Header Ads



900 பில்லியன் ரூபா மோசடி, அம்பலப்படுத்தினார் கபீர்

ஹம்பாந்தோட்டையில் கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற பொதுநல விளையாட்டுப் போட்டிகளில் கிடைத்த 900 பில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்தார். இதை விசாரிப்பதற்கு தனியான விசாரணை ஆணைக்குழு அமைக்கப்படவேண்டுமென்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

வாய்மூல விடைக்காக ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைக் கூறினார்.

அமைச்சர் தொடர்ந்தும் பதிலளிக்கையில், பொதுநலவாய விளையாட்டு என்ற பெயரில் இலங்கை வங்கியில்  கணக்கொன்று பேணப்படவில்லை. சீ.டபிள்யூ.ஜீ.2018 பிரைவேட் லிமிட்டட் என்ற பெயரில் நடைமுறைக்கணக்கொன்றும், 11 மில்லியன் ரூபாவுடன் நிரந்தர வைப்பொன்றும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

2018 ஹம்பாந்தோட்டை பொதுநலவாய விளைாட்டுப் போட்டிக்கான கேள்விப்பத்திர செயற்பாடுகளுக்கான ஆவணங்களைத் தயாரித்தல் என்ற நோக்கத்துக்காக இந்தக் கணக்கு திறக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்தின் பணிப்பாளர் சபையில் ஜானக பிரியந்த குமார ரத்னாயக்க, கலாநிதி ராணி ஜயமகா, நளின் ஆட்டிக்கல, சிறிசேன லியனகம, கலாநிதி ஹொடகேவா, உதய ரஞ்சித் செனவிரட்ன, மகிந்தகுமார் பெர்னாந்து, நிசாந்த விக்ரமசிங்க ஆகியோரின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

குறித்த நிறுவனத்தின் நடைமுறைக்கணக்கு 2010-11-24ஆம் திகதி திறக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் உத்தரவுக்கு அமைய 2015-05-29ஆம் திகதி இந்தக் கணக்கு மூடப்பட்டுள்ளது. 2012-06-06ஆம் திகதி 11 மில்லியன் ரூபாவுக்கு நிலையான வைப்பு ஆரம்பிக்கப்பட்டபோதும் ஏழு நாட்கள் மாத்திரமே குறித்த வைப்பு பேணப்பட்டுள்ளது.

இந்தக் கணக்கில் பிரபலங்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து பணம் வைப்பிலிடப்பட்டுள்ளது.

டெலிகொம் நிறுவனத்திலிருந்து 7 மில்லியன் ரூபாய்களும், மொபிட்டல் நிறுவனத்திடமிருந்து 5 மில்லியன் ரூபாய்களும், கடற்படையின் விளையாட்டு நிதியத்திலிருந்து 2 இலட்சத்து 97 ஆயிரம் ரூபாய்களும், பீப்பிள்ஸ் மேர்ச்சன்ட் நிறுவனத்திடமிருந்து 5 மில்லியன் ரூபாய்களும், விளையாட்டு அமைச்சிலிருந்து ஒரு தடவை 10 மில்லியன் ரூபாய்களும், மற்றுமொருமுறை 100 மில்லியன் ரூபாய்களும், ஏற்றுமதி சபையிடமிருந்து 8 மில்லியன் ரூபாய்களும், ஜனாதிபதி நிதியத்திலிருந்து 15 மில்லியன்களும், மீண்டுமொருமுறை 5 மில்லியன்களும், மின்சார சபையிடமிருந்து 89 ஆயிரம் ரூபாவும், ஜனாதிபதி நிதியத்திலிருந்து மீண்டும் ஒருமுறை 25 மில்லியன் ரூபாய்களும் வழங்கப்பட்டுள்ளன. மொத்தமாக 190 பில்லியனுக்கும் அதிகமான அரசாங்கத்தின் நிதி இந்தக் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி பேர்ப்பச்சுவல் அசட் மனேஜ்மன்ட் என்ற நிறுவனத்திடமிருந்து 15 மில்லியன் ரூபாய் உள்ளடங்கலாக தனியார் நிறுவனங்களிடமிருந்து 700 மில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமான பணம் அதே கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளது.

எனினும், இவ்வாறு வைப்பிலிடப்பட்ட பணம் எவ்வாறு செலவிடப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல்கள் இல்லை. எனினும், முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் தலைமையிலான அதிகாரிகள் குழு நூறுக்கும் அதிகமான பெண்களைக் கூட்டிச் சென்று சென்கிட்ஸ் தீவில் களியாட்டங்களை நடத்தியிருந்தனர்.

இவ்வாறான நிலையில் பணம் செலவிடப்பட்ட முறை குறித்த தகவல்களை அறிவதாயின் விசாரணை ஆணைக்குழுவொன்றை அமைத்தே ஆராய வேண்டும் என்றும் கூறினார்.

No comments

Powered by Blogger.