Header Ads



ரோஹின்யர்களை நாட்டுக்குள் அனுமதிக்க, மியன்மார் எந்நேரமும் தயாராக இருக்கிறதாம்...!


ரொஹிங்கிய முஸ்லிம்களை நாட்டுக்கு திருப்பி அனுப்பும் செயல்முறையை பங்களாதேஷ் தாமதப்படுத்துவதாக மியன்மார் குற்றம்சாட்டியுள்ளது. இந்த அகதிகளுக்கான பல மில்லியன் டொலர் சர்வதேச உதவிப் பணம் கிடைக்கும் வரை இந்த தாமதத்தை செய்வதாகவும் மியன்மார் கூறுகிறது.

மியன்மாரின் ரக்கைன் மாநிலத்தில் இராணுவத்தின் கொடூர படை நடவடிக்கை மற்றும் வன்முறைகளில் இருந்து தப்பி கடந்த ஓகஸ்ட் மாதம் தொடக்கம் 600,000க்கும் அதிகமான ரொஹிங்கிய அகதிகள் பங்களாதேஷில் அடைக்கலம் பெற்றுள்ளனர்.

அகதிகளை நாட்டுக்குள் அனுமதிக்கும் செயல்முறையை ஆரம்பிக்க மியன்மார் எந்த நேரமும் தயாராக இருப்பதாக அந்நாட்டின் நடைமுறை தலைவி ஆங் சான் சூக்கியின் பேச்சாளரான சவ் ஹ்டாய் குறிப்பிட்டுள்ளார். 1990களின் ஆரம்பத்தில் ரொஹிங்கியர்கள் மியன்மாருக்கு திரும்பிய உடன்படிக்கையை அடிப்படையாகக் கொண்டே புதிய செயல்முறை பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த நிபந்தனைகளை பங்களாதேஷ் இன்னும் ஏற்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

“நாங்கள் இதனை ஆரம்பிக்க தயாராக இருக்கிறோம். ஆனால் மற்றைய தரப்பு இன்னும் இதனை ஏற்கவில்லை. இதனால் செயல்முறையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுவே உண்மையாகும்” என்று மாநில ஆலோசகர் அலுவலகத்தின் செயலாளர் நாயகம் சவ் ஹ்டாய் செவ்வாயன்று ஊடகவியலாளர்களிடம் குறிப்பிட்டார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கடந்த வாரம் மியன்மார் தலைநகர் நைபிடோவில் பங்களாதேஷ் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் அப்துஸ்ஸமான் கானினால் கைச்சாத்திடப்பட்டது. எனினும் பழைய உடன்படிக்கையை புதுப்பிப்பது குறித்து எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

எனினும் பங்களாதேஷுக்கு வெளிநாட்டில் இருந்து கிடைக்கும் சர்வதேச நிதியுதவி இந்த தாமதத்திற்கு காரணமாக சவ் ஹ்டாய் குறிப்பிடுகிறார்.

“தற்போது அவர்களுக்கு 400 மில்லியன் டொலர் நிதியுதவிக்கு ஆதாரம் கிடைத்துள்ளது. இது அகதிகளை திருப்பி அனுப்புவதில் தாமதத்தை ஏற்படுத்தும் என்று நாம் அஞ்சுகிறோம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் கடந்த வாரம் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் அமைச்சர் முன்வைத்த 10 விடயங்கள் குறித்து மியன்மார் உடன்படவில்லை என்று பங்களாதேஷ் அரசு கடந்த வியாழனன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியது. இதில் முன்னாள் ஐ.நா செயலாளர் நாயகம் கொபி அனான் தலைமையிலான ஆலோசனைக் குழு பரிந்துரைத்த விடயங்களை அமுல்படுத்த வேண்டும் என்று பங்களாதேஷ் விதித்த நிபந்தனையையும் மியன்மார் ஏற்க மறுத்துள்ளது.

ரொஹிங்கிய முஸ்லிம்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவது குறித்தே கொபி அனானின் அறிக்கை வலியுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இரு தரப்பும் இணைந்து கூட்டு செயற்பாட்டு குழு ஒன்றை அமைப்பதில் சிக்கல் இருப்பதாக கான் கடந்த வெள்ளிக்கிழமை கூறி இருந்தார். வெளியுறவு அமைச்சர் அபுல் ஹசன் மஹ்மூத் அலி வரும் நவம்பர் 30 ஆம் திகதி மியன்மார் விஜயம் மேற்கொண்டு இதனை செயற்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

தாம் மியன்மாரில் இதற்கு முன் வாழ்ந்ததை உறுதி செய்யும் ரொஹிங்கியர்களை நாட்டுக்குள் அனுமதிப்பதாக மியன்மார் அரசு கூறியிருந்தது.

பங்களாதேஷ் தரப்பிடம் இருந்து ரொஹிங்கிய அகதிகளின் பட்டியல் வரும் வரை காத்திருப்பதாக சவ் ஹ்டாய் குறிப்பிட்டார். 

1 comment:

  1. Fox crying once seen the international aids..Hoping to gain the benefits on the bloods of same people the killed and burnt...

    ReplyDelete

Powered by Blogger.