November 28, 2017

"அரசாங்கத்திற்குத் தலையடி கொடுத்திருக்கிறது"

எமது இனம் விழித்துக் கொண்டிருக்கின்றது என்பதற்குத் துயிலும் இல்ல தொடர்பாடல்கள் கட்டியம் கூறி நிற்கின்றன என்று  வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார் 

அவர் மேலும் தெரிவிக்கையில் 

கேள்வி – நேற்றைய மாவீரர் நாள் மக்கள் எழுச்சி நிகழ்ச்சிகள் பற்றிய உங்கள் கருத்தென்ன? 

பதில் - மக்கள் தங்களை உணரத் தொடங்கிவிட்டார்கள். தங்கள் சக்தியை உணரத் தொடங்கி விட்டார்கள். தங்கள் உரித்துக்கள் என்ன என்பதையும் உணரத் தொடங்கிவிட்டார்கள் என்று கருதுகின்றேன்.  

நேற்றைய நிகழ்ச்சிகள் துயிலும் இல்லங்களில் மட்டும் நடைபெறவில்லை. கோயில்களில், குடும்ப இல்லங்களில் எல்லாம் தீபச் சுடர் ஏற்றி எமது விடுதலை வீரர்களுக்கு வீர வணக்கம் தெரிவித்துள்ளார்கள் எம் மக்கள். நல்லாட்சி கொண்டுவந்த அரசாங்கத்தால் வல்லாட்சியின் வசம் திரும்ப முடியாததால் முன்னைய அரசாங்க காலத்தில் இருந்த கெடுபிடிகள் குறைந்திருந்தன. 

எமது மாவீரர்களை மலினப்படுத்துவதே மக்களின் மனோநிலை என்றிருந்தால் இவ்வளவு எழுச்சியைக் காட்டியிருக்கமாட்டார்கள் எம் மக்கள். முன்னைய வருடங்களிலும் பார்க்க உணர்வலை இவ்வருடம் கூடியதற்கான காரணங்கள் இரண்டிருப்பதாகத் தெரிகிறது.

ஒன்று உள்ளேயிருந்த உணர்ச்சிகளை இது காறும் எம் மக்கள் தடைபோட்டு வைத்திருந்தார்கள். அவ்வாறு தடை போடத் தேவையில்லை என்றவாறு அரசியல் நிலைமாற்றம் அடைந்ததும் தமது உணர்ச்சிகளை ஊர் அறிய உலகறிய மக்கள் வெளிக்காட்டியுள்ளார்கள்.  

மற்றைய காரணம் எம் மக்களிடையே ஒரு பயம் பிறந்து விட்டது என்று கருதுகின்றேன். விடுதலை வீரர்கள் வலம் வந்த காலத்தில் ஈழத்தை விட எல்லாமுந் தருவோம் என்ற சிங்கள அரசியல் வாதிகள் இன்று சொற்களால் எமக்கு சுகம் தரலாம் என்று எண்ணுவதைப் பார்த்து இவ்வளவுதான் கிடைக்குமா, எமது அபிலாiகள், அடிப்படை வேண்டுதல்கள் நிறைவேறாதா என்ற பயம் பீடிக்க அன்று இருந்த நிலையை எண்ணி அப்போதைய அதிகாரங்களை எண்ணி அன்றைய விடுதலை வீரர்களை எண்ணித் தமது மரியாதைகளை, மாண்பை தன்னெழுச்சியாகத் தெரிவிக்கத் திரண்டனர் என்று கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.

எங்கே எமது தலைவர்கள் விலைபோய் விடுவார்களோ மற்றும் அரைகுறைத் தீர்வைத் தம்மீது திணித்து விடுவார்களோ என்று எண்ணி அஞ்சி விடுதலை வீரர்களின் நினைவேந்தலில் மன நிறைவு காண எத்தனித்துள்ளார்கள். கொள்கைகளில் உறுதியாக இருந்தவர்களின் நினைவில் அமைதி காண எத்தனித்துள்ளார்கள். 

துயிலும் உள்ளங்கள் எமது மக்களுக்குத் துயர் வர விட மாட்டார்கள் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது போன்று தோன்றுகின்றது. அச்சுறுத்தல்கள் ஆங்காங்கே இருந்திருப்பினும் அச்சமின்றி மக்கள் ஒன்று சேர்ந்தமை அரசாங்கத்திற்குத் தலையடி கொடுத்திருக்கிறது. 

எமது இனம் விழித்துக் கொண்டிருக்கின்றது என்பதற்குத் துயிலும் இல்ல தொடர்பாடல்கள் கட்டியம் கூறி நிற்கின்றன!

1 கருத்துரைகள்:

கண்ட இடங்களில் உளறும் இந்த இனவாதி விக்கியின் அபத்தங்களை, இங்கே வெளியிடாவிட்டால், யாழ் முஸ்லிமுக்கு தூக்கம் வராது போல.

Post a Comment