Header Ads



சீனாவின் தடையை மீறி, டிரம்ப் செய்த செயல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆசிய நாடுகளுக்கு 21 நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் நாடாக ஜப்பான் சென்ற அவர் அங்கிருந்து சீனா சென்றுள்ளார். 

மூன்று நாள் பயணமாக நேற்று சீனா சென்ற அதிபர் டிரம்ப் அந்நாட்டு தடையை தகர்த்து அங்கிருந்தபடியே டுவிட்டரில் தன்னை பின்தொடரும் 4.23 கோடி பயனர்களுக்காக தொடர்ந்து டுவிட் செய்துள்ளார்.  

தொடர்ச்சியாக டுவிட் செய்த அதிபர் டிரம்ப், என்னை வரவேற்ற சீனாவிற்கு மிக்க நன்றி, இதனை என்னால் மறக்கவே முடியாது என குறிப்பிட்டிருந்தார். சீனாவில் டுவிட்டர் உள்ளிட்ட உலகின் சில பிரபல சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிபர் டிரம்ப் அங்கிருந்து டுவிட் செய்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதுகுறித்த மூத்த அமெரிக்க அதிகாரி கூறும் போது, அதிபர் டிரம்ப் அவர் விரும்பும் நேரத்தில் எதை வேண்டுமானாலும் டுவிட் செய்வார் என தெரிவித்துள்ளார். டுவிட் மூலம் அமெரிக்க மக்களுடன் அதிபர் தொடர்பில் இருப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அதிபர் டிரம்ப் விமானத்தில் அவர் பயன்படுத்த பிரத்யேக வைபை இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இது மிகவும் பாதுகாப்பானது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

சீன குடிமக்கள் அரசியல் சார்ந்த தகவல்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தால் சிறை தண்டனை விதிக்கப்படும். அத்துடன், பல்வேறு செய்தி தளங்கள் மற்றும் வலைப்பக்கங்கள் நிரந்தரமாக தடை செய்யப்பட்டுள்ளன. 

அமெரிக்க அதிபர் பயன்படுத்த அதிக பாதுகாப்பு வசதி கொண்ட மொபைல் போன் வழங்கப்பட்டுள்ள நிலையில், ஆசிய சுற்றுப்பயணத்தின் முதல் நான்கு நாட்களில் மட்டும் பல டஜன் டுவிட்களை பதிவிட்டுள்ளார். 

அதிபர் டிரம்ப் டுவிட் செய்வதை அதிகம் விரும்புகிறார் என்பதை சீன அதிகாரிகள் நன்கு புரிந்து கொண்டுள்ளனர். எனினும் பீஜிங் நகரில் அதிபர் டிரம்ப் டுவிட் செய்ய முடியுமா என்ற கேள்விக்கு, 'வெளிநாட்டு தலைவர்களை வரவேற்கும் போது அனைத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும், அந்த வகையில் அதிபர் டிரம்ப் தகவல் பரிமாற்றத்தில் எவ்வித கட்டுப்பாடுகளையும் விதிக்க முடியாது.' என சீனாவின் துணை வெளியுறவு மந்திரி ஷெங் செக்குவாங் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.