Header Ads



ஒரே இரவில் செய்ய முடியாது, எந்த நாடும் சரியாக இல்லை - ஜெனீவாவில் ஹர்சா


மனித உரிமை கடப்பாடுகளை நிறைவேற்றும் பணிகளை ஒரே இரவில் செய்து விட முடியாது என்றும், உலகில் எந்தவொரு நாடும், இந்த விடயத்தில் சரியாகச் செயற்படும் நிலையில் இல்லை என்றும் சிறிலங்காவின் தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் ஹர்ஷஸ டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பூகோள காலமீளாய்வுக் கூட்டத்தொடரில், நேற்று நடந்த சிறிலங்கா பற்றிய மூன்றாவது மீளாய்வு அமர்வில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

“சிறிலங்காவில் மனித உரிமைகளை மீளமைப்பதற்கு அரசாங்கம் தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

எனினும், சிறிலங்கா போன்ற ஜனநாயக நாட்டில் மனித உரிமைகளை வேகமாக மீளமைக்க முடியாதுள்ளது.

உலகில் சவால்கள் இல்லாத நாடுகளே இல்லை. எந்தவொரு நாடுமே, சரியாகச் செயற்படும் நாடு அல்ல.

முழுமையான அர்ப்பணிப்புடன் இயங்கினாலும்கூட, மனித  உரிமைகளை உறுதிப்படுத்துவதும் அதைப் பாதுகாப்பதும் ஒரே நாளில் நடந்து விடக் கூடியது அல்ல.

மனித உரிமைகளை முழுமையாக அமுல்படுத்துவது குறித்த எமது முயற்சிகள் மீதான அனைத்துலகத்தினது விமர்சனங்களை வரவேற்கிறோம்.

எமது செயற்பாடுகள் குறித்துக் கலந்துரையாடவும் நாம் தயாராக உள்ளோம்.

ஆனால், எமது இந்த முயற்சியை அனைத்துலகத் தலையீடுகளின் மூலம் குழப்புவதற்குச் சில சக்திகள் இயங்குவதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

எனினும், மனித உரிமைகளை முழுமையாக நாட்டில் நடைமுறைப்படுத்துவதில் சிறிலங்கா அரசு முழுமனதுடன் உழைக்கும்.

மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல்கள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்களைப் பற்றிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளை, பாதுகாப்புப் படையினரை இலக்கு வைத்ததாக – எமது நாட்டிலுள்ள சிலர் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். இது துரதிருஷ்டவசமானது.   முற்றிலும் தவறானது.

பாதுகாப்பு படையினர் நியாயமற்ற முறையில் இலக்கு வைக்கப்படவோ, தண்டிக்கப்படவோமாட்டார்கள் என்று சிறிலங்கா அதிபர் அண்மையில் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

எனினும், சட்ட மீறல்கள் தொடர்பாக, நீதித்துறை செயல்முறைகளின் ஊடாக, விசாரணைகளை மேற்கொள்ள நாம் கடமைப்பட்டுள்ளோம்.

மீள நிகழாமையை உறுதிப்படுத்துவதற்காக, அரசியலமைப்பு மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு முன்னுரிமை அளித்துள்ளோம்.

ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட சிறிலங்கா தொடர்பான தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. இலங்கைக்கு எப்போதும் வெற்றிதான் - எங்கு சென்றாலும்.

    ReplyDelete

Powered by Blogger.