. இவ்வூர் ஈன்றெடுத்து மறைந்த யூ.எம். தாஸீன், எம்.ஜே.எம். ரியாழ், அப்துல் ஜெவாது ஆலிம், டாக்டர் யூ.எம். நுபார் பாரூக் போன்ற அறிஞர்களினதும்,திருமண பந்தம் மூலம் கம்மல்துறைக்குச் சொந்தமான தற்போதைய அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையின் பொதுச்செயலாளர் அஷ்ஷேஹ் எம்.எம்.ஏ.முபாரக் மற்றும் மர்ஹும் மௌலவி றூஹுல் ஹக் போன்ற அறிஞர்களினதும் வாழ்வியல் குறிப்புக்களும் உள்ளடக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை முஸ்லிம்களின் இருப்பிடம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். முஸ்லிம்கள் வந்தேறு குடிகள் எனும் வாசகத்தைப் பயன்படுத்தி இலங்கையிலுள்ள பேரினவாதம் முஸ்லிம் சமூகத்தை நசுக்கத்தருணம் பார்த்துக் கொண்டிருக்கும் காலகட்டமிது. அதனை நிவர்த்தி செய்யும் நடவடிக்கைகளில் ஒரு முயற்சியாக இந்த வரலாற்று ஆவணம் காணப்படுகின்றது. ஊடகத்துறையில் முதிர்ச்சி பெற்ற ஒரு தனிமனிதனால் மேற்கொள்ளப்பட்ட சுமார் 15 வருடகால தேடலின் உருவாக்கமாக மிளிரும் கம்மல்துறை வரலாறும் வாழ்வியலும் என்ற ரூபா.300 பெறுமதியான இந் நூல் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றுக்குக் கிடைத்ததொரு வரப்பிரசாதம் என்றே கூறலாம். நூலைப் பெற்றுக்கொள்ளவும் விபரம் அறிவதற்கும் தொடர்புகொள்க 0774364546, 0773129684.

0 கருத்துரைகள்:

Post a Comment