Header Ads



கொழும்பில் புலிகளின் தமிழீழ வரைபடத்துடன், பிவித்துரு ஹெல உறுமய


புதிய அரசியலமைப்புக்கு எதிராக மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கும் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான பிவித்துரு ஹெல உறுமய கொழும்பிலிருந்து மாபெரும் உந்துருளிப் பேரணி ஒன்றை ஆரம்பித்துள்ளது.

தமிழீழ வரைபடம் பொறிக்கப்பட்டும், சமஷ்டி ஆட்சி வேண்டாம் என்ற வாசகம் அடங்கியதுமான தயாரிக்கப்பட்ட உடைகளை அணிந்தும், கறுப்புக் கொடிகளை நெற்றியில் கட்டியவாறும் கொழும்பில் ஆர்ப்பாட்டத்தை நடத்திய பிவித்துரு ஹெல உறுமய, பேரணியையும் ஆரம்பித்தது.

கொழும்பு மத்திய தொடருந்து நிலையத்திற்கு முன்பாக இன்றைய தினம் காலை ஒன்றுதிரண்ட பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தலைமையிலான இளைஞர் படையணி மத வழிபாட்டை அடுத்து இந்தப் பேரணியை ஆரம்பித்தது.

பேரணிக்கு முன்னர், தொடருந்து நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் ஈடுபட்டதன் பின்னர் புதிய அரசியலமைப்பு மீது சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், அதற்கெதிராக வாக்களிக்கும்படி எழுதப்பட்ட துண்டுப் பிரசுரங்களையும் விநியோகித்தனர்.

இதனையடுத்து உந்துருளிப் பேரணி புறக்கோட்டையிலிருந்து ஆரம்பமாகியது.

இதன்போது பேரணியில் ஈடுபட்டவர்களை பொலிஸார் காணொளி பதிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, புதிய அரசியலமைப்பு மீது சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் அதற்கெதிராக மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

“பிவித்துரு ஹெல உறுமயவின் இளைஞர் படையணி ஏற்பாடு செய்த விழிப்புணர்வு பேரணி இன்று ஆரம்பமாகின்றது. கொழும்பு மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சென்று, இறுதியாக அவிசாவளை வரை இப்பேரணி முடிவடையும்.

சமஷ்டி ஆட்சிவந்தால் இந்த நாட்டிற்கு என்ன நடக்கும் என்பதன் விளைவுகளை விரிவாக அச்சிட்ட துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தலும் இதன்போது செய்கின்றோம். இன்று இந்த அரசாங்கத்திலுள்ள பலர் அடுத்த பரம்பரையை பற்றி சிந்திப்பதில்லை.

இந்த அரசாங்கம் 5 வருடங்களுக்குத் தான் ஆட்சிக்குவந்தது. ஆனால் பல்லாண்டுகளுக்கு சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்கிறது. புதிய அரசியலமைப்பின் ஊடாக எவ்வாறு நாடு பிரிகிறது? இரத்த ஆறு எவ்வாறு ஏற்படும் என்பதையெல்லாம் இந்த துண்டுப் பிரசுரத்தின் ஊடாக விளங்கப்படுத்தியுள்ளோம்.

எனவே சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் அதற்கெதிராக வாக்களிக்கும்படி மக்களை இதனூடாக தெளிவுபடுத்தி வருகின்றோம்.

வடக்கில் வேறு நாடு என்ற உணர்வில் அவர்கள் இருப்பதால்தான் சர்வேஷ்வரன், விக்னேஸ்வரன் இப்படி கூறுகிறார்கள்.

தேசியக் கொடியை நிராகரிக்கும் வடக்கு கல்வியமைச்சர், புத்தர் சிலைகளை உடைக்கும் விக்னேஸ்வரன் ஆகியோர் குறைந்தளவில் அதிகாரம் இருக்கின்றபோதே இவ்வாறு செய்கிறவர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கினால் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதை ஜனாதிபதியும், பிரதமரும் உணர்ந்துகொள்ள வேண்டும்” என்றார்.

1 comment:

  1. சிங்களவர்களுடன் இனைந்து நாட்டை துண்டாட போகும் அரசியலமைப்பை எதிர்ப்போம்

    ReplyDelete

Powered by Blogger.