Header Ads



யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு வீடு வழங்குவது பற்றி, அரச அதிபரின் விளக்கம்

-பாறுக் ஷிஹான்-

யாழ்ப்பாணத்தில் வசிக்கும்  முஸ்லீம் மக்களிற்கு வீடு வழங்கும் விடயத்தில் மாவட்டத்தில் உள்ள  எந்த நிர்வாக அலகும் தடையாக இருக்கவில்லை . மாறாக  மீள்குடியேற்ற அமைச்சின் வீட்டுத்திட்டத்தில்   உள்ள நிபந்தனைகளே தடையாக உள்ளதென யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்  நா.வேதநாயகன்  தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள முஸ்லீம் மக்களின் மீள்குடியேற்றத்திற்கான வீட்டுத்திட்டத்தில் அதிகாரிகளின் திட்டமிட்ட செயலால் ஒதுக்கப்பட்ட வீடுகள் திரும்பும் நிலையில் உள்ளதாக முஸ்லீம் மக்கள் கடந்த வாரம் மாவட்டச் செயலகம் முன்பாக மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் கேட்டபோதே மாவட்டச் செயலாளர் இவ்வாறு  தெரிவித்தார்.

இது தொடர்பில் அரசாங்க அதிபர் தெரிவிக்கையில் 

யாழ்.  மாவட்டத்தில் முஸ்லீம் மக்களின் மீள்குடியேற்றத்திற்கோ அல்லது அவர்களிற்கான  வீட்டுத் திட்டத்திற்கோ மாவட்டத்தின் எந்த அரச நிர்வாகமும் எப்போதும் தடையாக இருக்கவில்லை. என்பதனை மாவட்ட அரசாங்க அதிபர்  என்ற வகையில் என்னால் உறுதியாக கூறமுடியும். ஆனாலும் அவர்களிற்கான வீடுகள் வழங்கும் விடயத்தில் பல தடைகள் நிபந்தனைகள் உள்ளமை உண்மையான விடயம்.

அந்த தடைகளை நிபந்தனைகளை மாவட்டத்தின் எந்த நிர்வாக அலகும் விதித்திருக்கவில்லை . மாறாக அவர்களிற்கான மீள்குடியேற்றச் செயலணியாலேயே அதாவது மீள்குடியேற்ற அமைச்சின் கீழ் உருவாக்கப்பட்ட  நீண்டகால இடப்பெயர்வில் பாதிக்கப்பட்டவர்களிற்கான வீட்டுத் திட்டத்திற்கான  அலகின் நிபந்தனைகள் சிலவே தடையாக உள்ளன. உண்மையில் இந்த அலகு உருவாக்கத்திற்கு முன்பு அதாவது  2016ம் ஆண்டில் மாவட்டத்திற்கு கிடைத்த வீட்டுத் திட்டத்தில்  யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பிரிவிற்குள்  200 வீடுகள் ஒதுக்கப்பட்டன.

அந்த 200 வீடுகளில் இருந்து  89 வீடுகள் முஸ்லீம் மக்களிற்கே வழங்கப்பட்டது. எனவே நாம் மாவட்டத்தில் தமிழ், முஸ்லீம், சிங்களம் என்ற பாகுபாட்டுடன்  பணியாற்றவில்லை. நீண்டகாலத்திற்கு முன்னர் இடம்பெயர்ந்தவர்ளாயினும் மாவட்டத்திற்கு திரும்ப வருகை தந்து மீள்குடியேறியதன் பின்பே அவர்களிற்கான வீடுகளை வழங்க முடியும். அவ்வாறு மீள்குடியேறியதன் பின்பும் நாட்டின் எப்பாகத்திலும் அரச உதவியில் வீட்டுத் திட்டம் பெறவில்லை என்பதையும் உறுதி செய்ய வேண்டும். இந்த நிபந்தனைகளாலேயே தமிழர்களில் வலி வடக்கில் 1990ம் ஆண்டு யூன் மாதம் 15 ம் திகதி இடம்பெயர்ந்து வவுனியா கொழும்பில் வாழும் ஆயிரக்கணக்கானோர் எம்மை அணுகி வீட்டை கட்டித் தாருங்கள் மீளக் குடியமர வருகின்றோம். எனக் கோருகின்றனர்.

ஆனாலும் நடைமுறையின் பிரகாரம் அவர்களிற்கும் வழங்க முடியாது. இவர்கள் அங்கு வாடகை வீடுகளிலேயே வாழ்கின்றபோதும் எமது மாவட்டத்திற்கு நிரந்தரமாக மீளக்குடியமரவில்லை என்பதனால் அவர்களிற்கான வீட்டுத்திட்டமும் எம்மால் நிராகரிக்கப்பட்டே உள்ளது. இதேநேரம் எமது மாவட்டத்திற்கு மட்டும் இன்னமும் 25 ஆயிரத்து 800 வீடுகள் தற்போதைய நிலவரத்தின் பிரகாரம் தேவையாகவுள்ளது.

எனவே எமக்கு விதிக்கப்பட்ட வரையறைக்குள் எந்தப் பாகுபாடும் இன்றியே செயல்கடுகின்றோம். அதேநேரம்,  இம் மக்கள் கோருவதுபோன்று அனைவருக்கும் வீடுகளை வழங்க முடியாமல் போடப்பட்டுள்ள நிபந்தனைகள் தொடர்பிலும் அமைச்சுடன் கலந்துரையாடுவதாகவும்  மேலும் தெரிவித்தார்

2 comments:

  1. அரச அதிபர் சொல்வது, வெறும் அறிக்கை மட்டுந்தான்.

    நடைமுறையில், முஸ்லிம்களுக்கு இனத்துவேஷம், பாரபட்சம் காட்டப்படுகிறது.

    இது, அங்கு வாழும் எல்லா முஸ்லிம்களுக்கும் தெரியும்.

    ReplyDelete

Powered by Blogger.