Header Ads



ட்ரம்ப்புக்கு நடுவிரலைக் காட்டிய பெண்ணுக்கு, 70 ஆயிரம் டொலர் நிதியுதவி


அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு நடுவிரலை உயர்த்திக் காட்டிய பெண் அவரது பணியில் இருந்து நீக்கப்பட்டார். எனினும், அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், குழு நிதியிடல் மூலம் இணையதளம் ஒன்று சுமார் எழுபதாயிரம் டொலர்களைத் திரட்டிக் கொடுத்திருக்கிறது.

ட்ரம்ப் தனது காரில் சென்றுகொண்டிருந்தபோது சைக்கிளில் சென்றுகொண்டிருந்த ஜூலி ப்ரிஸ்க்மன் என்ற அந்த 50 வயதுப் பெண் ட்ரம்ப்பை அவமரியாதை செய்யும் விதமாக தனது நடுவிரலை உயர்த்திக் காட்டினார். இதை பத்திரிகையாளர் ஒருவர் படம் பிடித்துவிட அது வைரலானது.

இதையடுத்து, ஜூலி பணியாற்றிவந்த நிறுவனம் அவரை பணியில் இருந்து விலக்கியது. இதுபற்றித் தெரியவந்த இணையதள நிறுவனம் ஒன்று, ஜூலிக்கு ஆதரவளிக்கும் வகையில் நிதி திரட்டும் பணியை ஆரம்பித்தது.

இதில் கலந்துகொண்ட சுமார் மூவாயிரம் பேர், ஐந்து டொலர்கள் முதல் 250 டொலர்கள் வரை நிதியுதவி செய்தனர். கடந்த ஆறாம் திகதி முதல் இதுவரை எழுபதாயிரம் டொலர் சேர்ந்திருக்கிறது.

“இந்தத் தொகை முழுவதும் நேரடியாக ஜூலிக்கு வழங்கப்பட்டுவிட்டது. இந்தத் தருணத்தில் நான் ஜூலிக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். அவரது தைரிய குணம் மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு” என்று புகழ்ந்திருக்கிறார் அந்த இணையதள உரிமையாளர்!

No comments

Powered by Blogger.